Jul 3, 2011

சன் பிக்சர்ஸ் தலைமை நிர்வாகி சிறையில் அடைப்பு!!

சென்னை, ஜூலை 4-சேலத்தை சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் டி.எஸ். செல்வராஜ் இவர் கந்தன் பிலிம்ஸ் என்ற பெயரில் சினிமா தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருகிறார்.

சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியை சந்தித்து புகார் மனு கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:-

சினிமா வினியோகஸ்தரான என்னை சன் பிக்சர்ஸ் பட நிறுவனத்தின் தீராத விளையாட்டு பிள்ளை படத்தின் சேலம் பகுதி வினியோக உரிமையை வாங்கும்படி சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஹன்ஸ்ராஜ் சக்சேனா என்னை வற்புறுத்தினார்.

அதன் பேரில் ரூ.1 1/2 கோடி கடன் வாங்கி கொடுத்து அந்த படத்தின் வினியோக உரிமையை வாங்கினேன். ஆனால் அந்த படத்தை சக்சேனாவே சேலம் பகுதியில் வெளியிட்டு விட்டார். நான் கொடுத்த ரூ.1 1/2 கோடி பணத்தையும் திருப்பி தரவில்லை.

அந்த படத்திற்கு வசூலான 83 லட்சத்து 53 ஆயிரத்து 374 ரூபாயை தரும்படி கேட்டேன். ஆனால் சக்சேனா பணத்தை தராமல் இழுத்தடித்தார். இதுபற்றி கடந்த ஜனவரி மாதம் கேட்ட போது என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்து பணத்தை வசூலித்து தரும் படி கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தார். இந்த புகார் மீது சென்னை கே.கே.நகர் போலீசார் கடந்த 1-ந்தேதி வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். நேற்றிரவு அவர் ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்த போது விமானநிலையத்தில் போலீசார் கைது செய்தனர்.

இந்திய சட்டப்பிரிவு 406 (நம்பிக்கை மோசடி), 420 (மோசடி), 385 (ஏமாற்றுதல்), 506 (2) (கொலை மிரட்டல்) ஆகிய பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். நீதிபதி அவரை 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து சக்சேனாவை புழல் சிறையில் போலீசார் அடைத்தனர்.

No comments: