Sep 25, 2010

காஷ்மீர் பிரச்சனைக்கு எட்டு அம்ச திட்டம்' இந்தியா அறிவிப்பு.

இந்திய நிர்வாகத்துக்கு உட்பட்ட காஷ்மீர் மாநிலத்தில் தொடர்ந்து நடைபெறும் வன்முறைகளையும் போராட்டங்களையும் முடிவுக்குக் கொண்டுவரும் முயற்சியாக, இந்திய அரசு இன்று சனிக்கிழமை எட்டு அம்ச திட்டங்களை அறிவித்திருக்கிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் அனைத்துத் தரப்பினருடனும் தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடத்தும் வகையில், முக்கியப் பிரமுகர் தலைமையில் சிறப்புத் தூதர்கள் குழுவை நியமிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதேபோல், சர்ச்சைக்குரிய ஆயுதப் படைகளுக்கான சிறப்பு அதிகாரச் சட்டத்தை விலக்க வேண்டும் என்று மாநிலத்தின் ஆளும்கட்சி உள்பட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தும் நிலையில், காஷ்மீரில் எந்தெந்த இடங்களில் படைகளை நிறுத்துவது என்பது தொடர்பாக மறு ஆய்வு செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

கடந்த வாரம், அனைத்துக் கட்சிக் குழுவினர், ஜம்மு காஷ்மீர் மாநிலத்துக்குச் சென்று பல்வேறு தரப்பினரையும் சந்தித்துக் கருத்துக் கேட்டார்கள். அக் குழுவின் அறி்க்கையை உள்துறை அமைச்சர் சிதம்பரம் பிரதமரிடம் சமர்ப்பித்தார். அதையடுத்து, இன்று பிற்பகல், பிரதமர் மன்மோன் சிங் தலைமையில் பாதுகாப்பு விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அதில், அனைத்துக் கட்சிக் குழுவின் பரிந்துரைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அதில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பாக பின்னர் செய்தியாளர்களிடம் அறிவி்த்தார் உள்துறை அமைச்சர் சிதம்பரம். ஜம்மு காஷ்மீரில் அரசியல் கட்சிகள், மற்ற குழுக்கள், மாணவர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பினருடனும் தொடர்ச்சியாக பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வதற்காக, முக்கியப் பிரமுகர் தலைமையில் சிறப்புத் தூதர்கள் குழுவை மத்திய அரசு அமைக்கும் என்றார் சிதம்பரம்.

ஆனால், யார் தலைமையில் அந்தக் குழு அமைக்கப்படும் என்பது குறித்தோ அல்லது அதில் இடம்பெறுவோர் குறித்தோ விவரங்கள் எதையும் அவர் வெளியிடவில்லை. ஆனால், அதிகபட்சமாக மூன்று அல்லது நான்கு பேர் இடம் பெறக்கூடும் என்று குறிப்புணர்த்தினார்.
காஷ்மீரில் ஆயுதப்படைகளை பணியில் ஈடுபடுத்துவது தொடர்பில் மறு ஆய்வு நடவடிக்கை மேற்கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

படைகளின் ஒருங்கிணைக்கப்பட்ட தலைமையின் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, காஷ்மீரில் குறிப்பாக ஸ்ரீநகரில் படைகளை பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக மறுஆய்வு செய்யுமாறு மாநில அரசிடம் கேட்டுக் கொள்ளப்படும். குறிப்பாக, ஸ்ரீநகரிலும் மற்ற நகரங்களிலும் பங்கர்கள் எனப்படும் பதுங்குகுழிகள் மற்றும் சோதனைச் சாவடிகளின் எண்ணிக்கைகளைக் குறைப்பது குறித்து கவனம் செலுத்துமாறு கோரப்படும். அதேபோல், பதற்றம் மிகுந்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள அரசின் அறிவிக்கையை மறுஆய்வு செய்யுமாறும் கோரப்படும் என்றும் கூறினார் சிதம்பரம்.

பதற்றம் மிகுந்த பகுதிளாக அறிவிக்கப்பட்ட பட்டியலில் இருந்து நீக்கப்படும் பகுதிகளில், ஆயுதப்படைகளுக்கான சிறப்பு அதிகாரமும் விலகிவிடும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. காஷ்மீர் சென்ற அனைத்துக் கட்சிக் குழுவின் முக்கியப் பரிந்துரைகளில், காஷ்மீர் பள்ளத்தாக்கில் குறிப்பாக தலைநகர் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினரின் அளவைக் குறைக்க வேண்டும் என்பதும் ஒன்று எனக் கூறப்படுகிறது.

காஷ்மீரில் கடந்த சில மாதங்களில் நடந்த வன்முறைகளில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசு முடிவு செய்துள்ளது.
சமீபகாலமாக நடந்த வன்முறைகளின்போது கைது செய்யப்பட்ட 245 பேரையும் விடுதலை செய்யவும் அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடர் வன்முறையால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்ட நிலையில், உடனடியாக பள்ளி, கல்லூரிகளைத் திறக்குமாறு மாநில அரசுக்கு அறிவுறத்தப்பட்டுள்ளது. கல்வி நிலையங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த மாநில அரசுக்கு மத்திய அரசு 100 கோடி ரூபாய் உதவியை வழங்கும் என்றும் சிதம்பரம் தெரிவித்தார்.ஜம்மு மற்றும் லடாக் பிராந்தியங்களில் கட்டமைப்புப் பற்றாக்குறை தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை அளிக்க, இரண்டு சிறப்புக் குழுக்களை அமைத்திருப்பதாகவும் உள்துறை அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.

No comments: