Nov 15, 2009
நக்ஸல்கள் ஆண்டு வருமானம் ரூ.1500 கோடி
அரசுக்கு எதிராகப் போராடி வரும் நக்ஸல்கள், தங்கள் ஆதிக்கப் பகுதிகளில் வசூலித்து வரும் "வரி' தொகையை உயர்த்தி இருக்கின்றனர். அவர்கள் ஆண்டுக்கு ரூ.1500 கோடி வரை வரி வசூல் செய்வதாகத் தெரியவந்துள்ளது.
ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பிகார், ஆந்திரம், ஒரிசா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் நக்ஸல்கள் செயல்பட்டு வருகின்றனர். இந்த மாநிலங்களில் இவர்கள் அரசுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டு, ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். சில நேரங்களில் தங்கள் பகுதி போலீஸ் நிலையங்களைத் தாக்கி, துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்களை கொள்ளையடித்துச் செல்கின்றனர்.
நக்ஸல்கள் ஆதிக்கப் பகுதிகளில் உள்ள வர்த்தகர்கள், கான்டிராக்டர்கள் மட்டுமல்லாது தொழிற்சாலைகளும் தேசிய அளவில் பிரபலமான நிறுவனங்களும் வரி செலுத்தி இருப்பதுவும் கண்டுபிடிக்க பட்டுள்ளது. ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மது கோடாவும் நக்ஸல்களுக்கு தொடர்ந்து பெருமளவில் பணம் கொடுத்து வந்ததாக புகார் உள்ளது. மாதம் ஒரு முறை அல்லது ஆண்டுக்கு ஒரு முறை என்ற அடிப்படையில்,வசூல் செய்யும் தொகைக்கு நக்ஸல்கள் ரசீது வழங்கியிருக்கின்றனர்.இந்த வகையில் நக்ஸல்கள் ஆண்டுக்கு ரூ.1500 கோடி வரை வரி வசூல் செய்வதாகத் தெரியவந்துள்ளது.
தற்போது நக்ஸல்கள் வெளிநாட்டு ஆயுதங்களை வாங்கிப் பயன்படுத்தும் வகையில் தங்கள் உத்தியை மாற்றிக் கொண்டுள்ளதாகத் தெரிகிறது. அதற்காகவே, வரி தொகையை அவர்கள் உயர்த்தி இருக்கலாம் என்றும் அந்த வட்டாரம் கருத்து தெரிவித்துள்ளது.
ஜார்க்கண்டில் சிபிஐ மாவோயிஸ்ட் நக்ஸல்கள் குழுதான் பெரிய குழுவாகக் கருதப்படுகிறது. அத்துடன் சிறு சிறு குழுக்களும் செயல்பட்டு வருகின்றன. இவர்கள் ஆள் கடத்தல், போதைப் பொருள் கடத்தல், கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுவதுடன் வரி வசூலிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வகையில் ஜார்க்கண்ட் மாநிலத்தில் மட்டும் ஆண்டுக்கு ரூ.300 கோடி வரை வசூலாகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment