உச்சநீதிமன்றத் தீர்ப்பே ஆதாரம்! ஆக்கிரமிப்பு - அடாவடிக் கோயில்களை இடித்துத் தள்ளுக!
ஓட்டுப் பயம் தேவையில்லை - நாட்டு வளர்ச்சியே முக்கியம்! மத்திய, மாநில அரசுகளுக்கு தமிழர் தலைவர் வேண்டுகோள்!
பாதைகளை அகலமாக்குவது நாட்டின் வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் இன்றியமையாதது. ஆக்கிரமிப்புகளை அகற்ற உச்ச நீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது. அடாவடிக் கோயில்களை இடித்துத் தள்ளுக. ஓட்டுப் பயம் தேவையற்றது என்று மத்திய, மாநில அரசுகளுக்கு வேண்டுகோள் விடுத் துள்ளார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள். அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
சாலை விரிவாக்கம் இன்றியமையாதது:
தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை, மற்றும் மாநில அகலப் பாதைகளை மேலும் விரிவாக்கி, நான்கு வழிப்பாதைகளாக்க வேண்டிய கட்டாயம் தவிர்க்க முடியாதது.
ஆக்ரமிப்புகள் எந்த ரூபத்தில் இருந்தாலும், தயவு, தாட்சண்யமின்றி இடித்து, சாலை விரிவாக்கத்திற்கு வழிவகை செய்வது வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் இன்றியமையாதது.
நாட்டில் வாகனங்களின் போக்குவரத்து முன்பிருந்ததைவிட பன்மடங்கு அதிகம். அதனால் போக்குவரத்து நெரிசலும் அதிகம் என்பது நாடறிந்த உண்மையாகும்.நடைபாதைக் கோயில்களை விட்டுவிட்டு..மற்ற ஆக்கிரமிப்புகளை (வீடுகளை, கடைகளை) இடித்துத் தள்ளத் தயங்காத மத்திய, மாநில அரசுகளின் நெடுஞ்சாலைத் துறையினர் நடை பாதைக் கோயில்களை மட்டும் விட்டுவிட்டு மற்றவைகளை இடிப்பது எவ்வகையிலும் நியாயம் அல்ல; இந்த இரட்டை அளவுகோல் கூடாது என்பது ஒரு புறமிருக்கட்டும்.
உச்சநீதிமன்றமே தீர்ப்பளித்துள்ளது:
சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை அமர்வு பல மாதங்களுக்கு முன்பு இது பற்றி ஆக்கிர மிப்புக் கோயில்களை இடிக்க ஆணையிட்டு அதுவேகமாகவும் பல மாவட்டங்களில் நடந்தது.
அதன்பிறகு பல வழக்குகளில் உச்ச நீதி மன்றமே இந்த ஆக்கிரமிப்புக் கோயில்களை இடித்து அகற்ற வேண்டும் என்று தீர்ப்பளித்துவிட்டது.
பா.ஜ.க., அ.தி.மு.கவுக்கு தகுதி கிடையாது:
நடைபாதைக் கோயில்களை இடிக்கக்கூடாது என்று கூறிட பாரதிய ஜனதா கட்சிக்கோ, அ.இ.-அ.தி.மு.க. சட்ட மன்ற உறுப்பினர்களுக்கோ எந்தத் தகுதியும், உரிமையும் கிடையாது. காரணம், 400 ஆண்டுகளாக இருந்த அயோத்தியில் பாபர் கட்டிய பாபர் மசூதியை இடித்தவர்கள். அ.தி.மு.க.வின் தலைமை கரசேவைக்குத் தனது தொண்டர்களை கூச்ச நாச்சமின்றி அண்ணா பெயருக்கே களங்கம் விளைவிக்கும் நிலையில் அனுப்பி வரலாறு படைத்தவர்கள் அல்லவா? இரட்டை வேடம் எதற்கு? அது மட்டுமா, மதுரா, காசி போன்ற ஊர்களில் உள்ள மசூதிகளையும், ஒரிசா, கருநாடகத்தில் உள்ள சர்ச்சுகளையும் இடிக்க முயற்சித்த கூட்டம் அல்லவா இவர்கள்?
நம்மைப் பொறுத்தவரை எந்த மதத்தினையும் ஆதரிப்பவர்கள் அல்லர். ஆனால் இரட்டை வேடம் எதற்கு என்பதற்காகத்தான் இதனைச் சுட்டிக் காட்டுகிறோம்! நடைபாதைக் கோயில்கள் ஆக்கிரமிப்புகள் அதன் மூலம் தனியார் கொள்ளையடிக்கும் பக்தி வியாபாரக் கடைகள் ஆகும்! ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்டதா? 1971 ஆம் ஆண்டிலேயே புதிதாகக் கோயில் கட்டுவதற்கு முன் அரசு அனுமதி பெறவேண்டும் என்ற அரசு சுற்றறிக்கையே உண்டு.
இடித்துத் தள்ளப்படவேண்டிய இந்த ஆக்கிரமிப்பு நிலையங்கள் ஆகம விதிகளின்படி அமைக்கப்பட்ட கோயில்கள் அல்லவே!மனிதர்கள் வாழும் கட்டடங்களையே அரசுகள் இடித்துத் தள்ள முன்வரும்போது, இந்த கல்சாமிகளைக் காட்டி பல ஆசாமிகள் பக்திச் சுரண்டலை நடத்த அனுமதிக்கலாமா?
உச்சநீதிமன்ற ஆணைப்படி உடனடியாக இந்த அடாவடிக் கோயில்கள் இடித்துத் தள்ளப் படுவதற்கு ஏன் ஆட்சேபணை? இப்படிச் சொன்னால் கடவுள் நம்பிக்கையாளர்கள் - இந்து வாக்கு வங்கி தங்களுக்குக் கிடைக்கும் என்று மனப்பால் குடிக்கவேண்டாம்! மக்கள் வளர்ச்சியைத்தான் ஆதரிப்பார்கள்.தி.மு.க. அரசு குடிசைகளை அகற்றி கான்கிரீட் வீடுகளைக் கட்டித் தருகிறது, அதற்கு இடையூறு செய்யும் ஆக்கிரமிப்புகளை அகற்றித்தானே செய்ய முடியும்? எனவே தயவு தாட்சண்யம் பாராமல் உடனடியாக அந்தப் பணிகளைச் செய்ய அரசு முன் வர-வேண்டும்.ஓட்டுப் பயம் அர்த்தமற்றது; நாட்டு வளர்ச்சிக் கண்ணோட்டமே அவசரத் தேவை! பாவம் அரசியல் நடத்த எந்தப் பிரச்சினையும் சிக்காததால் இந்தத் துரும்பைப் பிடித்தாவது வெள்ளத்தில் இருந்து கரையேற நினைக்கின்றனர்! இது கைகொடுக்காது.
நன்றி : திராவிடர் கழகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment