Jul 14, 2012

உயிருக்கு உலைவைக்கும் கலர் கலர்!?


உணவுப் பொருட்கள் மற்றும் குளிர்பானம், ஸ்வீட், ஜாம், கேக் வகைகள் பிஸ்கெட்டுகள், ரோஸ்மில்க் பாக்கெட்டில் அடைத்து விற்கப்படும் குழந்தை உணவுகள், கேசரி போன்றவற்றில் அளவுக்கு அதிகம் கலர் கெமிக்கல் சேர்க்கப்படுகிறது. இந்த கலர் கெமிக்கல்கள் பெரும்பாலும் நிலக்கரி தாரிலிருந்தும், பெட்ரோலில் இருந்தும் பிரித்து எடுக்கப்பட்டு உணவு பொருட்களில் சேர்க்கப்படுகின்றன.
இவைகளை தொடர்ந்து நீண்ட காலம் சாப்பிட்டு வந்தால் உயிருக்கே பேராபத்தாக மாறிவிடும் அபாயம் உள்ளது. கலர் கெமிக்கல்களால் கேன்சர், ஆஸ்துமா, சோரியாசிஸ், தோல் அலற்சி, நரம்பு மண்டலம் பாதிப்பு, குடல்புண், குடல் புற்றுநோய், சிறுநீரக கோளாறு, வயிற்றுவலி, சைனஸ், சிறுநீரக கட்டி, ரத்தக்குழாய் சுருங்குதல், வாந்திபேதி, மூளையில் கட்டி, ரத்த அழுத்தம், குறை பிரசவம், ஆட்டிசம், குறைபாடான குழந்தை பேறு போன்ற நோய்கள் உண்டாகிறது என்கிறார் சென்னையின் பிரபல  டாக்டர் திருத்தணிகாசலம்.
 இனிப்பு வகைகள்: ஒரு சில ஸ்வீட் கடைகளில் விற்பனை செய்யப்படும் ஸ்வீட்களில் கணக்கு வழக்கில்லாமல் கெமிக்கல் பொடியை கலந்து பலவிதமான நிறங்கள் உள்ள இனிப்புகள் தயார் செய்யப்படுகின்றன. அதை போன்றே கேக் வகைகளிலும் நிறத்துக்காகவும் பஞ்சு போன்று இருக்க வேண்டும் என்பதற்காகவும் தோல் பாதிப்பு, செரிமான கோளாறு போன்றவற்றை உண்டாக்கும்.
விஷவாயுவால் பழுக்க வைக்கப்படும் பழங்கள்: சல்பர் டை ஆக்சைடு என்ற கொடிய விஷ வாயுவை பயன்படுத்தி வாழைப்பழம், பப்பாளி, மாம்பழம், ஆஸ்திரேலிய ஆரஞ்சு போன்ற பழங்கள் பழுக்க வைக்கப்படுகின்றது. இந்த முறையால் பழங்களை பழுக்க வைத்தால் பழங்களில் உள்ள வைட்டமின் பி1 சத்து முற்றாக அழிக்கப்பட்டு விடும். சல்பைட் அலர்ஜி முற்றாக இவ்வகை பழங்களை தெரியாமல் சாப்பிட்டு விட்டால் உயிரிழப்பு கூட நேரிடலாம். பழங்களுக்கு கவர்ச்சியான நிறம் வேண்டும் என்பதற்காக இந்த ஆபத்தான முறையை சில நிறுவனங்கள் கையாள்கின்றன.
சிக்கன்-மீன் வறுவல்: பெரும்பாலான கடைகளில் விற்கப்படும் சிக்கன் 65, மீன் வறுவல்கள் பார்க்கும் போதே சாப்பிட வேண்டும் என்று சுண்டி இழுக்கும் சிவப்பு நிறமாக இருக்கும். இந்த சிவப்பு நிறத்துக்காக அளவுக்கதிகமாக கேசரி பவுடர் சேர்க்கப்படுகிறது. சில இடங்களில் பஜ்ஜி, போண்டாவிலும் சேர்த்து நிறம் உண்டாக்கப்படுகிறது.
இவைகளை சாப்பிட்டால் குடல் கேன்சர், சோரியாசிஸ் ஆஸ்துமா போன்றவை உண்டாகும். உயிருக்கும் வேட்டு வைத்து விடும். இப்படி கெமிக்கல் சேர்க்கப்பட்ட சிக்கன் 65, மீன் வறுவல் சாப்பிடுவது பணம் கொடுத்து நாமே நோயை வாங்குவதாகும். வயிற்றுப்போக்கை உண்டாக்கும்
கிரீம் கேக்: குழந்தைகளின் பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் உற்சாகமானதாக இருக்கும். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் உறவினர்களும் நண்பர்களும் ஆசை ஆசையாக கெமிக்கல் கிரீம் கேக்கை போட்டி போட்டுக்கொண்டு ஊட்டி மகிழ்வார்கள். ஆனால் அவர்கள் அந்த பச்சிளம் குழந்தைக்கு கெமிக்கல் கலந்த கிரீம் கேக்கைதான் ஊட்டுகிறோம் என்பதை அறியாமலேயே ஊட்டி விடுவார்கள்.
மறு நாளே அந்த கெமிக்கல் கிரீம் தனது வேலையை காட்டி விடும். குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, வாந்தி, காய்ச்சல் போன்ற நோய்களை உண்டாக்கி விடும். சில குழந்தைகளை தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கும் அளவுக்கு நிலைமை மோசமாகி விடும். கேக் வெட்டுவது  மேலை நாடுகளில் கலாச்சாரம், நாம் நமது குழந்தைகளுக்கு பழங்களை வெட்டியோ, சத்துமாவை ஊட்டியோ, உணர்வுப்பூர்வமாகவும், குழந்தையின் உடல் நலத்தை கெடுக்காமலும் கொண்டாடலாம்.
உயிரை குடிக்கும் கெமிக்கல் டீ: கெமிக்கல் கலந்த டீ தமிழ்நாடு முழுக்கவே சுடச்சுட விற்கப்படுகிறது. குறைந்த செலவில் நிறைய டீ போட வேண்டும் என்ற பேராசையால் டீத்தூளில் கெமிக்கல் சாயம் சேர்க்கப்படுகிறது. இந்த கெமிக்கல் கலப்பட டீயை தொடர்ந்து சாப்பிட்டால் ஆண்மை குறைவு உண்டாகும். கேன்சர், குடல்புண், சைனஸ், ஆஸ்துமா, தூக்கமின்மை போன்ற கோளாறை உண்டாக்கும்.
கடைசியில் மரணத்தில் தள்ளி விடும். போலி டீத்தூளை கண்டுபிடிக்க நீங்கள் டீ சாப்பிடும் டீக்கடையில் போலி டீத்தூளை வாங்கி 1 டம்ளர் தண்ணீரில் போட்ட உடன் சாயம் இறங்கினால் அது கண்டிப்பாக கெமிக்கல் சாயம் கலந்த விஷ டீ என்பதில் சந்தேகம் இல்லை. அவ்வாறு உங்கள் பகுதி டீக்கடையில் கெமிக்கல் விஷ டீ விற்பனை செய்யப்பட்டால் நீங்கள் தேயிலை வாரியத்திற்கு 0423 2230316 என்ற தொலைபேசி மூலமாக புகார் செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தலாம்.
குளிர்பானம்: கர்ப்ப காலத்தில் பெண்கள் குளிர்பானங்களை சாப்பிடும்போது பிறக்கும் குழந்தை, ஆட்டிசம் மற்றும் மளவளர்ச்சி குறைபாட்டுடன் பிறக்கும் வாய்ப்புள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. சில வெளிநாட்டு கம்பெனிகள் தங்களது கெமிக்கல் சாயம் கலந்த குளிர்பானங்களை இங்குள்ள குழந்தைகள் இளைஞர்களை குடிக்க வைப்பதற்காக கிரிக்கெட் வீரர்கள், சினிமா நடிகர்கள், நடிகைகள், அந்த குளிர்பானங்களை குடித்துதான் உற்சாகமாக இருப்பதுபோல் காட்டுகிறார்கள்.
சில குடிமகன்கள் மதுகுடிக்கும்போது மதுவுடன் இந்த கெமிக்கல் குளிர்பானங்களை சேர்த்து குடிப்பதால் நோய்களின் பிடியில் சிக்கி வாழ்க்கையை தொலைத்து விடுகிறார்கள்., உயிருக்கு உலைவைக்கும் கலர் கலந்த உணவை தவிர்க்கலாமே.