குளச்சல் பள்ளி வாசல் மீது தாக்குதல் நடத்தி ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தவர்களை உடனடியாக கைது செய்ய கோரி இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் காவல் நிலையத்தில் கோரிக்கை மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. குளச்சல் அண்ணாசிலை சந்திப்பில் உள்ள மீரானியா பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தி அதன் ஜன்னல் கண்ணாடிகளை கடந்த 8ம் தேதி மர்ம நபர்கள் உடைத்தனர். குற்றவாளிகளை கைது செய்ய கோரி முஸ்லிம்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள். ஆர்.எஸ்.எஸ். தீவிரவாதிகள் இதை செய்திருப்பார்கள் என்று இஸ்லாமிய இயக்கங்களும் பொதுமக்களும் நம்புகிறார்கள். இந்நிலையில் அனைத்து இஸ்லாமிய இயக்கங்கள் சார்பில் குற்றவாளிகளை உடனே கைது செய்ய கோரி குளச்சல் காவல் நிலையத்தில் கோரிக்கை மனுக்கள் கொடுக்கும் போராட்டம் நேற்று நடந்தது.
போராட்ட குழு கன்வீனர் நூர்முகமது தலைமையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, எஸ்டிபிஐ, தமுமுக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மறுமலர்சி முஸ்லீம் லீக், மனித நேய மக்கள் கட்சி ஆகிய இஸ்லாமிய அமைப்புகளின் நிர்வாகிகள் உட்பட 68 பேர் குளச்சல் இன்ஸ்பெக்டர் கந்த குமாரனிடம் தனித்தனியாக கோரிக்கை மனு கொடுத்தனர். அதில் மீரானியா பள்ளிவாசல் மீது கண்ணாடியை உடைத்த குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தனர். அனைத்து இஸ்லாமிய இயக்கங்களை சேர்ந்தவர்களும் மனு கொடுக்க காவல் நிலையத்திற்கு திரளாக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment