Apr 14, 2011

தங்கபாலு நூறு சீமான்களுக்கு சமம்!! எஸ்.வி.சேகர்!!

ஏப்ரல் 14, தங்கபாலுவின் நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சி 10 அல்லது 13 இடங்களில் மட்டுமே ஜெயிக்கும் நிலைமை உள்ளது என, எஸ்.வி.சேகர் கூறியுள்ளார்.

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாக, மயிலாப்பூர் எம்எல்ஏ எஸ்.வி.சேகர் உள்பட 19 பேரை கட்சியில் இருந்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் தங்கபாலு நீக்கியுள்ளார்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கிய தங்கபாலு நடவடிக்கை குறித்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.வி.சேகர்,

ராகுல்காந்தியை சந்தித்து அவர் மூலம் காங்கிரசில் சேர்ந்தேன். எம்.எல்.ஏ.வாகவும் இருக்கிறேன். என்னிடம் அகில இந்திய காங்கிரஸ் கட்சி விளக்கம் கேட்டு எனது பதிலில் திருப்தி இல்லை என்றால் மட்டுமே நீக்க முடியும்.

தங்கபாலுவால் நீக்கப்பட்டுள்ள பலர் இளைஞர் காங்கிரசை சேர்ந்தவர்கள். தேர்தல் நடத்தி தேர்வு செய்யப்பட்டவர்கள். ராகுல்காந்திதான் அவர்களுக்கு தலைவர்.

எனவே இளைஞர் காங்கிரசாரையும் தங்கபாலுவால் நீக்க முடியாது. தேர்தலில் தங்கபாலுவுக்கு டெபாசிட் போய்விடும் என்ற பயம் வந்து விட்டது. நான்கு அல்லது ஐந்தாவது இடத்தில் வருவார் என்கிறார்கள். இதனால் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.

தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க.வுடனோ அல்லது தி.மு.க.வுடனோ கூட்டணி ஆட்சியில் பங்கெடுத்து துணை முதல் அமைச்சர் ஆகிவிடலாம் என்று கனவு கண்டார். இதனால் லட்சக்கணக்கான தொண்டர்களை ஏமாற்றினார்.

மனைவி மூலம் தேர்தல் கமிஷனையும் ஏமாற்றினார். இப்போது தோல்வி உறுதி என தெரிந்ததும் எங்கள் மேல் பாய்கிறார். தங்கபாலு நூறு சீமான்களுக்கு சமம். தேர்தலில் மட்டுமேதான் சீமான் காங்கிரசை அழிக்க பிரசாரம் செய்கிறார்.

தங்கபாலு தினம் தினம் காங்கிரசை அழிக்கிறார். தங்கபாலு விரைவில் தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலக்கப்படுவார். அவரை நீக்க வேண்டும் என்று சோனியாவுக்கும், ராகுல் தொண்டர்கள் கடிதங்களும், தந்திகளும் அனுப்ப வேண்டும்.

தங்கபாலுவின் தனிப்பட்ட சுயநலம் தி.மு.க.வுக்கு பெரிய சுமையாக போய்விட்டது. இவர் நடவடிக்கையால் காங்கிரஸ் கட்சி 10 அல்லது 13 இடங்களில் மட்டுமே ஜெயிக்கும் நிலைமை உள்ளது.

No comments: