Feb 27, 2010

இறைத்தூதர் பற்றிய கார்ட்டூன்: வருத்தம் தெரிவித்தது டென்மார்க் பத்திரிக்கை.

கோபன்ஹெகன்:நபி(ஸல்..) அவர்களைப் பற்றிய கார்ட்டூன் வரைந்து உலக முஸ்லிம்களின் மனவருத்தத்திற்கும், கோபத்திற்கும் ஆளான டென்மார்க் பத்திரிகையான பொலிட்டிக்கன் கார்ட்டூன் பிரசுரித்ததில் எவருடைய மனதை பாதித்திருந்தால் அதற்காக வருத்தம் தெரிவிப்பதாக கூறியுள்ளது.

2006 ஆம் ஆண்டு நபி(ஸல்...) அவர்களைப் பற்றி கார்ட்டூன் வரைந்தவர் கூர்ட் வெஸ்ட்கார்டு. இவருக்கெதிராக கொலை முயற்சித் தாக்குதல் நடந்தது. இதனைத் தொடர்ந்து 2008 ஆம் ஆண்டு பொலிடிக்கன் உள்ளிட்ட டென்மார்க் பத்திரிகைகள் நபிகளார் பற்றிய கார்ட்டூன்களை வெளியிட்டு உலக முஸ்லிம்களை கோபத்திற்கு காரணமாயின. இதற்குத் தான் இப்பத்திரிகை வருத்தம் தெரிவித்துள்ளது.

ஆனால் நபிகளாரின் கேலிச்சித்திரங்களை வரைந்த கூர்ட் வெஸ்ட்கார்டின் கார்ட்டூன்களை வெளியிட பத்திரிகைக்கு உரிமை உண்டு என எடிட்டர் டோகர் சிதன்ஃபேதன் கூறுகிறார். நம்பிக்கையாளர்களுக்கு வேதனை ஏற்பட்டிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்பதாகவும், ஆனால் எல்லாவிதமான கார்ட்டூன்களையும் வெளியிடுவதற்கான உரிமை நிலை நிற்பதாகவும் சிதன்ஃபேதன் தெரிவித்துள்ளார்.

மத்திய ஆசியாவிலும், ஆஸ்திரேலியாவிலும் டென்மார்க் நிறுவனங்களுக் கெதிராக நடைபெறும் எதிர்ப்புகளை சமாளிக்கத் தான் பொலிட்டிக்கன் பத்திரிகையின் இந்த வருத்தம். ஆனால் பொலிட்டிக்கன் பத்திரிகையின் இந்நடவடிக்கைக்கு டென்மார்க்கிலிலுள்ள இதர பத்திரிகைகள் கண்டனம் தெரிவித்துள்ளன. பத்திரிகை சுதந்திரத்தின் எதிரிகளுக்கு முன்பு மண்டியிட்ட நடவடிக்கையை பொலிட்டிக்கன் செய்தததாக டென்மார்க் பத்திரிகையாளர் யூனியன் குற்றஞ் சுமத்துகிறது. பத்திரிகையில் கார்ட்டூன் வரைந்த வெஸ்ட்கார்டும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார். இது பத்திரிகை சுதந்திரத்திற்கு ஏற்பட்ட முட்டுக்கட்டை என வெஸ்ட்கார்டு தெரிவிக்கிறார்.

No comments: