காஷ்மீர் மாநிலத்தில் கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக நடந்து வரும் போராட்டத்தின் முக்கிய கோரிக்கைகளுள் ஒன்று ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதாகும். காஷ்மீர் மாநிலத்தில் மட்டுமின்றி, கடந்த ஆறாண்டுகளுக்கும் மேலாக மணிப்பூர் மாநிலத்திலும் இச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன. இச்சட்டத்தைக் கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு அம்மாநிலத்தில் இந்திய இராணுவம் நடத்திவரும் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த தாய்மார்கள் ஜூலை 15, 2004 அன்று நடத்திய நிர்வாணப் போராட்டத்தை அவ்வளவு எளிதில் யாரும் மறந்துவிட முடியாது. மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த ஐரோம் ஷர்மிளா என்ற பெண் இச்சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி கடந்த பத்தாண்டுகளாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தி வருகிறார்.
இந்திய அரசியல் சாசனத்தின் 21 – ஆவது பிரிவு ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் உயிர்வாழும் உரிமையை அளிப்பதாகப் பீற்றிக் கொள்கிறது. ஆனால், இச்சட்டமோ யாரை வேண்டுமானாலும் நாயைப் போலச் சுட்டுக் கொல்லும் உரிமையை இராணுவத்திற்கு வழங்குகிறது. எனினும், இச்சட்டம் அரசியல் சாசனத்திற்கே எதிரானதல்ல எனத் தீர்ப்பளித்துத் தனது ஒப்புதலை இச்சட்டத்திற்கு வழங்கியிருக்கிறது, உச்ச நீதிமன்றம்.
ஏ.ஜி.நூரனி என்ற அரசியல் விமர்சகர், “பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்தியாவை ஆட்சி செய்தபொழுதுகூட, இப்படி அப்பட்டமாக இந்தியர்களைச் சுட்டுக் கொல்லும் உரிமையைத் தனது இராணுவத்துக்கு வழங்கியதில்லை” என ஒப்பிட்டு ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தின் கொடூரத்தை அம்பலப்படுத்தியுள்ளார்.
காஷ்மீர் பள்ளத்தாக்கில் கடந்த ஐந்தாறு மாதங்களாக நடந்துவரும் போராட்டங்களின்பொழுது மட்டும் இதுவரை ஏறத்தாழ 108 காஷ்மீரிகள் இராணுவத்தாலும், துணை இராணுவப் படைகளாலும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக் கொல்லப்பட்டவர்களுள் ஒருவர் கையில்கூட ஏ.கே.47 துப்பாக்கி இருக்கவில்லை. அதிகம் போனால், அவர்களின் கைகளில் ஒரு கல் இருந்திருக்கலாம். “அவர்களை ஏன் காலுக்குக் கீழே சுடவில்லை?” என்ற கேள்விக்கு, அவர்கள் லஷ்கர் இ தொபாவின் கூலியாட்கள் எனத் திமிராக விடையளிக்கிறது, இராணுவம்.சட்டபூர்வமான வழிகளில் போராடுபவர்களை மட்டுமல்ல, தெருவில் நடந்துபோவோரைக்கூடச் சுட்டுக் கொல்லும் அதிகாரத் திமிரை இச்சட்டம் இராணுவத்திற்கு வழங்கியிருக்கிறது.
சிறீநகரைச் சேர்ந்த 16 வயதான ஜாஹித் ஃபரூக் என்ற சிறுவன் கிரிக்கெட் விளையாடிவிட்டுத் திரும்பி வந்துகொண்டிருந்தபொழுது எல்லைப் பாதுகாப்புப் படையினரால் நடுத்தெருவில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டான். எல்லைப் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சிப்பாய்களை எதிர்த்துக் கேள்வி கேட்டான் என்பதுதான் இச்சிறுவனைப் பயங்கரவாதி ஆக்கிவிட்டது. இச்சிறுவன் மட்டுமல்ல, 14 வயதான வாமிக் ஃபரூக், 16 வயதான பஷாரத் அகமது, 14 வயதான முஷ்டாக் அகமது மிர் உள்ளிட்டு எண்ணற்ற சிறுவர்கள் இராணுவத்தாலும், துணை இராணுவப் படைகளாலும் கொல்லப்பட்டுள்ளனர். சிறுவர்களைக் கொன்றதற்காகக்கூட எந்தவொரு அதிகாரியும் தண்டிக்கப்பட்டதில்லை.
2004 ஆம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த தங்ஜம் மனோரமா என்ற இளம் பெண்ணை அவரது வீட்டில் இருந்து கடத்திக் கொண்டு போன அசாம் துப்பாக்கிப்படைப் பிரிவைச் சேர்ந்த சிப்பாய்கள், அப்பெண்ணை பாலியல் பலாத்காரப்படுத்திய பின் சுட்டுக் கொன்றனர். தங்ஜம் மனோரமாவின் பிரேதப் பரிசோதனை அறிக்கை இன்னும் கிடைக்கவில்லை என்ற அப்பட்டமான பொய்யைக் கூறியே, இப்படுகொலை பற்றி விசாரிப்பதற்கு ஒத்துழைக்க மறுத்துவருகிறது, இராணுவம். மைய அரசோ, இச்சம்பவம் பற்றி விசாரிக்க மாநில அரசு நியமித்த விசாரணைக் கமிசனை ஒத்துக்கொள்ள மறுத்து வருவதோடு, அக்கொலை வழக்கில் தொடர்புடைய சிப்பாய்களை விசாரிப்பதற்கான அனுமதியையும் தர மறுத்து வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் அமலுக்கு வந்த கடந்த இருபதாண்டுகளில் ஏறத்தாழ 60,000 பேர் பல்வேறு சட்டவிரோத வழிகளில் அரசுப் படைகளால் கொல்லப்பட்டுள்ளனர். அதே சமயம், அத்துமீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டு இராணுவச் சிப்பாய்கள் மீது பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கையோ வெறும் 1,514 தான். இவற்றுள் 1,473 வழக்குகள் பொய்யானவை என்று கூறி இராணுவமே தள்ளுபடி செய்துவிட்டது. இந்த அநீதியை எதிர்த்துதான், அரசு பயங்கரவாதக் கொலைகளைச் சட்டபூர்வமாக்கும் இச்சட்டத்தை விலக்கக் கோரித்தான் கடந்த நான்கைந்து மாதங்களாக ஜம்மு காஷ்மீரில் போராட்டங்கள் நடந்து வருகின்றன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment