Jan 23, 2011

எழுத்தாளர், சிந்தனையாளர் திரு.பாரதி கிருஷ்ணா குமார் பஹ்ரைன்னில் சிறப்புரை.


பஹ்ரைன்,ஜன.23: பஹ்ரைன் வருகை தந்த தமிழக NCHRO (தேசிய மனித உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பு )ன் துணைத்தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான திரு.M.G.K.நிஜாமுதீன் மற்றும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பிரபல எழுத்தாளர் திரு.பாரதி கிருஷ்ணகுமார் அவர்களையும் வரவேற்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்றை பஹ்ரைன் இந்தியா ஃபிரட்டேர்னிட்டி ஃபோரம் (BIFF)-தமிழ்நாடு பிரிவு கடந்த 15-ம் தேதி அன்று இரவு 8 மணி அளவில் BIFF அரங்கத்தில் வைத்து நடத்தியது. இந்தியா ஃபிரட்டேர்னிட்டி ஃபோரம் என்பது ஜாதி , மத ,மொழி பேதமின்றி பஹ்ரைன் வாழ் இந்திய மக்களுக்காக சேவை செய்து வரும் ஒரு அமைப்பு.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பிரபல எழுத்தாளரும், ஆவணப்பட மற்றும் குறும்பட தயாரிப்பாளரும், பாபரி மஸ்ஜித் விஷயத்தில் கடந்த 20 வருடங்களாக முஸ்லிம்களுக்காக குரல் கொடுத்துக் கொண்டிருக்கக் கூடியவருமான மனித உரிமை போராளி திரு.பாரதி கிருஷ்ணா குமார் அவர்கள் தனது உரையில் இந்துத்துவவாதிகள் ஆட்சியில் இல்லை என்றாலும் இந்துத்துவம் இன்னும் ஆட்சிப் பீடத்தில் தான் இருக்கின்றது என்றும் இந்தியாவில் பா.ஜ.க ஆட்சியில் இல்லாவிடினும் தாழ்த்தப்பட்டோருக்கும் இஸ்லாமியர்களுக்கும் எதிரான ஃபாசிச மனோபாவம்தான் அரசின் எல்லா துறைகளிலும் ஆட்சியில் இருக்கின்றது என்றார். இந்துத்துவ சக்திகள் சாதாரண குடிமகன்களின் எண்ணங்களுக்கு விலங்கிட்டு விட்டு, கேடிகளுக்கு ஆட்சி அதிகாரத்தையும், சாதாரண குடிமக்களை எவ்வாறு இஸ்லாமியர்களுக்கு எதிராக திருப்பும் திட்டத்தோடு செயல்படுகிறது என்பதையும் விளக்கினார்.

சினிமாவிலும், அரசியலிலும் தேசப்பற்றை பற்றி பேசும் அனைவரும் தேசியவாதியுமல்ல; அரசியலில் இஸ்லாமியர்களின் நண்பர்களாக காட்டிகொள்ளும் அனைவரும் நண்பருமல்ல என்ற விழிப்புணர்வை இஸ்லாமியர்கள் அடைய வேண்டும் என்றார். மேலும் இந்துத்துவவாதிகள் தேசியக் கொடியை ஏந்தி வரும் முஸ்லிம்களை கண்டு பயப்படுவதை பற்றியும் இந்த தேசத்தை பீடித்துள்ள இந்துத்துவவம் என்ற நோயை விரட்ட அறிவு ரீதியான யுத்தத்திற்கு முஸ்லிம்கள் தயாராக வேண்டும் என்று கூறினார்.

சிறப்புரையாற்றிய NCHRO (தேசிய மனித உரிமை இயக்கங்களின் கூட்டமைப்பு)ன் தமிழக துணைத் தலைவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சகோதரர் M .G .K .நிஜாமுதீன் அவர்கள், இந்துத்துவ சக்திகள் இஸ்லாமியர்களை தீவிரவாதி என்ற ஒற்றை வார்த்தைகளை கொண்டு பின்னடைய செய்கிறார்கள் என்றார். இஸ்லாமியர்களிடையே உள்ள அறியாமையை ஆணித்தரமாக சாடிய அவர் பத்திரிகை மற்றும் அரசியலில் இஸ்லாமியர்கள் சாதிக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தினார்.

இந்திய முஸ்லிம்கள் பின்தங்கி உள்ளமைக்கு காரணம் அறியாமையும், பரந்த சிந்தனை இல்லாமையும் , பரந்த தொடர்பில்லாமையும் தான் என்றும் முஸ்லிம்களைக் காட்டிலும் குறைவான சதவீதம் உள்ள பிற சமுதாயத்தவர்கள் எல்லா உரிமைகளும் பெற்று வாழும் போது முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்படுவதற்கு காரணம் முஸ்லிம்களிடம் உள்ள ஒற்றுமையின்மைதான் என்றும் முஸ்லிம்கள் எல்லா சமூகத்துடனும் பரந்த தொடர்பு உள்ளவர்களாக இருக்க வேண்டும் என உரையாற்றினார்.

No comments: