புதுடெல்லி:2002 குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையின் போதும் அதற்கு முன்பும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நடத்திய சர்ச்சைக்குரிய விமர்சனங்கள் உட்பட சிறப்பு புலனாய்வுக்குழு கேட்ட அனைத்து விபரங்களையும் உடனடியாக ஒப்படைக்க வேண்டுமென சுப்ரீம் கோர்ட் நரேந்திரமோடி அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இனப்படுகொலைத் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் எஸ்.ஐ.டி வருகிற ஏப்ரல் 30 தேதிக்குள் இறுதி அறிக்கையை ஒப்படைக்க வேண்டுமென்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இவ்வளவு காலமாக ஆதாரங்களை ஒப்படைக்காத நரேந்திரமோடி அரசை சுப்ரீம் கோர்ட் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தது.
எஸ்.ஐ.டி கோரும் ஆதாரங்கள் புலனாய்வு சம்பந்தபட்டது அல்ல என்ற நரேந்திரமோடி அரசின் வாதத்தை ஏற்றுக்கொள்ள இயலாது என்று நீதிபதிகளான டி.கே.ஜெயின், அஃப்தாப் ஆலம், பி.சதாசிவம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் கூறியது. ஆதாரங்களை ஒப்படைக்க நரேந்திரமோடி அரசு ஏன் தயங்குகிறது என நீதிபதிகள் கேள்வியெழுப்பினர். நரேந்திர மோடி நடத்திய விமர்சனங்களுக்கு முக்கியத்துவம் உண்டு என எஸ்.ஐ.டி சுட்டிக்காட்டுகிறது எனவே ஆதாரங்களை ஒப்படைப்பதற்கு காலதாமதம் செய்யக்கூடாது என நீதிபதிகள் கூறினர்.
மோடியின் உரைகள், மத்திய அரசுக்கு அளித்த ரகசிய புலனாய்வு அறிக்கை உள்ளிட்ட எஸ்.ஐ.டி கோரிய 14 ஆதாரங்களில் ஒன்றை மட்டுமே மோடி அரசு இதுவரை ஒப்படைத்துள்ளது.
தாங்கள் கோரிய ஆதாரங்களை இதுவரை மோடி அரசு ஒப்படைக்கவில்லை என்று கூறி எஸ்.ஐ.டி சுப்ரீம் கோர்ட்டில் புகார் மனு அளித்திருந்தது. முன்னாள் சி.பி.ஐ இயக்குநர் ஆர்.கே.ராகவன் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழு(எஸ்.ஐ.டி) தற்காலிக அறிக்கையை சமர்ப்பித்துக் கொண்டுதான் மோடி அரசு புலனாய்வில் ஒத்துழைக்கவில்லை என்று தெளிவுப்படுத்தியது.
இதைத் தொடர்ந்துதான் சுப்ரீம் கோர்ட் ஆதாரங்கள் அனைத்தையும் உடனடியாக ஒப்படைக்குமாறு மோடி அரசிற்கும் புலனாய்வு விசாரணை அறிக்கையை வருகிற ஏப்ரல் 30 ஆம் தேதிக்குள் ஒப்படைக்குமாறு எஸ்.ஐ.டி க்கும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.
முன்னாள் எம்.பி இஹ்ஸான் ஜாஃப்ரி கொலை நடந்த குல்பர்கா சொசைட்டி இனப்படுகொலை, நரோடா பாட்டியா இனப்படுகொலை உள்ளிட்ட 10 வழக்குகளை எஸ்.ஐ.டி புலனாய்வுச் செய்து வருகிறது.
நரேந்திரமோடி, 11 அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் உட்பட்டவர்களின் இனப்படுகொலையில் பங்குக் குறித்தும் எஸ்.ஐ.டி விசாரித்து வருகிறது.
செய்தி:நன்றி தேஜஸ் மலையாள நாளிதழ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment