May 21, 2015

எகிப்தில் ராணுவம் நடாத்தும் பயங்கரவாதம்!

எகிப்தில் முன்னாள் அதிபர் முஹம்மது முர்சி மற்றும் புகழ் பெற்ற இஸ்லாமிய மார்க்க அறிஞர் டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோருக்கு மரணத் தண்டனை விதித்ததை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா டெல்லியில் உள்ள எகிப்து தூதரகம் நோக்கி கண்டன பேரணியை நடத்தியது.பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் டெல்லி மாநில கமிட்டியின் தலைமையில் இப்பேரணி நடைபெற்றது.
பேரணியில் கலந்துகொண்டு பேசிய டெல்லி மாநில பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் பர்வேஸ் அஹ்மது ஆற்றிய உரையில்,’ஜனநாயகம் என்பது ஒவ்வொரு மனிதர்கள் மற்றும் சமூகத்தின் அடிப்படை உரிமையாகும். ஒவ்வொரு பிரச்சனையிலும் தங்களது கருத்துக்களை வெளியிட அனுமதி உள்ள மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் குடிமக்களாகிய நமக்கு, எகிப்தில் ஜனநாயக சக்திகள் சிறை மற்றும் மரணத்தண்டனையை எதிர்நோக்கியுள்ளது கவலை அளிக்கிறது.
அரபு வசந்தம், அப்பகுதியில் ஜனநாயக மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை இருந்தது.ஆனால், முர்ஸியின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு பலகீனமான ஆதாரங்களின் அடிப்படையில் கூட்டு மரணத்தண்டனையை ராணுவ அரசு நிறைவேற்றுவதை காண நேர்ந்துள்ளது. எகிப்தில் சிறையில் அடைத்துள்ள அனைவரையும் விடுதலைச் செய்யவேண்டும்’ என்று கூறினார். மேலும் இப்பேரணியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மக்கள் தொடர்பு இயக்குநர் முஹம்மது ஆரிஃபும் உரையாற்றினார்.
தூதரகத்திற்கு சற்று முன்பாக போலீஸ் பேரணியை தடுத்து நிறுத்தியது. பாப்புலர் ஃப்ரண்டின் தலைவர்கள் எகிப்து தூதரக அதிகாரிகளை சந்திக்க சென்றனர். ஆனால், தூதரகத்தில் உள்ள வேறு அதிகாரிகளை சந்திக்கவே அனுமதிக்கப்பட்டனர். அவர்களிடம் பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர்கள்,’தேர்ந்தெடுக்கப்பட்ட  எகிப்தின் அதிபரான முர்ஸி மற்றும் புகழ் பெற்ற இஸ்லாமிய அறிஞர் ஷேக் யூசுஃப் அல் கர்ளாவி உள்ளிட்ட நுற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு விதிக்கப்பட்ட மரணத் தண்டனை நீதித்துறையை கேலிக்கூத்தாக்குவதாகும். எகிப்தில் ஜனநாயகம் புதைக்கப்படுவதை நிறுத்தவேண்டும். அனைத்து எகிப்திய ஜனநாயகவாதிகளையும் சிறைகளிலிருந்து விடுவிக்கவேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர். 

No comments: