Jul 5, 2011

சாமியார்கள் சொத்து, கோவில் புதையல் மக்களுக்கே! கி.வீரமணி!

JULY 06, இந்தியாவில் உள்ள கோயில் சொத்துகள், புட்டபர்த்தி சாயிபாபா போன்றவர்களின் சொத்துகளை மக்கள் வளர்ச்சிப் பணிகளுக்குப் பயன்படுத்தலாம்.

மக்கள் அளித்த பணம் மக்களுக்கே திருப்பித் தரப்படுவதில் தவறில்லை என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார். இந்தியாவில் உள்ள முதலாளித்துவத்தை மூன்று வகையாகப் பிரிக்க வேண்டும் என்பார் தந்தை பெரியார்.

ஒன்று, கோயில்களில் உள்ள கடவுள் அவதாரங்களின் அள்ளக் குறையாத, "முதல் போடா மூலதனப் பெருக்கம்" கோடி கோடியாக கொட்டிக் கொண்டு இருப்பதும், அதைக் “கோயில் பெருச்சாளிகள் கொள்ளையடிப்பதும் ஒரு வகையான விசித்திர முதலாளித்துவம்.

இரண்டு, பிறவியினால் எவ்வித உழைப்பும் இன்றி, உயர்ஜாதி, ஆண்டவனின் முகத்தில் பிறந்த ஜாதி என்று முத்திரைக் குத்திக் கொண்டு, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக பூணூலையும், தர்ப்பையும், பஞ்சாங்கத்தையுமே மூலப் பொருளாகக் கொண்டு, பெரும்பாலான அடிமைப்படுத்தப்பட்ட மக்களையே சுரண்டிக் கொழுக்கும் பிறவி முதலாளித்துவம்.

மூன்று, மூலதனம் போட்டு தனது மூளை உழைப்பு, சுரண்டல் புத்தியைக் கூர்மையாக்கி தொழிலாளர்களின் உழைப்பை மூலதனமாகக் கருதாமல், அதற்கு ஏதோ ஒருவகைக் கூலி மட்டும் கொடுத்து, அதை விலை உயர்வு மூலம் ஒரு கையில் கொடுத்ததை, மறுகையில் பிடுங்கிக் கொள்ளையடிக்கும் முதலாளிகள் மனித முதலாளித்துவம்.

மூன்றாவது வகை இருவகை முதலாளித்துவத்தை எளிதாக ஒழித்துவிடலாம். ஒரு அவசரச் சட்டம் போட்டுக்கூட, பணக்கார முதலாளிகளிடம் இருக்கும் பணம், சொத்துகளை அரசுகளால் எடுத்துக்கொள்ள முடியும்.

ஆனால், கோயில், மதம், பார்ப்பனீயம் இவைகளிடம் நெருங்குவதற்கு எக்கட்சி அரசானாலும் துணிவதில்லை. சிதம்பரம் கோயிலில் சுமார் 200 ஆண்டுகளுக்குமேல் தீட்சதர் கூட்டத்தால் சுரண்டப்பட்ட மக்கள் தந்த, தருகின்ற வருமானம், மன்னர்கள் விட்டுச் சென்ற சொத்துகளைக் காப்பாற்ற பல அரசுகள் முயன்றும் இப்போதுதான் அது ஹிந்து அறநிலையத்துறையின் கீழ் வந்துள்ளது.

கடந்த சில வாரங்களாக, ஆந்திராவில் புட்டபர்த்தி சாயிபாபா தன்னை ஆண்டவன் அவதாரம் என்று கூறிக் கொண்டு, ஏமாளி பக்தர்களை ‘பக்தி வந்தால் புத்தி போகும்’ என்று தந்தை பெரியாரின் கூற்றினை மெய்ப்பிப்பது போல செய்து, அவர் பலருக்கும் ‘ஆசி’ வழங்கி வந்தவர். பல வாரங்கள் மாதங்கள் நோய் வாய்ப்பட்டு, சிறுநீரகம் முதலிய பல்வேறு உறுப்புகள் படிப்படியாக செயலிழந்து, பிறகு மரணமடைந்தார். அவரது மடத்தில் புட்டபர்த்தியில் அங்கே சொத்துகளை நிருவகிப்பது முதல், பல பிரச்சினைகளில் சண்டைகள் பல மாதங்களாக சில ஆண்டுகளாகவே நடந்து வந்துள்ளன.

அவரது மரணத்திற்குப்பின் அங்கே இருந்த தங்கம், வைரம், ரூபாய் நோட்டுகள் என்று பல லட்சம், பல கோடிக்கணக்கில் அவை கடத்தப்பட்டு, ஆந்திர அரசே அதுபற்றி புலன் விசாரணைகளை நடத்தும் நிலை உள்ளது! மடத்திலிருந்து லாரியில் கடத்திச் சென்றுள்ள பணம், தங்கம், வைர நகைகள் பிடிபட்டதாக செய்திகள் வந்தவைகளை மீடியாக்கள் பெரிதும் பார்ப்பன ஊடகங்கள் அமுக்கி வாசித்தன.

ஒரு வார இடைவெளிக்குப் பின்னர், அது சம்பந்தப்பட்ட தமிழ்நாட்டுப் பார்ப்பன தொழில் அதிபர் ஒருவர், அந்த ரொக்கம் ஏதோ, பாபாசமாதி கட்ட, ஒப்பந்தக்காரருக்கு, யாரோ கொடுத்ததாக ஒரு பேட்டி கொடுத்தார். மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டார்கள்; ஏன் உடனே செய்யவில்லை? பிடிபட்ட நேரத்தில், பிடிபட்டவர்தானே அப்படி வாக்குமூலம் கொடுத்திருக்க வேண்டும்? பிறகு அதிலிருந்து மீளுவதற்கே இப்படி ஒரு “அற்புத யோசனை” அறிவுரை நிபுணர்களால் ‘அவாளுக்கு’ச் சொல்லிக் கொடுக்கப்பட்டிருக்கக் கூடும்!

தோண்டத் தோண்ட வெளிவரும் புதையல்போல, பாபா அறையிலிருந்து தங்கக் குவியல்கள் வந்த வண்ணம் உள்ளதாம்! செய்தி ஏடுகளால் மறைக்க முடியாது சிலவற்றை வெளியிடுகின்றன. பிரசாந்தி நிலையத்தில் இருந்து ஏராளமான ரொக்கப் பணமும், நகைகளும் கடத்தப்படுவதாக பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. அண்மையில் நடைபெற்ற சில வாகனப் பரிசோதனைகளின்போது ரூபாய் 10 கோடி மற்றும் 35 லட்சம் பணம் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில் , கடந்த சில நாள்களாக திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோயில் அங்கே ஆறு பாதாள அறைகள் திறக்கப்பட்டதில், இது வரை கண்டு எடுக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூபாய் ஒரு லட்சம் கோடியைத் தாண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது!  திருப்பதி கோயிலையும் மிஞ்சும் சொத்து இதற்கு இருக்கும் போல் உள்ளது!

கேரள மாநில பட்ஜெட்டையும் தாண்டும் சொத்து இந்த ஒரு கோயிலிலேயே முடக்கப்பட்ட மூலதனமாக கிடக்கிறது! இவைகளில் கோயில் பெருச்சாளிகள் கொண்டு சென்றவை எவ்வளவோ? யாருக்குத் தெரியும்?  பத்மநாப கல் முதலாளி ஆடாமல் அசையாமல் வருமான வரி ஏதும் தராமல் உள்ளவராக உள்ளார்!

குருவாயூர் கிருஷ்ணன் கோயில் வருமானம், சபரிமலை அய்யப்பன் கோயில் வருமானம் இப்படி பலவகை வருமானங்கள் மூலம் கிடைக்கும் தொகை மக்கள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டால், எவ்வளவு அரசு கல்லூரிகள், தொழிற்சாலைகள், பள்ளிக்கூடங்கள், மருத்துவ மனைகளை எழுப்பலாம்! நமது மத்திய அரசு, லாபம் தரும் பொதுத் துறை நிறுவன பங்குகளை விற்பதை நிறுத்திவிட்டு இந்த மூலதனங்களை எடுத்துப் பயன்படுத்தலாமே!

அரசியல் சட்டத்தின் 25,26 என்ற பிரிவுகளைக் காட்டி சிலர் சட்டப் பூச்சாண்டி காட்டலாம். அதுபற்றிக் கவலைப்படாமல் துணிந்து முடிவு எடுத்தால் அப்பிரிவுகளிலேயே அதற்கு தாராளமாக இடம் உள்ளது. மனம் இருந்தால் மார்க்கம் உண்டு! மக்கள் கொடுத்த பணம் மக்களுக்கே திருப்பித் தரப்படுவதில் தவறு ஏதும் இல்லையே! மத்திய மாநில அரசுகள் கவனம் செலுத்துமாக! இவ்வாறு கி.வீரமணி தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

1 comment:

Anonymous said...

why said only temple also church,muslim etc