Dec 22, 2010

498 ரன்கள் எடுத்து அர்மான் சாதனை!

மும்பை : சச்சின் போன்ற மகத்தான வீரர்களை உருவாக்கிய மும்பை மண்ணில் இருந்து இன்னொரு சாதனையாளராக 13 வயதான அர்மான் ஜாபர் உருவெடுத்துள்ளார். இவர் பள்ளி அளவிலான போட்டியில் 498 ரன்கள் விளாசி புதிய சாதனை படைத்துள்ளார்.

மும்பையில் கைல்ஸ் ஷீல்டு லீக் கிரிக்கெட் போட்டி(14 வயதுக்குட்பட்ட) நடக்கிறது. இதில், பந்த்ரா ரிஸ்வி ஸ்பிரிங்பீல்டு மற்றும் ராஜா சிவாஜி பள்ளிகள் மோதின. ஸ்பிரிங்பீல்டு பள்ளிக்காக விளையாடிய அர்மான் "சூப்பராக' பேட் செய்தார். மொத்தம் 77 பவுண்டரிகள் அடித்த இவர் 490 பந்துகளில் 498 ரன்களை குவித்தார். இதன் மூலம் பள்ளி அளவிலான போட்டிகளில் அதிக ரன் எடுத்து சாதனை படைத்தார். இதற்கு முன் ராஜா சிவாஜி பள்ளியின் பரிக்ஷத் வல்சங்கர் 366 ரன்கள் எடுத்திருந்தார். தவிர, கடந்த ஆண்டு ஹாரிஸ் ஷீல்டு பள்ளிகளுக்கு இடையிலான போட்டியில்(16 வயதுக்கு உட்பட்ட) அதிக ரன் எடுத்த சர்பராஸ் கான்(439) சாதனையையும் தகர்த்தார். அர்மான் இன்னும் 2 ரன்கள் எடுத்திருந்தால் 500 ரன்களை எட்டியிருக்கலாம். ஆனால் 498 ரன்களில் அவுட்டாகி விட்டார். இதையடுத்து ரிஸ்வி பள்ளி 8 விக்கெட்டுக்கு 800 ரன்களுக்கு "டிக்ளேர்' செய்தது.

இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரும் மும்பை ரஞ்சி அணியின் கேப்டனுமான வாசிம் ஜாபரின் உறவினர் தான் அர்மான். தனது சாதனை குறித்து அர்மான் கூறுகையில்,""பள்ளி அளவிலான போட்டிகளில் காம்ப்ளியுடன் சேர்ந்து 664 ரன்கள் சேர்த்த சச்சின் தான் எனது "ரோல் மாடல்'. எனது உறவினர் வாசிம் ஜாபர் அவ்வப்போது பயிற்சி அளிப்பார். நான் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் விளையாடவில்லை. நீண்ட நேரம் பேட் செய்ய வேண்டும் என்பதே எனது இலக்காக இருந்தது. 500 ரன்களை எட்ட தவறியது ஏமாற்றம் அளித்தது,''என்றார்.

No comments: