டெல்லி: மறைந்த நரசிம்ம ராவ் தலைமையிலான அரசு பதவியில் இருந்தபோது அப்போதைய வெளியுறவு அமைச்சகம்தான், யூனியன் கார்பைடு நிறுவன தலைவராக அப்போது இருந்த வாரன் ஆன்டர்சன் குறித்து தீவிரமாக விசாரிக்க வேண்டாம் என தடை உத்தரவு போட்டது என்று முன்னாள் சிபிஐ அதிகாரி பி.ஆர்.லால் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.
20 ஆயிரம் பேரை பலி வாங்கிய, பல ஆயிரக்கணக்கானோருக்கு நிரந்தர உடல் ஊனத்தை ஏற்படுத்திய, போபால் விஷ வாயு வழக்கில் யூனியன் கார்பைடு நிறுவனத்தைச் சேர்ந்த 8 பேருக்கு வெறும் 2 ஆண்டு தண்டனை மட்டுமே வழங்கப்பட்டது. அதுவும் தண்டனை விதிக்கப்பட்டவுடனேயே 7 பேருக்கு (ஒருவர் ஏற்கனவே இறந்து விட்டார்) ஜாமீனும் அளித்து விட்டது போபால் கோர்ட். மேலும், வாரன் ஆன்டர்சன் குறித்து ஒரு வார்த்தை கூட தீர்ப்பில் இல்லை.
இந்தத் தீர்ப்பு பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. போபால் சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் பெரும் கொதிப்படைந்துள்ளனர். இந்த நிலையில் முன்னாள் காங்கிரஸ் அரசுதான் ஆன்டர்சனை தப்ப விட்டதாக முன்னாள் சிபிஐ அதிகாரி பி.ஆர்.லால் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.போபால் விஷ வாயு சம்பவம் நடந்தவுடன் ஆன்டர்சன் கைது செய்யப்பட்டார். ஆனால் ஐந்து நாட்கள் கழித்து வெறும் ரூ. 25,000 ரொக்க ஜாமீனை செலுத்தி விடுதலையானார். பின்னர் அமெரிக்காவுக்கு ஓடி விட்டார். அதன் பின்னர் அவர் வரவே இல்லை.
ஆன்டர்சனுக்கு சாதகமாக அப்போதைய நரசிம்ம ராவ் அரசு நடந்து கொண்டதாக தற்போது கூறியுள்ளார், அந்த சமயத்தில் விசாரணை அதிகாரியாக இருந்த லால். லால், 1994ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 1995 ஜூலை வரை விசாரணை அதிகாரியாக இருந்தவர்.
இதுகுறித்து லால் கூறுகையில், ஆன்டர்சன் குறித்து மெதுவாக போகுமாறு சிபிஐக்கு அப்போதைய வெளியுறவு அமைச்சகம் ஆலோசனை கூறியது. ஆன்டர்சன் நாடு கடத்தல் தொடர்பாக அழுத்தம் தரத் தேவையில்லை என்றும் வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தியது.
அரசின் இந்த உத்தரவு எனக்கு அதிருப்தியையும், அதிர்ச்சியையும் அளித்தது. ஆன்டர்சன்தான் இந்த வழக்கின் முக்கிய குற்றவாளி. அவரை நாடு கடத்தக் கோருவதை வலியுறுத்த வேண்டாம் என வெளியுறவு அமைச்சகம் பிறப்பித்த அறிவுறுத்தலை எதிர்த்து நான் வெளியுறவு அமைச்சகம் எனக்கு அனுப்பிய எழுத்துப் பூர்வமான கடிதத்தை திருப்பி அனுப்பினேன். இதையடுத்து நான் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டேன்.
இது மிகப் பெரிய மனிதப் பேரவலம். இந்த வழக்கில் தொடர்புடைய ஆன்டர்சன் நாடு கடத்தப்பட்டு கொண்டு வந்திருக்கப்பட வேண்டும். ஆனால் சிபிஐயால் அது தொடர்பாக எதுவும் செய்ய முடியாத நிலை அப்போது. சிபிஐயால் ஆன்டர்சனை கொண்டு வந்திருக்க முடியும். ஆனால் அரசின் உத்தரவை மீறி சிபிஐயால் செயல்பட முடியாத நிலை இருந்தது.
பிற நாடுகளில் எல்லாம் சிபிஐ போன்ற புலனாய்வு அமைப்புகள் முழு சுதந்திரத்துடன் செயல்பட்டு வருகின்றன. ஆனால் இந்தியாவில் அரசின் கட்டுப்பாட்டில்தான் சிபிஐ போன்றவை உள்ளது. சட்டத்திற்கு உட்பட்டுத்தான் சிபிஐ செயல்பட வேண்டியுள்ளது என்றார் லால்.
முதலில் ஆன்டர்சன் உள்ளிட்ட 12 பேர் மீது பத்து ஆண்டு சிறைத் தண்டனை கிடைக்கும் வகையிலான சட்டப் பிரிவில்தான் சிபிஐ வழக்குப் பதிவு செய்திருந்தது. பின்னர் ஆன்டர்சன் மீதான வழக்கை மட்டும் தனியாக பிரித்துள்ளனர். மேலும், அவருக்கு சாதாராண சாலை விபத்துக்களின்போது போடப்படும் பிரிவுகளின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. மற்றவர்கள் மீதும் அதேபோன்ற பிரிவில்தான் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனால்தான் வெறும் 2 வருட சிறைத் தண்டனை மட்டும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.போபால் தீர்ப்பால் பெரும் அதிருப்தி அடைந்துள்ள பாதிக்கப்பட்டோரும், இவர்களுக்காக போராடி வருவோரும், தீர்ப்பை எதிர்த்து அப்பீல் செய்யவுள்ளனர். ஆன்டர்சன் உள்ளிட்டோருக்கு மரண தண்டனை கிடைக்க வேண்டும் என்று அவர்கள் கோரி வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment