சத்தீஷ்கர் மாநிலத்தில் தண்டேவாடாவில் 76 துணை ராணுவப்படையினர் மாவோயிஸ்டுகளால் கொல்லப்பட்டதற்கு பொறுப்பேற்று ராஜினாமாச் செய்ய தீர்மானித்த மத்திய உள்துறை அமைச்சரின் முடிவை பிரதமர் மன்மோகன்சிங் ஏற்க மறுத்துவிட்டார். பின்னர் ப.சிதம்பரம் தனது ராஜினாமாவைப் பற்றி, 'அது முடிந்துபோன ஒன்று' என்று கூறி பதவியில் தொடர முடிவெடுத்துள்ளார்.
ப.சிதம்பரத்தின் ராஜினாமாவால் இந்தியாவில் மாவோயிஸ்டுகளின் பிரச்சனை முடிந்துவிடப்போவதில்லை என்பது சந்தேகமற யாவரும் அறிந்த விஷயம்தான். பிரச்சனையின் மூலக்காரணத்தை கண்டறிந்து அதற்குத் தேவையான நிவாரணத்தை அளிக்காவிட்டால் இந்திய தேசம் இக்கட்டான சூழலுக்கு தள்ளப்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஆயுதப்படையினருக்கு மிகச்சிறந்த பயிற்சியை அளிப்பதனாலோ, இஸ்ரேலிய ஆயுதங்களை வாங்கி சேகரிப்பதனாலோ வாழ்க்கையின் விளிம்பில் நிற்கும் மிகவும் ஏழ்மைநிலையிலுள்ள பழங்குடி மக்களையும், தலித்துகளையும் குண்டுவீசி கொல்வதன் மூலமோ மாவோயிஸ்டுகளின் பிரச்சனை தீரப்போவதில்லை.
சில அனுபவங்கள் மூலம் பெற்ற படிப்பினைகள் ஜார்கண்ட், சத்தீஷ்கர், ஒரிஸ்ஸா, மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களில் வசிப்பிடமாகக் கொண்டிருக்கும் அம்மனிதர்களை மாற்றியோசிக்க தூண்டும். ஆனால் இத்தகைய ஊகங்களைவிட உண்மை என்னவெனில் அவர்களை முறியடிப்பதில் ஏற்படும் தடங்கல்கள். இந்த எதார்த்தங்களை புரியாமல் தரைப்படைக்கு பதிலாக விமானப்படையை அனுப்பி நா பாம்களை வீசினாலும், நக்ஸல்களின் அட்டகாசம், மாவோயிஸ்டுகளின் மிரட்டல் என்றுக்கூறப்படும் பிரச்சனை முடிவுக்கு வராது.
பல அடக்குமுறைகளும், அழித்தொழிப்புகளும் இதற்கு முன்பும் நடைப்பெற்றதுதான். ஆனால் என்ன நடந்தது, கூடுதல் பலத்துடன் அவர்கள் பதிலடி தந்தார்களே தவிர இந்திய அரசின் பாதுகாப்புப் படையினரைக் கண்டு பயந்து ஓடவோ, தங்களது நடவடிக்கைகளை நிறுத்தவோ செய்யவில்லை. கனிம வளங்கள் நிறைந்த அவர்களுடைய வசிப்பிடங்களை விட்டு ஏன் அவர்களை அந்நியராக்கப்படுகின்றார்கள் என்பது குறித்துதான் சிதம்பரம் போன்ற புத்திஜீவிகள் படிக்கவேண்டிய அடிப்படை பாடமாகும்.
இந்திய தேசத்திற்கு சுதந்திரம் கிடைத்து 63 ஆண்டுகளான பின்னரும் ஏன் இந்த மக்களின் பரிதாப சூழலுக்கு பரிகாரம் காணப்படவில்லை. பல்வேறு மாநிலங்களில் பரவிக்கிடக்கும் கனிம வளங்களை முதலாளித்துவ சக்திகளுக்கு தோண்டியெடுக்கவும், விற்பனைச்செய்யவும் துணைநிற்கும் மேல்தட்டு அரசியல் வாதிகளுக்கு இம்மக்களோடு எந்தவொரு கவலையுமில்லை. சத்தீஷ்கரில் பா.ஜ.க தான் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது. சிதம்பரம் ராஜினாமாச் செய்தால் மாவோயிஸ்டுகள் தாக்குதலுக்குரிய பொறுப்பை சுமக்கவேண்டிய நிலை ஏற்படும். பின்னர் அது விவாதத்தை கிளப்பும். அதனால்தான் ப.சிதம்பரத்துக்கு ஆதரவாக பா.ஜ.க களமிறங்கியுள்ளது.
ஆனால் ஒன்று மட்டும் உறுதி, அடிப்படைப் பிரச்சனைகளை ஆராயாமல் இதர பரிகார நடவடிக்கைகள் இருளைக் கொண்டு ஓட்டையை அடைப்பதற்கு சமம். தமிழில் ஒரு பழமொழி கூறுவார்களே 'எண்ணிச் செய்கிறவன் செட்டி, எண்ணாமல் செய்கிறவன் மட்டி' என்று அதைப்போன்ற நிலைமைதான் ஏற்படும்.
விமர்சகன் :நன்றி :செய்திகள் பாலைவன தூது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment