Mar 12, 2010

இதுவரை இந்திய பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகித்த முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை வெறும் 14 மட்டுமே.

புதுடெல்லி:சட்டமியற்றும் சபைகளில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் குறைவதற்கு காரணம் கல்வியில் பின் தங்கிய நிலை அல்ல என்றும், அவர்களை வேண்டுமென்றே புறக்கணித்தது தான் காரணம் என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.சுதந்திரம் அடைந்ததிலிருந்து இதுவரை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் வகித்த முஸ்லிம் பெண்களின் எண்ணிக்கை வெறும் 14 மட்டுமே.

கல்வி,சமூக, பொருளாதார துறைகளில் முஸ்லிம் பெண்கள் ஓரளவு முன்னேற்றமடைந்திருந்தாலும் சூழ்நிலைகளில் எவ்வித மாற்றமும் வரவில்லை. 545 உறுப்பினர்கள் கொண்ட தற்போதைய பாராளுமன்றத்தில் 3 முஸ்லிம் பெண் எம்.பிக்கள் மட்டுமே உள்ளனர். மேற்கு வங்காளத்தில் மால்தா தொகுதியிலிருந்து காங்கிரஸ் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட மெளஸம் நூர், உத்தரபிரதேசத்தில் ஸீதாபூரிலிருந்து பகுஜன் சமாஜ் கட்சி எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கவுஸர் ஜஹான், உ.பியில் கய்ரானா தொகுதியிலிருந்து பகுஜன் சமாஜ் கட்சி எம்.பியா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தபஸ்ஸும் பேகம் ஆகியோராவர். மக்களவையில் மொத்தம் பெண் எம்.பிக்களின் எண்ணிக்கை 59 ஆகும்.

1984 ஆம் ஆண்டு முஸ்லிம் எம்.பிக்களின் எண்ணிக்கை 48 ஆக இருந்தது. 26 வருடங்கள் முடிவடைந்த நிலையில் அவ்வெண்ணிக்கை 29 ஆக சுருங்கியுள்ளது. நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 16 சதவீதத்திற்கும் அதிகமாக வரும் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் 5.52 சதவீதம் மட்டுமே. தற்போதுள்ள 29 எம்.பிக்களில் 11 பேர் காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்.நாட்டின் பெரிய மாநிலங்களான மத்தியபிரதேசம், பஞ்சாப், குஜராத், ஹரியானா ஆகியவற்றிலிருந்து பெயரளவிற்கு கூட ஒரு முஸ்லிமும் எம்.பியாக இல்லை.

நாட்டின் சட்டமியற்றும் சபைகளில் மூன்றில் ஒரு பகுதியை பெண்களுக்காக ஒதுக்கீடுச் செய்யும் பொழுது அதில் ஒரு பகுதியை முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளுக்கு ஒதுக்கவேண்டும் என்று முலாயாம் சிங் யாதவ், லாலு பிரசாத் யாதவ் மற்றும் முஸ்லிம், ஒடுக்கப்பட்ட மக்களின் அமைப்புகளும் கோருகின்றன. ஆனால் இக்கோரிக்கையை பிரபல அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன.

முஸ்லிம்களின் அரசியல் சமூக பிரதிநிதித்துவம் மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருப்பதாக சச்சார் கமிஷன் அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. சிறுபான்மையினரின் விருப்பம் எதிர்காலத்தில் பரிசீலிக்கப்படும் என்று ராஜ்யசபையில் பெண்கள் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறிய பின்னர் பிரதமர் கூறியிருந்தார். முன்னேற்றத்தின் பங்கு சிறுபான்மையினருக்கு கிடைப்பதில்லை என்றும், எல்லா வகையிலான பாரபட்சங்களையும் இல்லாமலாக்குவதற்கு முடிந்தளவு முயற்சிப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

பல்வேறு கமிஷன் அறிக்கைகளின் பரிந்துரைகளின் படி முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்படும் என்றும் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்திருந்தது.

செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்

No comments: