Dec 3, 2009
உலகின் மிக மோசமான விபத்து போபால் துயரம் – 25 ஆண்டுகள் நிறைவு
1984 டிசம்பர் 2 ம் தேதி இரவு 10 மணி.
மத்தியப் பிரதேச மாநிலம், போபால் நகரில் உள்ள யூனியன் கார்பைட் நிறுவனத்தின் கொள்கலன் 610-ல் தண்ணீர் கலக்கிறது. அந்த டேங்க்கில் இருந்த 42 டன் மீதைல் ஐசோசயனைட், இந்தத் தண்ணீர் பட்டதும் வேதியியல் மாற்றம் அடைகிறது. 200 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் உயர்கிறது. அழுத்தம் தாங்காமல் கொள்கலனின் பாதுகாப்பு மூடிகள் திறந்து கொள்கின்றன. நள்ளிரவில் விஷவாயு வெளியேறிப் பரவுகிறது...போபால் நகர் முழுவதும்!
அப்போது அந்நகரின் மக்கள் தொகை 5.2 லட்சம். இவர்களில் 2 லட்சம் பேர் சிறுவர்கள். 3000 பேர் கருவுற்ற தாய்மார்கள்.
டிசம்பர்-3ம் தேதி காலை போபால் நகர மக்கள் அனைவரும் கண்ணெரிச்சல், மூச்சடைப்புடன் கண்விழிக்கின்றனர். அன்றைய ஒரு நாளில் மட்டும் சுமார் 4000 பேர் இறந்தனர் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
உண்மையில், இறந்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு என்று சொல்லப்படுகிறது. அடுத்த 72 மணி நேரத்தில் இறந்தவர்கள் சுமார் 10,000 பேர். இதன் பாதிப்பால் மெல்லச் செத்தவர்கள் 25,000 பேர்.
இன்னமும் சாகாமல் இருக்கும் இரண்டு விஷயங்களில் முதலாவது, போபால் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெறும், யூனியன் கார்பைடு நிறுவனத்தின் மீதான வழக்கு ஒன்றுதான். இரண்டாவதாக, யூனியன் கார்பைடு விட்டுச்சென்ற 390 டன் நச்சு வேதிப்பொருள்கள் இன்னமும் போபாலின் நிலத்தடி நீரைக் கெடுத்துக் கொண்டிருக்கிறது.
25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த இவ்விபத்தால் பாதிக்கப்பட்டோரின் பட்டியலில் இன்றும் எண்ணி்க்கை கூடிக் கொண்டிருக்கிறது. நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமல்லாது, அவர்களின் வம்சமே தண்டனையை அனுபவி்த்து வருகிறது.
விபத்து நடந்த போது யூனியன் கார்பைடு தலைவராக இருந்த ஆண்டர்சனை கைது செய்ய உள்ளூர் நீதிமன்றம் பலமுறை வாரண்ட் பிறப்பித்தது.
ஆனால், ஆனால், மத்திய புலனாய்வுத்துறை அவரை இந்தியாவுக்கு கொண்டுவர எந்த நடவடிக்கையும் பிறப்பிக்கப்படவில்லை. இந்திய அரசினால் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட ஆண்டர்சன் இன்னமும் நியூயார்க் அருகில் உள்ள தீவு ஒன்றில் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்.
உச்சநீதிமன்ற தலையீட்டால், யூனியன் கார்பைடு நிறுவனம் நஷ்ட ஈடாக தந்த ரூ.715 கோடியை பெற்றுக்கொண்டு மத்திய அரசு அடங்கிவிட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதில் இன்றளவும் குளறுபடிகள், ஊழல் புகார்கள் இருந்துவருகின்றன.
1989ம் ஆண்டு பிப்ரவரி 15ம்தேதி உச்சநீதிமன்றத் தின் தலையீடு காரணமாக ஏற்பட்ட உடன்பாட்டின் படி யூனியன் கார்பைடு நிறுவனம் ரூ.715 கோடி வழங்க வகை செய்தது. அரசுக் கணக்குப்படி 3 ஆயிரம் பேர் இறந்துள்ளனர். ஒரு லட்சத்து 2 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தொகை எந்த வகை யிலும் போதுமானது அல்ல என்பது ஒருபுறமிருக்க, இதுவும் கூட முறையாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்படவில்லை என்று போபால் விபத்தால் பாதிக்கப்பட்டோர் அமைப்பின் தலைவர் அப்துல் ஜப் பார் கூறியுள்ளார்.
இதனால் இறந்தவர் குடும்பத்திற்கு தலா 1 லட்சம் ரூபாயும், பாதிக்கப்பட்ட வர்களுக்கு ரூ.25 ஆயிரமும் மட்டும்தான் 1992ம் ஆண்டு முதல் 2004ம் ஆண்டு வரை வழங்கப்பட்டுள்ளது என் றும் அவர் கூறினார். போபால் விஷவாயுவால் இறந்தோர் நினைவாக ரூ.114 கோடி செலவில் நினைவகம் அமைக் கப்போவதாக மத்திய அரசும், மத்தியப்பிரதேச அரசும் அறிவித்துள்ளன. இறந்தவர்களுக்கு நினைவகம் அமைப்பதை விட இன்னமும் உயிரோடு இருந்து சித்ரவதைப் பட்டுக் கொண்டிருக்கும் மக்களுக்கு இந்த தொகையை தரலாம் என்று தன்னார்வ அமைப்புகள் கூறியுள்ளன.
போபால் விஷவாயு விபத்து மாநிலங்களவையில் புதனன்று எதிரொலித்தது. மத்திய அரசும், மத்தியப்பிரதேச அரசும் பாதிக்கப்பட்டோர்களுக்கு உரிய நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டுமென்று மாநிலங்களவைத் தலைவர் அன்சாரி வலியுறுத்தினார். இந்திய மக்களை என்றென்றைக்கும் உறுத்திக் கொண் டிருக்கும் ஒரு நிகழ்வாக போபால் பயங்கரம் உள்ளது. பாதிக்கப்பட்டவர் களுக்கு இன்னமும் கூட உரிய நிவாரணம் கிடைக்கா மல் இருப்பது அதை விட உறுத்தலாக உள்ளது என்று அன்சாரி கூறினார்.
எனினும், இன்று நாடாளுமன்றத்தில் போபால் சம்பவத்துக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டுவிட்டது. நிவாரணம் வழங்குவதில் உள்ள சிக்கல்கள் தீர்க்கப்பட்டு அனைவருக்கும் நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படு்ம் என பிரதமர் மன்மோகன் ஏற்கனவே அறிக்கை வெளியி்ட்டுவிட்டார்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment