சபரி மலையின் மகரஜோதி என்பது தானே எரிவது அல்ல, அது கோயில் ஊழியர்களால் கொளுத்தப்படுவதுதான்” என்று ஐயப்பன் கோயில் தலைமைப் பூசாரியின் குடும்பத்தைச் சேர்ந்த ராமன் நாயர் சமீபத்தில் ஒரு பேட்டியில் தெரிவித்தார். இதனை ஒட்டி பதில் சொல்லியாக வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டார் கோயிலின் தலைமைத் தந்திரி கண்டரரு மகேஸ்வரரு. அவர் சார்பில் அறிக்கை வெளியிட்ட அவரது பேரனும் கோயில் தந்திரியுமான ராகுல் ஈஸ்வர், “வனத்துறை அதிகாரிகளும், தேவசுவம் போர்டு (அறநிலையத்துறை) அதிகாரிகளும், போலீசும் கூட்டாகச் சேர்ந்து கொளுத்தும் தீப்பந்தம்தான் மகரவிளக்கு” என்ற உண்மையை ஒப்புக் கொண்டிருக்கிறார்.
‘இந்த அளவுக்கு குட்டு உடைந்த பிறகும் மார்க்சிஸ்டு அரசு மகரஜோதியைக் கொளுத்துமா?’ என்ற கேள்விக்கு “சபரிமலையில் மகரவிளக்கு வெளிச்சம் எப்படி உருவாகிறது என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும். ஆனால் பக்தர்களின் நம்பிக்கைக்கு எதிராக அரசு எந்த நடவடிக்கையிலும் ஈடுபடாது” என்று பதிலளித்திருக்கிறார் மார்க்சிஸ்டு முதல்வர் அச்சுதானந்தன். யாரை யார் விசாரிப்பது? பந்தம் பிடிப்பவனை பற்ற வைப்பவன் விசாரிப்பதா? “தீவட்டியைத் தொடர்ந்து கொளுத்துவோம். தீவட்டிக் கொள்ளையைத் தொடர்ந்து நடத்துவோம்” என்பதுதான் அச்சுதானந்தனுடைய கூற்றின் பொருள்.
மகரஜோதி அம்பலமாவது இது முதல் முறையல்ல. பந்தம் கொளுத்திய மின்வாரிய ஊழியர்களைப் பிடித்துக் கொண்டு வந்தார்கள் கேரள மாநில பகுத்தறிவாளர் சங்கத்தினர். “அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா, அரசாங்க வருமானத்துக்கு ஆப்பு வைக்காதீங்கப்பா” என்று அன்பு வேண்டுகோள் விடுத்து அன்று பகுத்தறிவாளர்களை அமுக்கினார் அந்நாள் மார்க்சிஸ்டு முதல்வர் ஈ.கே. நாயனார்.
கோயில் தந்திரி கண்டரரு மோகனரு, தனது லீலாவிநோதங்கள் மூலம் ஐயப்பன் மகிமையைக் கந்தலாக்கியது தனிக்கதை. அவருக்கு வேதம், மந்திரம் போன்ற வெங்காயம் எதுவும் தெரியாதென்பதும் விலைமாதர் வீட்டு முகவரிகள் மட்டுமே தெரியும் என்பதும் அவரிடம் நடந்த விசாரணையில் அம்பலமானது. இப்போது தலைமைத் தந்திரியின் ஒப்புதல் வாக்குமூலம் வந்திருக்கிறது.தெற்கே தீவட்டி பிசினஸ்; வடக்கே பனிக்கட்டி பிசினஸ். காஷ்மீரில் அமர்நாத் எனுமிடத்தில் குளிர்காலத்தில் ஒரு குகைக்குள்ளே பெரிய ‘குச்சி ஐஸ்’ வடிவத்தில் உருவாகும் பனிக்கட்டியைத் தரிசிப்பதற்கு ஆண்டுதோறும் 4 லட்சம் பக்தர்கள் அங்கே சென்று கொண்டிருக்கிறார்கள். இந்த பக்தர்களை போராளிகளிடமிருந்து பாதுகாக்க 40,000 சிப்பாய்களை மாதக்கணக்கில் காவல் வைக்கிறது அரசு.
மேற்படி சிவலிங்கத்திற்கும் வந்தது சோதனை! “முன்னர் சுமார் 12 அடி உயரம் இருந்த பகவான் தற்போது 6 அடிக்கும் கீழே போய்விட்டார். காரணம் புரியவில்லை” என்று சென்ற ஆண்டு அபாயச்சங்கு ஊதினார் அந்தக் கோயிலின் நிர்வாக அதிகாரி. பகவானைக் கண்டு பக்தர்கள் உருகலாம், பக்தர்களைக் கண்டு பகவான் எப்படி உருகமுடியும்? “பக்தர்கள் விடும் மூச்சுக்காற்றின் வெப்பத்தைப் பனீசுவர பகவானால் தாங்கமுடியவில்லை” என்றன சில பத்திரிகைகள். பக்தர்களின் மூச்சை நிறுத்த முடியாதே! “குகைக்கு அருகில் அடுப்பு பற்றவைத்து பக்தர்கள் சப்பாத்தி போடுகிறார்கள். சூடு தாங்கமுடியாமல்தான் பகவான் கசிந்துருகுகிறார்” என்றன வேறு சில பத்திரிகைகள். புவி சூடேறுதல்தான் காரணம் என்றனர் வேறு சிலர்.
காரண காரியங்கள் குறித்த அறிவுப்பூர்வமான ஆய்வுகள் தொடர்வது ஆன்மீகத்துக்கு ஆபத்து என்பதால் குப்தா கமிசன் என்றொரு கமிசனைப் போட்டு ஆராயச் சொன்னது அரசு. பகவான் கரையாமலும், பக்தர்கள் கூட்டம் கலையாமலும் பாதுகாக்கும் பொருட்டு குகைக்கு குளிர் சாதன வசதி செய்து சிவபெருமானை ஸீரோ டிகிரியில் பாதுகாப்பது; பக்தர்கள் சப்பாத்தி போட 100 ஏக்கர் வனப்பகுதியைக் கோயிலுக்கு தானம் கொடுத்து அடுப்புச் சூட்டிலிருந்து ஆண்டவனைப் பாதுகாப்பது என்று முடிவு செய்தது அரசு. இந்த 100 ஏக்கர் தானத்துக்கு எதிராகக் காஷ்மீரே பற்றி எரியத் தொடங்கி, அதன் விளைவாக அம்மாநில காங்கிரசு அரசு இப்போது உருகிக் கொண்டிருக்கிறது.
தினமணி நாளிதளின் மாய்மாலம்: எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்ற கதையாக, ‘அமர்நாத் பனிலிங்கம் செயற்கையானதல்ல’ என்று கொட்டை எழுத்தில் செய்தி போடுகிறது தினமணி (24.6.08). இயற்கையாக உருவான எல்லாம் வல்ல இறைவனை செயற்கையாகப் பாதுகாப்பது ஏன் என்ற கேள்விக்கு மட்டும் அவர்கள் பதில் சொல்லவில்லை.
“”இராமன் பாலம் என்பது இயற்கையாக அமைந்த மணல்திட்டு”" என்று சொன்னால், ‘இல்லையில்லை, அது இராமனால் கட்டப்பட்டது, செயற்கையானது எனவே தெய்வீகமானது’ என்று கத்துகிறார் இராம. கோபாலன். ‘அமர் நாத் பனிலிங்கம் செயற்கையானது’ என்று சொன்னால் ‘இல்லையில்லை, அது இயற்கையானது எனவே தெய்வீகமானது’ என்கிறார்கள். வடக்கே இயற்கை தெய்வீகம்! தெற்கே செயற்கை தெய்வீகம்!
மக்களை மயக்கத்தில் ஆழ்த்துவதற்காக ஆளும் வர்க்கம் உருவாக்கிய மடமைகள் உடைபடும்போது மதவாதிகள் பதறுகிறார்கள்; அதற்குக் காரணம் இருக்கிறது. ஆனால் அற்புதம் என்றும் தெய்வீகம் என்றும் தாங்கள் இதுகாறும் நம்பிக் கொண்டிருந்தவை அயோக்கியத்தனமான மோசடிகள் என்று ஆதாரப்பூர்வமாகத் தெரியும்போது பக்தர்கள் பதறியிருக்க வேண்டாமா?
“கடன் பட்டதும், காவியணிந்ததும், மதுமாமிசம்மனைவியைத் துறந்ததும், காடு மலைகளில் நடையாய் நடந்ததும் கேவலம் ஒரு தீவட்டியைத் தரிசிக்கத்தானா?” என்று குமுறியிருக்க வேண்டாமா? ‘அது தீவட்டியில்லை, தெய்வீகத் தீபம்தான். நாங்கள் நம்பமாட்டோம்’ என்று நக்கீரனுக்குப் பேட்டி கொடுக்கிறார்கள் ஐயப்பசாமிகள். “பகவானை எண்ணி பனியைச் சகித்ததும், காஸ்மீர் போராட்டக்காரர்களை எண்ணிப் பயந்து செத்ததும், 12,000 அடி உயரம் மூச்சு வாங்க மலையேறியதும் ஒரு குச்சி ஐஸைத் தரிசிக்கத் தானா?” என்று கொதித்திருக்க வேண்டாமா? அந்தக் குச்சி ஐஸைப் பாதுகாக்க பாரத் பந்த் நடத்துகிறது பாரதிய ஜனதா. அதற்கும் கூட்டம் சேருகிறது.
பகுத்தறிவின் ஒளி பட்டவுடனே மூடநம்பிக்கை இருள் அகலவில்லையே ஏன்? ‘மகரஜோதி பொய்’ என்பதை அந்தக் கோயிலின் தந்திரியே பிரகடனம் செய்த பின்னரும் அய்யப்பன்மார்கள் திருந்தவில்லையே ஏன்? இந்த பக்தர்களை ‘மூட நம்பிக்கைக்குப் பலியானவர்கள்’ என்று மட்டும் நாம் கருதமுடியுமா? என்ன வகை பக்தி இது?
மூடநம்பிக்கை, பகுத்தறிவு, ஏமாற்றுபவன்ஏமாற்றப்படுபவன் என்ற வகைப்பாடுகளின் வரம்பைத்தாண்டி ஒரு விநோதக் கலவையாக உருப்பெற்று வருகிறது இந்த ‘பக்தி’. காமவெறி பிடித்த பித்தலாட்டக்காரனாக அர்ச்சகன், இந்தப் பித்தலாட்டத்துக்குப் பந்தம் பிடிக்கும் அரசு, அதற்குக் காவல் நிற்கும் போலீசு, ஐயப்ப சீசனில் திருடுவதற்காகவே மாலை போட்டுக் கொள்ளும் பிக்பாக்கெட்டுகள், டாஸ்மாக் கடைகளில் அய்யப்பன்மார்களுக் கென்றே ஒதுக்கப்பட்டிருக்கும் தனிக் கோப்பைகள், சுத்தம் கருதி சாக்கனாக் கடைகளில் அவர்களுக்கு மட்டும் இலை போட்டுப் பரிமாறப்படும் புரோட்டாக்கள்..! மோசடியும் சுயமோசடியும் சரிவிகிதத்தில் கலந்து உருவாகியிருக்கும் இந்தக் கூட்டுக் களவாணித்தனத்தில் ஏமாற்றுபவன் யார், ஏமாற்றப்படுபவன் யார் என்று பிரித்தறிய முடியவில்லை.
புதுப்பட ரிலீஸ் அன்று கட் அவுட்டுக்குப் பால் அபிசேகம் செய்யும் ரசிகனின் பரவசம், நூறு ரூபாய் ஒரு குவாட்டர் என்று கறாராக ரேட் பேசிக் கொண்டு லாரியில் ஏறி வந்து ‘தலைவா’ என்று உணர்ச்சி வசப்படும் தொண்டனின் மனக்கிளர்ச்சி, இலஞ்சத்தை அழுதுவிட்டு அப்புறமும் அதிகாரியிடம் ‘ங’ போல் வளையும்’ நெளிவு சுளிவு, மொய் எழுதும் வயிற்றெரிச்சலை மறைத்தபடி திருமண வீட்டில் மலர்ந்து மணம் பரப்பும் புன்னகைகள்..! அன்றாட வாழ்வில் நாம் காணும் இந்த ‘உணர்ச்சிகள்’ எல்லாம் அமர்நாத் யாத்ரீகர்களின் பரவசத்தையும் அய்யப்பன்மார்களின் மனக் கிளர்ச்சியையும் பிரதிபலிக்கவில்லையா?
எனவேதான் பக்தன் பதறுவதில்லை. சாம்சங் ரெப்ரிஜிரேட்டரையே கருவறையாக்கி, அதற்குள் பனி லிங்கம் ஒன்றை உறையவைத்து, ஆண்டுக்கு ஒரு முறை திறந்து காட்டினாலும் ‘ஹர ஹர மகாதேவா’ என்று கன்னத்தில் போட்டுக்கொள்ள இந்த பக்தர்கள் தயார்! மகரஜோதிக்குப் பதில் சிலிண்டரை வைத்து ‘ஸ்பிக் ஜோதி’யைக் கொளுத்திக் காட்டினாலும் அதனைத் ‘தரிசிக்கும்’ பொருட்டு விரதமிருக்கவும், இருமுடி சுமக்கவும் அய்யப்பன்மார்கள் தயார்!
‘டென் கமாண்ட்மென்ட்ஸ்’ என்ற திரைப்படத்தில் பார்த்த ஒரு காட்சி இங்கே நினைவுக்கு வருகிறது. பல வகையான விக்கிரக வழிபாடுகளில் மூழ்கியிருக்கும் யூத மக்களிடம் “இவையெல்லாம் கடவுளல்ல, உண்மையான கடவுளின் செய்தியை நான் உங்களுக்குக் கொண்டுவருகிறேன்” என்று கடவுளைத் தேடி மலைக்குச் செல்வார் மோசஸ். போனவர் திரும்புவதற்குத் தாமதமாகவே, “ஒரு கடவுளில்லாமல் இன்னும் எத்தனை நாள்தான் நாம் காத்திருக்க முடியும்?” என்று விசனப்பட்ட மக்கள் ஒரு எருமைக்கிடா பொம்மையைக் கடவுளாக்கி அதைத் தலையில் வைத்துக் கூத்தாடத் தொடங்குவார்கள்.
அந்தக் கூத்தும் இந்தக் கூத்தும் ஒன்று போலத் தோன்றினாலும் ஒன்றல்ல. அது அச்சத்திலும் மவுடீகத்திலும் மனிதகுலம் ஆழ்ந்திருந்த, அறிவியல் வளராத காலம். அது பல் முளைக்காத குழந்தையின் மழலை. இன்று நாம் காண்பதோ கிழவனின் மழலை. “ஒரு பொய்யாவது சொல் கண்ணே உன் காதலன் நான்தான் என்று, அந்தப் பொய்யில் உயிர்வாழ்வேன்” என்று மன்றாடும் காதலனைப் போல, ‘எங்களுக்கு ஒரு மாயையை வழங்கு’ என்று இறைஞ்சுகிறார்கள் இந்த பக்தர்கள்.
சென்னை தீவுத்திடலில் அமர்நாத்தைப் போலவே பனிக்கட்டி லிங்கத்தை உருவாக்கி ‘சென்னையில் அமர்நாத்’ என்று விளம்பரம் செய்யப்படுகிறது. ராட்டினம் ஏறப்போன பொருட்காட்சிக் கூட்டம் உடனே பக்தர்களாக உருமாறி அந்த செயற்கை லிங்கத்தைப் பரவசத்துடன் வழிபடுகிறது. திருப்பதி வரை சென்று தரிசிக்க முடியாத பக்தர்களுக்காக ‘சீனிவாச திருக்கல்யாணத்தை’ சென்னையிலேயே நடத்தி, ‘சென்னையில் ஒரு திருப்பதி’ என்று விளம்பரம் செய்கிறது திருப்பதி தேவஸ்தானம். ‘கோயிந்தா கோயிந்தா’ என்று அங்கேயும் கூட்டம் அலைமோதுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
[url=http://buyclomiddirectly.com/#ghnpe]generic clomid[/url] - clomid without prescription , http://buyclomiddirectly.com/#ctenc buy clomid
Post a Comment