Feb 13, 2010

விண்கல் யாருக்கு சொந்தம்..?அமெரிக்காவில் குடுமிச் சண்டை.


வாஷிங்டன் வாடகைக்கு குடியிருப்பவர்களுக்கும், நிலத்துச் சொந்தக்காரருக்கும் இடையில் சண்டையை மூட்டி விட்டிருக்கிறது வானத்தில் இருந்து விழுந்த ஒரு விண்கல்.

அமெரிக்காவில், வாஷிங்டன் புறநகர்ப் பகுதியில், "விர்ஜினியா மருத்துவ அலுவலகம்' வாடகைக்கு இயங்கி வருகிறது. அதை நடத்துபவர்கள் டாக்டர் மார்க் கல்லினி மற்றும் பிராங்க் சியாம்பி எனும் இருவர். ஜனவரி மாதம் 18ம் தேதி மாலையில், டென்னிஸ் பந்து அளவு உள்ள ஒரு விண்கல், அலுவலகத்தின் கூரையைப் பிய்த்துக் கொண்டு உள்ளே வந்து விழுந்தது.அது விண்கல் தான் என்பதை உணர்ந்து கொண்ட இருவரும், அதை இரண்டரை லட்ச ரூபாய்க்கு கேட்ட ஸ்மித்சானியன் இன்ஸ்டிடியூஷனுக்கு விற்று விட்டனர். அந்நிறுவனம் பாதுகாப்பு கருதி, விண்கல்லை தேசிய பொருட்காட்சிச் சாலைக்கு அனுப்பி வைத்தது.

இதற்கிடையில், சுற்றுவட்டாரத்தில் செய்தி பரவி விண்கல்லின் மதிப்பு "விண்' என்று எகிற ஆரம்பித்து விட்டது. அங்கிருந்த மக்கள் எல்லாம், தினசரி மாலைகளில் விண்கல் கிடக்கிறதா என்று தேட ஆரம்பித்து விட்டனர். இதைக் கேள்விப்பட்ட வீட்டின் சொந்தக்காரர் அந்த விண்கல்லுக்கு உரிமை கொண்டாட வந்துவிட்டார். இதனால், மனம் நொந்துபோன கல்லினி, "அமெரிக்க கோர்ட்டுகள், விண்கல் எந்த நிலத்தில் விழுகிறதோ அது அந்த நிலத்து உரிமையாளருக்குத்தான் சொந்தம் என்று சட்டம் வைத்திருக்கின்றன' என்று புலம்பிக் கொண்டிருக்கிறார். "அதெல்லாம் இல்லை... சட்டம் கல்லினிக்குத்தான் சாதகமாக இருக்கிறது' என்று ஆறுதல் சொல்லிக் கொண்டிருக்கிறார் கல்லினியின் வக்கீல்.

No comments: