Jan 11, 2011

ஆபாசம்!!! அதுதான் தேவாமிர்தம்!!! தினமணி ஆசிரியர்.

தினமணி ஆசிரியர் திருவாளர் வைத்தியநாதய்யர் அம்பத்தூரில் பேசிய ஓர் இலக்கியக் கூட்டத்தில் தேன் தடவிய நஞ்சுருண்டையை அருளியுள்ளார். கம்பன் என்ற ஒருவன் இல்லாமல் போயிருந்தால், அவனது சமய இலக்கியம் இல்லாமல் போயிருந்தால் தமிழ் என்றோ அழிந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுகிறது என்று ஒரு பொய்யை பேசி தனது பார்பன ஹிந்துவா நச்சு கருத்தை வெளிபடுத்தயுள்ளார். சமய இலக்கியம் இல்லாமல் போயிருந்தால் தமிழ் என்றோ அழிந்திருக்கும் என்ற தலைப்பில் அந்தச் செய்தி தினமணி யில் (3.1.2011) -- பக்கம்5) வெளியிடப்பட்டு உள்ளது.

இந்தக் கூற்று உண்மைதானா? அல்லது இலக்கியம் என்ற பெயரில் பார்ப்பனீயத்தை, ஹிந்துத்துவாவை தமிழ்மீது தமிழர்கள் மீது குதிரை சவாரி செய்விக்கும் ஏற்பாடா? சிந்தித்துப் பார்க்கப்பட வேண்டும். சமய இலக்கியங்கள் தமிழுக்கு நோயே தவிர, தமிழுக்கு ஆரோக்கிய மானதல்ல என்பதற்கு எத்தனையோ எடுத்துக்காட்டுகளை அலை அலையாக அடுக்கிச் சொல்ல முடியும். அதில் ஒரு சில....

திருவெம்பாவை காட்டும் ஒழுக்கம்: (1): காளமேகப் புலவர் வைணவப் பார்ப்பனர், குடந்தையில் பிறந்தவர், திருவரங்கம் பெரிய கோயிலில் மடைப் பள்ளியில் பூசைக்கு வேண்டிய பிரசாதம் தயாரிக்கும் வேலை செய்து வந்தார். அக்காலத்துத் திருவரங்கத்திற்கு அண்மையிலுள்ள திருவானைக்கா என்னும் சிவத்திருப்பதியில் மோகனாங்கி என்னும் பெயருடைய வேசி தொண்டு செய்து வந்தாள். மிக்க அழகி. அவளிடம் காளமேகப் புலவருக்குத் தொடர்பு உண்டாயிற்று. அவளுடன் கூடி சிற்றின்பத்தில் திளைக்கலானார். திருவானைக்கா திருப்பதியில் மார்கழி மாதத்தில் ஒருநாள் திரு வெம்பாவையை இசையுடன் ஓதினாள். பக்கத்தில் பல வேசியர்களும் கேட்டுக் கொண்டிருந்தனர். இப்பாட்டைக் கேட்ட மற்றைய வேசியர்கள் எங்கொங்கை நின்னன்பர் அல்லார் தோள் சேரற்க எனப் பாடி விட்டு, வைணவனோடு கூடிக் கலக்கிறாயே என இழித்துப் பேசினர். அவ்விழிச் சொல் மோகனாங்கியின் உள்ளத்தில் தைத்தது. அன்று இரவு காளமேகப் புலவர் தன் இல்லத்திற்கு வரும்போது உள்ளே வரவிடாமல் கதவைச் சாத்திக் கொண்டாள். உடனே புலவர் இவ்வளவு நாள் ஆதரித்த என்னை இப்போது ஏன் வெறுத்து ஒதுக்குகிறாய்? எனக் கேட்டார். அதற்கு அவள் வைணவனோடு நான் இனிச் சேரமாட்டேன் என்றாள். அதற்குப் புலவர் நானும் சைவனாகி விட்டால் என்னை ஏற்றுக் கொள்வாயா? என்றார். அதற்கு அவளும் சம்மதித்தாள். உடனே சிவன் கோயிலில் தீட்சை பெற்றுக் கொண்டு சைவராக மாறினார். மாணிக்கவாசகரின் திருவெம்பாவை காட்டும் ஒழுக்கம் இதுதானா?

கேவலம் சதைப் பசிக்காக மதம் மாறினான் என்பது பெருமைதானா? இப்படிப்பட்ட பக்தி இலக்கியம் சமய இலக்கியம் இல்லாது போயிருந்தால் தமிழ் அழிந்திருக்கும் என்று ஒரு அய்யர் கூறுவது எதன் அடிப்படையில்? ஆபாசங்களின் குப்பைகள் நிறைந்ததுதான் தமிழ் - _ அதுதான் தமிழுக்குப் பெருமை என்று கூறுவது நையாண்டி அல்லாமல் வேறு என்னவாம்?

திருவாய்மொழி காட்டும் ஒழுக்கம்?: (2): முத்தன்ன வெண்முறுவல் செவ்வாயும் முலையும் அழகழிந்தேன் நான்! புணர்வதோராசையினால் - என் கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதூகலித்து ஆவியை ஆகுலம் செய்யும் அங்குயிலே! கண்ணீர்கள் முலைக்கு வட்டில் துளி சோரச்சோர் வேனை காமத்தீயுள் புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல் ஏமத்தோர் தென்றலுக்கு இங்கிலக்காய் நானிருப்பேனே என்னாகத்திளங் கொங்கை விரும்பித்தாம் நாள்தோறும் பொன்னாகம் புல்குதற்கு எனப் புரிவுடைமை செப்புமினே! சொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்து ஓர் நந்நாள் தங்குமேல் என்னாவி தங்குமென்று உரையீரே! கொங்கைத் தலமிவை நோக்கிக் காணீர் கோவிந்தனுக்கல்லால் வாயில் போகா! கொங்கைக்கும் - செவ்வாயிற்கும் உறவு பற்றியது இது! இருக்கட்டும் , இதைக் கேளுங்கள்: - காமப்பாதையில் கண்ணன் நாமம் குற்றமற்ற முலை தன்னைக் குமரன் கோலப்பணைத் தாளோடு அற்றகுற்றமவை தீர அணைய அமுக்கிக் கட்டீரே!

மேற்கண்டவாறு ஆண்டாள் என்னும் ஒரு பெண் பக்தை பாடினாள் என்றால் இதுதான் பக்தி காட்டும் ஒழுக்கம் என்றால், ஒழுக்கம் என்பதற்கு என்ன பொருள் என்பதே கேள்விக்குறியாகி விடவில்லையா? கடவுளைப் புருஷனாக்கி அவனுடன் புணர வேண்டும் என்று துடிதுடிக்கும் கொக்கோகக் காட்சிதான் சமய இலக்கியமா? இந்தக் கேள்வியை ஆசிரியர் வைத்தியநாத அய்யர்வாளிடம் தான் கேட்டுத் தொலைய வேண்டும்.

திருவிளையாடற் புராணம் காட்டும் ஒழுக்கம்?: (3): அன்னையைப் புணர்ந்து தாதை குரவனாம் அந்த ணாளன் தன்னையும் கொன்ற பாவம் தணித்து வீடளித்த தென்றால் பின்னை நீ விழிநோய் குட்டம் பெருவயி றீளை வெப்பென்று இன்ன நோய் தீர்க்கும் தீர்த்தம் என்பதோ இதற்கு மேன்மை! (மாபாதகம் தீர்த்தபடலம் திருவிளையாடல் புராணம்) தாயைப் புணர்ந்து தந்தையைக் கொன்ற பார்ப்பனருக்கு சிவபெருமான் மோட்சம் அளித்தான் என்பதுதானே திருவிளையாடற் புராணம் என்னும் சமய இலக்கியம் காட்டும் நெறி? இது நெறியா காமவெறியா? காமத்துக்குக் கண்ணில்லை என்று கூறி, தாயைப் புணர்வதுவரை சென்று நியாயப்படுத் துவதுதான் சமய இலக்கியமா?

இந்தக் கேவலமான சமய இலக்கியம் தான் தமிழைச் சாக விடாமல் காப்பாற்றியதா? தினமணி ஆசிரியர் வைத்தியநாதய்யரின் யோக்கியதைக்கு இதுவும் நல்லதோர் எடுத்துக்காட்டுதானோ!

திருஞானசம்பந்தன் காட்டும் ஒழுக்கம்: (4): மண்ணகத்திலும் வானிலும் எங்குமாய்த் திண்ணகத் திருவால வாயருள் பெண்ணகத் தெழில் சாக்கியர் பேயமண் பெண்ணர் கற்பழிக்கத் திருவுள்ளமே! மதுரையில் இருக்கும் சிவனை திருஞானசம்பந்தன் யாதுகேட்டு வேண்டுகிறான்? பவுத்த, சமணர் வீட்டு அழகிய பெண்களைக் கற்பழிக்க அருள் புரியவாயாக என்று வேண்டுவதுதான் சமய இலக்கியம் காட்டும் நெறி என்பதை திருவாளர் வைத்தியநாதய்யர் ஒப்புக் கொண்டுதானே ஆக வேண்டும்?

பார்ப்பனர்களுக்கு ஒழுக்கம் என்பது ஒரு பொருட்டல்லதான்; அதற்காக அதனைத் தமிழர்கள்மீது ஏற்றிச் சுமக்க வைக்க வேண்டுமா?

அங்கமோ ராறும் அரு மறை நான்கும் அருள் செய்து பொங்கு வெண்ணூலும் பொடி யணி மார்பிற் பொலிவித்து சிவபெருமானைப் பாட வந்த திருஞானசம்பந்தன், சிவன் பூணூல் அணிந்திருப்பதாகக் கூறுவது எதன் அடிப்படையில்? நான் சேர்ந்த பார்ப்பனக் குலத்தைச் சேர்ந்தவன்தான் நான் பூசிக்கும் கடவுள் சிவன் என்று சொல்லுவது ஜாதி உணர்வு அல்லாமல் வேறு என்னவாம்? கடவுளையே ஜாதிக்குள் அடைக்கும் கீழ்மைப் புத்தியைத்தானே தேவாரம் என்னும் சமய இலக்கியம் பறைசாற்றுகிறது?

புத்தன் எங்கே? பார்ப்பனர்கள் எங்கே?: திருவிளையாடல் புராணத்தில் சமணர்களைக் கழுவேற்றிய படலம் என்ற ஒன்றே இருக்கிறது. திருஞான சம்பந்தன் வாதில் தோற்றவர்களைக் கழுவில் ஏற்றுக் கொன்றானாம். அதே நேரத்தில் கவுதமப் புத்தரின் கவுரவமான நன்முறைகளை ஒரே ஒரு முறை யாரும் எண்ணிப் பார்க்கட்டுமே! இதனை நாம் சொல்லுவதைவிட இந்து மதத்தை அமெரிக்கா வரை சென்று ஏற்றுமதி செய்து வந்த விவேகானந்தர் சொல்லுவதுதான் மிகப் பொருத்தமாக இருக்கும்.

விவேகானந்தர்: சங்கரருடைய புத்தி நாவிதன் கத்தியைப்போல மிகவும் கூர்மையாய் இருந்தது; அவர் வாதம் புரிவதில் வல்லவர்; மஹா பண்டிதர்; அதில் அய்ய மில்லை. என்றாலும், அவரிடத்தில் அகன்ற நோக்கமில்லை; அவருடைய இதயமும் அத்தகைய தாகவே காணப்பட்டது. மேலும், அவர் தமது பிராம்மணத்துவத்தில் பெருமை பாராட்டுபவர். வாதத்திலே தோல்வியடைந்த எத்தனையோ புத்த சந்நியாசிகளை நெருப்புக்கு இரையாக்கின அவருடைய இதயத்தை என்னவென்று சொல்வது! சங்கரர் இந்தச் செய்கையைச் செய்தது மூடப் பிடிவாதமன்றி வேறு என்ன? சிறு ஆட்டுக் குட்டியினுடைய உயிரைக் காப்பாற்றத் தமது உயிரைக் கொடுக்கச் சித்தமாயிருந்தார் புத்தர்; பஹுஜன ஹிதாய பஹுஜன ஸூகாய பலருடைய இதத்திற்காகவும் பலருடைய நலத்திற்காகவும் வாழ்ந்தார் புத்தர் எவ்வளவு அகன்ற சிந்தை! எவ்வளவு இரக்கம்!

புத்தர் காலத்தில் எத்தனை மடங்கள், எத்தனை பாடசாலைகள், கலாசாலைகள், வைத்தியசாலைகள், விலங்குக்குச் சிகிச்சை புரியும் சாலைகள் ஏற்பட்டன. சிற்பம் எவ்வளவு சிறந்து விளங்கியது! புத்த தேவருடைய வருகைக்கு முன் இந்த நாட்டில் என்ன இருந்தது? ஓலைச் சுவடிகளிலே எழுதப்பட்டு ஒரு சிலரால் மாத்திரம் அறியப்பட்டிருந்த சமய உண்மைகள் சில இருந்தன. புத்தர் அவற்றைத் தம் வாழ்க்கையில் மெய்ப்பித்து, மக்களுடைய வாழ்க்கையிலே அவற்றைப் பயன் படுத்தும் நெறிகளைக் காட்டினார்.
(சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள் நூல்- பக்கம் 81-82)

சமய இலக்கியங்களின் சித்தத்தை விவேகானந்தரே எடுத்து விளக்கிய பிறகு நாம் கூற என்ன இருக்கிறது? தங்களுக்கு வசதிப்பட்டபோது விவேகானந்தரைத் தோளில் தூக்கிப் பாடும் வைத்தியநாத அய்யர்கள் இதுபோன்ற இடங்களில் மவுன விரதம் பூண்டு விடுவார்கள் -_ அதுதான் பார்ப்பனீயம் என்பது!

குற்றாலக் குறவஞ்சி பாடல் காட்டும் நெ(வெ)றி பொருள்: அடியார்கள் காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி வழுத்தும் சிவபெருமானின் திருநீற்றை அணி யாதவர்களின் கைந்நரம்பினை எடுத்துக் கின்னரம் என்ற இனிய யாழில் தொடுத்து, நீறில்லா நெற்றியினையுடைய தீவினையாளர்களுடைய (பாவிகளுடைய) தோலினால் செய்யப்பட்ட தவிலினை அடித்துப் பறவைகளைப் பிடிக்கின்ற குறவனும் நானே என்று பாடப்பட்டுள்ளது.

திருநீறு பூசாதவர்களை எப்படி எப்படியெல்லாம் வன்முறைக்கு ஆட்படுத்த வேண்டும் என்று கூறுகிற குற்றாலக் குறவஞ்சிகூட சமய இலக்கியம்தானே! இதுதான் சமயம் காட்டும் நெறியா? அல்லது வெறியா?இதனைப் பள்ளிப் பாடத்தில்கூட வைத்தனர் என்பது எவ்வளவுப் பெரிய விபரீதம்? சமயம் காட்டும் இந்த வன்முறை இலக்கியம் இல்லாதொழியின் தமிழ் செத்து ஒழிந்து விடுமாம் -_ சொல்லுகிறார் தினமணியார்.

கம்பன் படம் பிடிக்கும் ஒழுக்கம்: அனுமனை இராவணனிடம் அகப் பட்ட சீதையிடம் தூது அனுப்புகிறான் இராமன். தன் மனைவி சீதை எப்படி எப்படியெல்லாம் இருப்பாள்? அவளை அடையாளம் கண்டுபிடிப்பது எப்படி என்பதுபற்றி இராமன், தூது செல்லும் குரங்காகிய அனுமனிடம் கம்பன் கூறும் காட்சி இதோ:

வாராழிக் கலசக் கொங்கை வஞ்சிபோல் மருங்குலாள் தன் தாராழிக்கலைசார் அல்குல் தடங் கடற்கு உவமை தக்கோய் பாராழி பிடரில் தங்கும், பாந்தமும் பணி வென்றோங்கும் ஓராழித் தேரும் கண்ட உனக்கு நான் உரைப்பதென்ன? இராமபிரான் சொல்கிறார் அனுமானிடம். தக்கவனே, என் மனைவி சீதை இருக்கிறாளே, அவளுடைய கொங்கைகள் கலசம் போன்றன! அல்குலோ, தடங்கடற்கு உவமை என்று.

உலகிலே உள்ள, எந்தப் பித்தனும் வெறியனுங்கூடத் தன் மனைவியின் கொங்கையையும் மறைவிடத்தையும், வேறொருவனிடம் வர்ணிக்கமாட்டான். அங்ஙனம் வர்ணிக்கும் கதாநாயகனை எந்த நாட்டு இலக்கியத்திலும் எந்தக் கவியும் சித்திரிக்கவில்லை. ஹோமர் முதற் கொண்டு பெர்னாட்ஷா வரையிலே எடுத்துப் பாருங்கள்! மதனகாமராஜன் கதை முதற்கொண்டு மன்மத விஜயம் என்பன போன்ற காமக்கூத்து ஏடுகளையும்கூடப் பாருங்கள் என்று கூறுகிறார் அறிஞர் அண்ணா.

(நூல் கம்பரசம்) : சீதையின் உள் உறுப்புகளைக் கண்டுபிடிக்கும் வேலையை பிரம்மச்சாரியாகிய அனுமனிடம் ஒப்படைக்கிறான் கணவனாகிய இராமன்! என்னதான் கற்பனைவளம், இலக்கிய ரசனை என்றாலும் இப்படியா?

இதுதான் சமய இலக்கியமா? இது தான் நல்லொழுக்கம் காட்டும் மார்க்கமா? ஆனால் தினமணி ஆசிரியர் கூறுகிறார். கம்பன் என்ற ஒருவன் இல்லாமல் போயிருந்தால் அல்லது அவரது சமய இலக்கியம் இல்லாமல் போயிருந்தால் தமிழ் என்றோ அழிந்திருக்கும் என்று பசப்புகிறார்.

ஆபாசமும், தீயொழுக்கமும் பார்ப்பனர் பண்பாடு என்ற நாணயத்தின் இரு பக்கங்கள். இந்த இரண்டும் அற்று ஒழிந்த இலக்கியத்தையோ, வழி காட்டுதலையோ பார்ப்பனர்களி டமிருந்து பெறவே முடியாது. கோயில் கோபுரங்களிலும் தேர்களிலும் செதுக்கி வைக்கப்பட்டுள்ள ஆபாசக் களஞ்சியங்களே இதற்குப் போதுமான எடுத்துக்காட்டு. இந்த அழுக்குச் சேற்றை தமிழ் இலக்கியங்களிலும் அப்பி அதன் முகத்தையே அருவருப்பானதாக ஆக்கி விட்டார்களே!

பக்தியின் பெயரால் எப்படி மக்களின் அறிவையும் பொருளையும் சுரண்டிக் கொழுத்தார்களோ, அதுபோலவே இலக்கிய ரசனை என்ற தேனைத் தடவி அதற்குள் ஆபாசத்தையும், அயோக்கியத்தனத்தையும் திணித்து, கடவுள்களே ஆபாச லீலைகளைச் செய்தன என்று இதமாக எடுத்துச் சொல்லி, நம் மக்களைக் சாக்கடையில் உருட்டி விட்டனர். தமிழ் இலக்கியங்களை அருவருப்பான அநாகரிகக் குட்டைக்குள் மூழ்கச் செய்தனரே! அருவருப்பை அற்புதம் என்றனர்; ஆபாசத்தை அடேயப்பா தேவாமிர்தம்! என்றனர். அறியாமையை அடுத்த மோட்ச லோகத்திற்கு அழைத்துச் செல்லும் அனுமதிச் சீட்டு என்று ஆர்ப்பரித்தனர்.

நன்றி: விடுதலை இதழ்.

1 comment:

எம்.ஞானசேகரன் said...

அருமையான விளக்கங்கள்!