காஞ்சீபுரம், பிப். 5: உலக புற்று நோய் தினத்தை முன்னிட்டு காஞ்சீபுரம் அறிஞர் அண்ணா நினைவு புற்று நோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் ஆகியவை சார்பில், புற்று நோய் விழிப்புணர்வு கண்காட்சி நடந்தது. மருத்துவமனை இயக்குனர் டாக்டர் பாலுடேவிட் தலைமை வகித்தார்.பெண் போலீசாருக்கான புற்றுநோய் முன் கண்டறியும் மருத்துவ பரிசோதனையை காஞ்சீபுரம் எஸ்.பி. பிரேம் ஆனந்த் சின்கா தொடங்கி வைத்தார். கண்காட்சியை சுகாதாரத்துறை செயலாளர் வி.கே. சுப்புராஜ் தொடங்கி வைத்து பேசியதாவது. இந்தியாவில் 30 வயதுக்கும் மேற்பட்ட பெண்களுக்கு மார்பக புற்று நோய் அதிகம் ஏற்படுகிறது. அவர்களுக்கு சிகிச்சை அளிக்க ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காஞ்சீபுரம் புற்று நோய் அரசு மருத்துவ மனையில் 300க்கும் மேற்பட்ட படுக்கைகள் உள்ளன.
இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் இருந்தும் புற்று நோய்க்கு சிகிச்சை பெற மக்கள் வருகின்றனர். இந்தியாவை பொறுத்தவரை ஆண்டுக்கு 10 லட்சம் பேர் புற்று நோயால் பாதிக்கப்படுகின்றனர்.இவர்களில் 6 லட்சம் பேர் நோய் முற்றிய நிலையிலேயே மருத்துவரிடம் வருகின்றனர்.
மார்பக புற்று நோய்க்கு ஆஸ்திரேலியாவில் மருந்து கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.அதன் விலை ரூ.3000-ம் தான். ஆனால் இந்த மருந்தை வாங்கி பயன்படுத்த மத்திய அரசு இன்னும் அனுமதி வழங்கவில்லை. அனுமதி கிடைத்தவுடன் பயன் பாட்டிற்கு வரும். மேலும் உணவகங்கள் மற்றும் நடமாடும் கடைகளில் பல முறை பயன்படுத்தக் கூடிய எண்ணெய்களை உபயோகிக்கின்றனர். இதன் மூலம் புற்று நோய் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. உடற் பயிற்சி செய்யும் பழக்கம் மக்களிடையே குறைந்து வருகிறது. தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment