Feb 20, 2010

ஆடையின்றி நிர்வாணமாக இருப்பது முன்னேற்றத்தின் அடையாளமாக கருதப்படுகிறது: பத்திரிகையாளர் எம்.ஜே.அக்பர்.


ஹைதராபாத்:முஸ்லிம்கள் அரசுகளிடம் பிச்சைக் கேட்கவில்லை. அவர்கள் தங்களது உரிமைகளை கேட்டுப்பெற தயங்கக்கூடாது. ஏனெனில் இடஒதுக்கீடு நமது உரிமையாகும் என பிரபல பத்திரிகையாளரான எம்.ஜே.அக்பர் ஹைதராபாத்தில் உள்ள மவ்லான ஆஸாத் தேசிய உருது பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 21 ஆம் நூற்றாண்டில் உருது ஊடகங்களுக்கான சவால்களும் வாய்ப்புகளும் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தும் பொழுது குறிப்பிட்டார்.

மேலும் அவர் உரையாற்றியதாவது: "பிற ஒடுக்கப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கெல்லாம் பாதுகாப்பும் மற்ற எல்லா வசதிகளும் கிடைக்கும் பொழுது முஸ்லிம்கள் மட்டும் ஏன் கிடைப்பதில்லை? முஸ்லிம்கள் இந்நாட்டை பல நூற்றாண்டுகளாக ஆட்சிப்புரிந்துள்ளார்கள். ஆனால் தற்ப்பொழுது தன்னம்பிக்கையை இழந்துள்ளார்கள்.

மாணவர்கள் பத்திரிகைத்துறை படிப்பை பீதியை ஏற்படுத்துவதற்கும், பிறரை திருப்திப்படுத்தவும் பயன்படுத்தக்கூடாது. மாறாக ஒடுக்கி அடக்கப்பட்ட முஸ்லிம்களுக்காக பயன்படுத்துங்கள். இன்றைய சூழல் நாகரீக வரலாற்றின் மிக இக்கட்டானதொரு காலக்கட்டமாகும். ஆடையின்றி நிர்வாணமாக இருப்பது முன்னேற்றத்தின் அடையாளமாக கருதப்படுகிறது. ஆனால் தலையை மறைப்பது பிற்போக்குத்தனமாக கருதப்படுகின்றது.

நவீனப்படுத்துதலின் பொருள் அரசியலில் சம உரிமை, மத சார்பின்மை மற்றும் பாலின சமத்துவமுமாகும். ஆனால் இவையெல்லாம் இஸ்லாமிய கல்வியின் ஒரு பகுதிகளாகும்.
மேற்குவங்காள அரசு 10 சதவீத இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்கியிருப்பதை வரவேற்கிறேன். ஆனால் இவ்விஷயத்தில் மே.வங்க அரசு உண்மையுடன் நடந்துக் கொள்ள வேண்டும். மேலும் இவ்விஷயத்தில் போதுமான நம்பத்தகுந்த காரணங்களை முன்வைக்க வேண்டும் இல்லாவிட்டால் நீதிமன்றத்தில் தள்ளுபடிச் செய்யப்பட்டு விடும்." இவ்வாறு அவர் உரை நிகழ்த்தினார்.

No comments: