Jan 13, 2011

சிறுவகை தானியங்களும், அதன் பலன்களும்!!!


மலைப்பகுதிகளில் தானாக வளரக்கூடிய இப்பயிர்களில் கிடைக்கும் சத்து மிக உறுதியான உடலமைப்பை தந்து, உழைக்கும் மக்களின் உறுதியை பலப்படுத்தும் உணவாகத் திகழ்ந்து வந்தது. சோளம், கம்பு, கேழ்வரகு, திணை, சாமை, குதிரைவாலி, வரகு, பனிவரகு என்பன சிறுதானியங்களாகும். இச்சிறு தானியங்கள் அதிக நார்ச்சத்து கொண்டவையாகவும் எளிதில் செரிமானம் அடையக்கூடியதுமாகும். இவ்வகை சிறுதானியங்களில் குறைந்தளவே குளுகோஸ் இருப்பதால் இவை மனிதனை சர்க்கரை நோயிலிருந்து காப்பாற்றக் கூடியவை.

இச்சிறுதானியங்கள் அதிகளவு தாதுப் பொருட்களான இரும்பு, மெக்னிசியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளன. இத்தானியங்களில் பி வைட்டமின் மற்றும் நைசின் போலிக் ஆசிட் உள்ளிட்ட அமினோ அமிலங்களும் உள்ளன. மேலும், இவை அதிகளவில் உட்கொள்ளும் போது விரைவில் செரிமானமடைவதுடன் மற்ற சத்துக்களையும் உடம்புக்குத் தேவையான அளவில் மாற்றித்தரக்கூடிய சக்தியையும் கொண்டுள்ளன. மேலும், இவை அதிக நார்சத்து கொண்டுள்ளன. இதனால் இவை இரைப்பை புழுவைத் தடுத்து மலச்சிக்கலை தவிர்க்கும் தன்மை கொண்டவை. மேலும், மக்காட்சோளத்தில் சப்டூஆலிக் அமிலம் மற்றும் சிட்ரிக் அமிலம் அதிகமாக உள்ளது. இது உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்தக்குழாய் நோயை குணப்படுத்தும் வல்லமை படைத்தது.

கேழ்வரகு: இந்தியாவில் விளையும் சிறுதானியத்தில் 25 சதவீதம் கேழ்வரகு ஆகும். அரிசி மற்றும் கோதுமையை விட அதிகளவு ஊட்டசத்து நிறைந்தது இதுவாகும். இதை ஆங்கிலத்தில் பிங்கர் மில்லட் என்றும், தமிழில் கிராமங்களில் இப்பயிர் இன்றைக்கும் கேப்பை என்றே அழைக்கப்படுகிறது. இப்பயிர் சுமார் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்தியாவில் புழக்கத்தில் உள்ளது.

சத்துக்கள்: கேப்பை என்றழைக்கப்படும் 100 கிராம் கேழ்வரகில் 7.3கி புரதம், 1.3கிராம் கொழுப்பு, 3.9 கிராம் இரும்புச்சத்து, 3.6 கிராம் நார்ச்சத்து, 344 மில்லி கிராம் கால்சியம், 203மில்லிகிராம் பாஸ்பரஸ், 420 மில்லி கிராம் தய்மின், 72 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளன. இதுதவிர பிகரேட்டின் (42மிகி), நயசின் (1.1மிகி), ரிபோப்ளேவின் (1.1மிகி) போன்ற சிறிய ஊட்டச்சத்துக்களும், அமினோ அமிலங்களும் நிறைந்துள்ளன. இதே நேரத்தில் அரிசி மற்றும் கோதுமையில் முறையே .06 மற்றும் 1.5 கிராம் இரும்புச்சத்துக்கள் மட்டுமே உள்ளன. அதுபோலவே நாம் அதிகமாக உட்கொள்ளும் அரிசி மற்றும் கோதுமையில் முறையே .02 மற்றும் 1.2 கிராம் நார் சத்துக்கள் மட்டுமே உள்ளன. அதுபோன்றே கால்சியம் .045 மற்றும் .041 மில்லி கிராம் மட்டுமே அரிசி மற்றும் கோதுமைகளில் கிடைக்கிறது. எனவே, தான் ராகியை பழங்காலந்தொட்டு முளைக்கட்டி சிறுகுழந்தைகளுக்கு வழங்கும் வழக்கம் நமது நாட்டில் கிராமங்களில் நடைமுறையில் உள்ளது. இதுபோன்று ஊட்டச்சத்து மிக்க தானியங்களை உட்கொண்டதாலேயே நமது முன்னோர்கள் வலிமையுடையவர்களாகவும், நல்ல திடகாத்திரமானவர்களாகவும், உடலுழைப்பாளிகளாகவும் திகழ்ந்து வந்துள்ளனர்.

இதுபோலவே சிறுதானியங்களான திணை (8 கிராம்), சாமை (7.6 கிராம்), பனிவரகு (7.2கி), வரகு (9கி), குதிரைவாலி (9.8கி) ஆகியவை அரிசியைக் (.02கி) காட்டிலும் எட்டு மடங்கு அதிகமான நார்ச்சத்தினைக் கொண்டுள்ளன. அதேபோன்றே தாதுப்பொருட்களையும் அதிகளவில் கொண்டுள்ளன. திணையை உட்கொண்டால் இது இரைப்பையிலுள்ள ஈரம் நீக்குவதற்கு உதவும். எனவே தான் மலைகளில் வாழக்கூடிய பழங்குடி இன மக்கள் தேனும் திணை மாவும் தங்களுடைய முக்கிய உணவுப் பொருளாக உட்கொண்டு வந்துள்ளனர். இவ்வளவு மிகுதியான சத்துக்களைக் கொண்ட இப்பயிர்கள் குறைந்த காலத்தில் விளைச்சலைத் தரக் கூடியவையாகவும், குறைந்தளவிலான தண்ணீருடன் அதிகளவு வறட்சியைத் தாங்கி வளரக்கூடியவையாகவும் உள்ளன.

1 comment:

veera balu said...

thaniyangal tharum palanai ungalal therinthukonden nandri .valthukkal