![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg9TRN4bexb8vBhSY6lUAihQqK_B9Gg4r_iBGLvdDDEAJ3j5vrNHPdFLKYAYCgZqFAefHdxHuzOGUqn0MuE1170nrDyC7guSuNSAmHVeJHohLemhSnuBZGiq_YRPUthwqU0rsuq38cI3sw/s320/f22_09.jpg)
ரேடாரில் சிக்காத விமானம்: "ஸ்டெல்த்' விமானம் எனப்படும் அதிநவீன போர் விமானத்தின் உலோகம், பெயின்ட் உள்ளிட்டவற்றிலிருந்து எவ்வித கதிர்வீச்சுகளும் வெளிப்படாது. இதனால் விமானம் ரேடாரில் சிக்காது. இதன்மூலம் எதிரிகளின் ஏவுகணை கூட இதைத் தாக்க முடியாது. இது ஒலியை விட 4 மடங்கு வேகமாகச் செல்லும் திறனுடையது. சீனா தற்போது பரிசோதித்துள்ள விமானம் இந்த வகையைச் சேர்ந்ததுதான்.
உளவு விமான பரிசோதனை: சீனா வெற்றி: ராபர்ட் கேட்ஸ் - ஹூ ஜிண்டாவோ சந்திப்பிற்கு சில மணிநேரங்கள் முன்பாக, சீனாவின் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள "செங்டு' ராணுவ தளத்தில் இருந்து ஜே-20 ரக சிறிய விமானம் ஒன்று 15 நிமிடங்கள் வானில் பறந்தது. இதுகுறித்த செய்திகள் சீன இணையதளங்களில் வெளியானது. இதே விமானம், கடந்த வாரம், இதே விமான தளத்தில் ஓட்டப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டது.
இதுகுறித்து அமெரிக்காவில் இருந்து வெளியாகும் "வால்ஸ்ட்ரீட்' பத்திரிகை நேற்று முழுப்பக்க அளவில் செய்திகளை வெளியிட்டிருந்தது. அது தனது செய்தியில்,"இது உளவு விமானம் போலத் தெரிகிறது. இவ்விமானத்தை "ரேடார்' கருவிகளில் கண்டறிய முடியாது. இது சீனாவின் ஐந்தாவது தலைமுறை விமானம்' என்று நிபுணர்கள் கூறியுள்ளதாக எழுதியிருந்தது. இப்படி ஒரு விமானம் சீனாவிடம் இருக்கிறது என்று அமெரிக்கப் பாதுகாப்பு அமைச்சர் ராபர்ட் கேட்ஸ் உள்ளிட்ட அமெரிக்க அதிகாரிகள் முன்பே குறிப்பிட்டிருந்தனர்.
அதேநேரம், கடந்த வாரம் ஜப்பானியப் பத்திரிகை ஒன்றுக்குப் பேட்டியளித்திருந்த பசிபிக் பகுதிக்கான அமெரிக்க அதிகாரி அட்மிரல் ராபர்ட் வில்லார்ட், "சீனா, போர்க்கப்பலை தாக்கும் ஏவுகணையின் முதற்கட்ட பரிசோதனை முடிந்து விட்டது. தரைத்தளத்தில் இருந்து ஏவப்படும் இந்த ஏவுகணை, கடலில் உள்ள போர்க்கப்பலை அதிவேகமாக தாக்கும் திறன் உடையது. அமெரிக்காவின் மிகப் பெரிய போர்க்கப்பல்களைக் கூட தாக்கி அழிக்கக் கூடிய வல்லமை கொண்டது' என்று தெரிவித்திருந்தார். இதன் மூலம் அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் எதிர்பார்த்ததை விட சீனா தனது ராணுவத்தை மின்னல் வேகத்தில் நவீனப்படுத்தி வருவது உறுதியாகியுள்ளது.
No comments:
Post a Comment