Jan 2, 2011

வெளிநாடுகளுக்கு அதிக அளவில் இடம் பெயரும் இந்திய டாக்டர்கள்.

புதுடில்லி: இந்திய டாக்டர்களும், நர்சுகளும் வேலைக்காக வெளிநாடுகளுக்கு செல்வது அதிகரித்துள்ளது என, சர்வ தேச புலம் பெயர்வு பற்றிய ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது. சர்வதேச புலம் பெயர்வு குறித்த, 2010 ம் ஆண்டிற்கான அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டது. அதில், இந்திய டாக்டர்கள் 55 ஆயிரத்து 794 பேரும், நர்சுகள் 23 ஆயிரம் பேரும் ஆஸ்திரேலியா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைக்காக சென்றுள்ளது தெரிய வந்துள்ளது. அதாவது, இந்திய டாக்டர்களில் 8 சதவீதம் பேரும், நர்சுகளில் 3 சதவீதம் பேரும் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளனர். மொசாம்பிக், அங்கோலா உள்ளிட்ட நாடுகளுடன் ஒப்பிடும்போது, இது மிகவும் குறைவாகும். மொசாம்பிக் நாட்டிலிருந்து 75 சதவீத டாக்டர்களும், அங்கோலா நாட்டிலிருந்து 70 சதவீத டாக்டர்களும் வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர்.

மிகக் குறைவான ஊதியம் மற்றும் அதிக வேலை பளு காரணமாகவே, இந்திய டாக்டர்களும், நர்சுகளும் அதிக அளவில் வெளி நாடுகளுக்குச் செல்கின்றனர். பெரும்பாலான நாடுகளில், டாக்டர்கள் மற்றும் நர்சுகள் பற்றாக்குறை உள்ளது. இது தொடர்பாக, உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்திய மக்கள் தொகையில் ஒரு லட்சம் பேருக்கு 70 டாக்டர்கள் உள்ளனர். பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளில் ஒரு லட்சம் பேருக்கு 20 மருத்துவர்கள் உள்ளனர். ஐரோப்பிய நாடுகளில் ஒரு லட்சம் பெருக்கு 310 டாக்டர்களும், அமெரிக்காவில் 240 டாக்டர்களும் உள்ளனர். இதே போன்று இந்தியாவில் ஒரு லட்சம் பேர்களுக்கு 80 நர்சுகள் உள்ளனர். சர்வ தேச நாடுகளில் 330 பேரும், பொருளாதாரத்தில் பின் தங்கிய நாடுகளில் 160 பேரும் உள்ளனர். மருத்துவ ஊழியர்களைப் பொருத்தவரை இந்தியாவில் ஒரு லட்சம் பேருக்கு 190 பேர் உள்ளனர். பிரிட்டனில் 750 பேரும், அமெரிக்காவில் ஆயிரத்து 250 பேரும் உள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: