Jan 24, 2011

DR.பினாயக்சென் விடுதலை குறித்து திரைப்பட துறையினர் பிரதமருக்கு கடிதம்.

புதுடெல்லி,ஜன.24:சத்தீஷ்கர் நீதிமன்றத்தால் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்ட பிரபல மருத்துவரும், மனித உரிமை ஆர்வலருமான பினாயக் சென்னின் விடுதலைத் தொடர்பாக பிரதமர் மன்மோகன்சிங் தலையிட வேண்டுமென வலியுறுத்தி திரைப்படத் துறையைச் சார்ந்தவர்கள் கடிதம் எழுதியுள்ளனர். அபர்ணா சென், ஷர்மிளா தாக்கூர்,முர்த்தஸா டேனிஷ் ஹுஸைன், கவ்ஹர் ராஸா கிரிஷ் கர்னாட், கவுதம் கோஷ், எம்.கே.ரெய்னா, சுதீர் மிஷ்ரா, ரப்பி ஷேர்கில், ருக்மிணி பாயா நாயர், பங்கஜ் மிஷ்ரா, மகேஷ் பட், ரஞ்சித் ஹோஸ்கோட்டே, ஜெர்ரி பிண்டோ, ராஹுல் போஸ், அசோக் வாஜ்பேயி, ஆன்ந்த் பட்வர்தன், ஆகியோர் இக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

பிரபல மனித உரிமை ஆர்வலரான டாக்டர்.பினாயக்சென் பலிகடாவாக்கப்பட்டு அநியாயமாக சிறையிலடைக்கப்பட்டதில் எங்களுக்கு கவலை உண்டு என அக்கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. சென்னின் மீது சுமத்தப்பட்ட தேசத்துரோகம், சதித்திட்டம் ஆகிய குற்றங்களும் அதன் அடிப்படையில் கடந்த டிசம்பர் 24-ஆம் தேதி வழங்கப்பட்ட நீதிமன்றத் தீர்ப்பும் நீதிக்கு விரோதமானதும், இந்தியாவில் போலீஸ் மற்றும் நீதித்துறையின் மீது அவநம்பிக்கையை ஏற்படுத்துவதுமாகும்.

சென் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடுச் செய்திருந்த போதிலும் வழக்கு நடவடிக்கைகள் நீளும் என்பதால் அவர் நீண்டகாலம் சிறையில் இருக்கவேண்டிய சூழல் ஏற்படும். இது அவருக்கு தண்டனை வழங்குவதற்கு சமமானதாகும். இந்தியாவில் அனைத்து மனித உரிமை ஆர்வலர்களுக்கும் ஒரு பாடத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற லட்சியத்தில் சட்டீஷ்கர் அரசு பினாயக் சென்னை பழிவாங்கும் நோக்கத்துடன் வேட்டையாடியுள்ளது.30 வருடங்களாக சத்தீஷ்கரில் ஏழை மக்கள் வாழும் பகுதிகளில் செயல்பட்டு வந்த சென்னின் மீதான நீதிமன்றத் தீர்ப்பைக் குறித்து பரிசோதிக்க பிரதமர் தலையிட வேண்டுமென திரைப்படத் துறையினர் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளனர்.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்.

No comments: