Jun 9, 2010

இலங்கை அதிபர் ராஜபக்சே இந்தியவருகை: தமிழகம் முழுவதும் பலாயிரம் தமிழ்போராளிகள் கைது.

இலங்கை அதிபர் ராஜபக்சே 3 நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். அவரது வருகைக்கு தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சிகளும், தமிழ் அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சென்னையில் இலங்கை தூதரகம்,மாவட்ட‌ ஆட்சியர் அலுவலகம், மெமோரியல் ஹால், சாஸ்திரிபவன் ஆகிய இடங்களில் போராட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த போராட்டத்துக்கு காவல்துறை தரப்பில் அனுமதி மறுக்கப்பட்டது. ஆனாலும் தடையை மீறி அனைத்து இடங்களிலும் போராட்டம் நடந்தது. சென்னை மட்டுமின்றி தமிழகம் முழுவதும் ஆர்பாட்டம் நடந்தது. அதில் பலாயிரம் பேர் கலந்துக்கொண்டனர். அவர்களை காவல்துறை கைது செய்தனர்.இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் நடந்த ஆர்பாட்டத்தில் கணேச மூர்த்தி எம்.பி. தலைமையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட‌ முயன்றனர்.

பழ.நெடுமாறன்,வைகோ கைது: இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன்,ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, லட்சிய தி.மு.க. பொதுச் செயலாளர் டி.ராஜேந்தர், இந்திய கம்யூ கட்சி கட்டுப்பாட்டுக்குழு தலைவர் நல்லக்கண்ணு,
மகேந்திரன்,தமிழ் தேசிய பொதுவுடமை கட்சி பொதுச் செயலாளர் மணியரசன், தமிழ் தேசிய விடுதலை முன்னணி செயலாளர் தியாகு, தமிழர் தன்மான பாசறை செயலாளர் மனோகரன், உள்ளிட்ட 700க்கும் மேற்பட்ட தமிழ்போராளிகள் கைது செய்யப்பட்டனர்.

தொல்.திருமாவள‌வன் எம்.பி கைது: அதுப்போல், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தலைமையில் காவல்துறையின் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் மெமோரியல் ஹால் முன்பு நடந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் திருமாவளவன் உள்பட 7500க்கும் மேற்பட்ட தமிழ்போராளிகளை காவல்துறை கைது செய்தனர். செந்தமிழன் சீமான் கைது: நாம் தமிழர் கட்சி சார்பில் நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவன் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் டைரக்டர் சீமான் தலைமை நடந்தது, 400க்கும் மேர்பட்ட தமிழ்போராளிகள் கலந்துக்கொண்டனர். அவர்களையும் காவல்துறை கைது செய்தனர்.

பிற மாவட்டங்கள்:கோவையில் டாக்டர் கிருஷ்ணசாமி கைது கோவை செஞ்சிலுவை சங்க அலுவலகம் முன் புதிய தமிழகம் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டம் செய்தவர்களையும், மதுரையில் டைரக்டர் தாமிரா தலைமை ஆர்ப்பாட்டம் செய்த 200க்கும் மேற்பட்ட தமிழ்போராளிகளை காவல்துறை கைது செய்தது. தமிழ்ப் புலிகள் கைது: தேனியில் ராஜபக்சே வருகையை எதிர்த்து கருப்புக் கொடிகளுடன் ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ்ப் புலிகள் அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்திய அனைத்து கட்சிகளுமே எல்லா மாவட்ட தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. சில இடங்களில், மொத்தமாக கூடி ஆர்ப்பாட்டம் செய்து கைது செய்யப்பட்டனர். போராட்ட துளிகள்: ராஜபக்சேவுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள். இளைஞர்கள் பலர் பிரபாகரன் படம் பொறித்த பனியன் அணிந்திருந்தனர். சிங்கள கொடிக்கு தீ வைத்து அதை செருப்பால் அடித்தனர். ராஜபக்சேவின் உருவ பொம்மையை தீ வைத்து கொளுத்தினர். ராஜபக்சேவின் உருவ பொம்மை, படத்தை செருப்பால் அடித்தும் காலில் போட்டு மிதிக்கவும் செய்தனர். விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் உருவப்படங்களை ஏராளமானோர் ஏந்தி வந்தனர். புலி உருவங்களையும் பலர் சுமந்து வந்தனர்.

No comments: