Mar 25, 2011

தமிழீழ நாட்டு பிரதமரின் உருக்கமான வேண்டுகோள்!!


ஒருங்கிணைந்து செயற்பட முன்வருமாறு பிரதமர் வேண்டுகோள்!!முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின் தமிழீழ மக்களின் அரசியல் பெருவிருப்பான சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழத் தனியரசுக்கான போராட்டத்தை அரசியல் இராஜதந்திர வழிமுறைகளினால் முன்னெடுக்க நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கும் திட்டத்தை நாம் முன்னெடுத்ததை நீங்கள் அனைவரும் அறிவீர்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பதனை வடிவமைப்பதற்காக மதியுரைஞர் குழுவும், திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக நாடு தழுவிய அளவில் செயற்பாட்டுக் குழுக்களும் எனது ஒருங்கிணைப்பில் அமைக்கப்பட்டு – 12 நாடுகளில் தேர்தல்கள் நடத்தப்பட்டது.

இதற்க்கு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டு – நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை முள்ளிவாய்க்கால் பேரவலம் நடைபெற்ற ஓராண்டு காலகட்டமாகிய 2010 ஆண்டு மே மாதம் 17-19 நாட்களில் அமெரிக்காவின் அரசியலமைப்பு எழுதப்பட்ட பிலடெல்பியா நகரில் அமைந்திருந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க மண்டபத்தில் கூட்டப்பட்டதனையும் நீங்கள் அறிவீர்கள்.

முதலாமது அமர்வின் இறுதியில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பை உருவாக்குவதற்காக அரசவை அரசியல் நிர்ணய சபையாக மாற்றியமைக்கப்பட்டது. செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக செயற்குழுக்களும் அமைக்கப்பட்டன.

அரசியலமைப்பின் முன்வரைவினை விவாதித்து ஏற்றுக்கொண்டு – அரசியலமைப்பின் அடிப்படையில் அரசாங்கத்தினை அமைத்துக் கொள்வதற்காகக் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் இறுதிப்பகுதியில் நியுயோர்க் நகரில் கூடினோம்.

அரசியலமைப்பினை விவாதித்தோம். ஏற்றுக் கொண்டோம். இவையெல்லாம் வீடியோ பதிவுகளாக நம்மிடம் உள்ளன. அமர்வின் இறுதி நேரத்தில் சில உறுப்பினர்கள் அதிருப்தி காரணமாகச் சபையில் இருந்து வெளியேறினர். ஜனநாயக முறையின் ஓர் அங்கமாகத் தான் இதனையும் அணுகினோம்.

இதன் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசியில் அமைப்பின் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை வழிநடாத்திச் செல்லும் நிர்வாக பீடமாக அமைச்சரவையை உருவாக்கினோம்.

இவ் அமைச்சரவையில் இணைந்து கொள்ள விரும்புவோர் தமது விருப்பத்தையும் தாம் ஆற்றக்கூடிய பணிகளையும் அறியத் தருமாறு சபையில் இருந்து வெளியேறியோர் உட்பட அனைத்து உறுப்பினர்களிடமும் கோரினோம்.

தமது விருப்பத்தைத் தெரிவித்தவர்கள் மத்தியில் இருந்து அமைச்சர்களையும் துணை அமைச்சர்களையும் தெரிவுசெய்தோம். இளையோர்கள், மூத்தோர்கள், பெண்கள் என அனைவரைம் உள்ளடக்கிய அமைச்சரவையும் அமைக்கப்பட்டது. நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளையும் முன்னெடுக்கத் தொடங்கினோம்.
தமிழீழ விடுதலை என்ற நமது இலக்கினை முன்னெடுப்பதற்கு உருவாக்கப்பட்டுள்ள பிரதமர் பணிமனையினையும் 10 அமைச்சுக்களையும் கொண்டமைக்கப்பட்டுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற குழந்தை 10 மாதம் கருவில் இருந்து உருவாகிப் பிறந்து தவழத் தொடங்கி இன்று நடை பயிலவென நிமிரத் தொடங்கும் கால கட்டத்திலேதான் நாம் நிற்கிறோம்.

இக் குழந்தையின் வளர்ச்சியில் படிநிலைகள் உள்ளன. இவ் வளர்ச்சிப் படிநிலைகள் ஒவ்வொன்றையும் நாம் கட்டம் கட்டமாகத் தான் தாண்டிச் செல்ல வேண்டும். அதற்குரிய தொலை நோக்குடன் நாம் செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளோம்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்பது ஒரு எண்ணக்கருவாக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என்பதனைத் தாங்கள் எல்லோரும் நன்கறிவீர்கள். நேரடித் தேர்தல்கள் மூலம் உறுப்பினர்களைத் தெரிவு செய்து அரசாங்கத்தை அமைத்து அமைச்சுக்களை உருவாக்கியுள்ள நாம் அமைச்சுகளுக்குரிய கட்டமைப்புக்களைத் தற்பொழுதுதான் உருவாக்கத் தொடங்கியுள்ளோம்.

முதற்தடைவையாக அமைக்கப்படும் அரசாங்கம் என்ற வகையில் அரசாங்கத்தின் கட்டமைப்புக்களை உருவாக்கும் பணியும் எம்மிடமே உள்ளது. செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கான கட்டமைப்புகளையும் உருவாக்கி அவற்றின் ஊடாக செயற்பாடுகளையும் முன்னெடுப்பது என்பது இரட்டிப்பு சவால் நிறைந்த பணியாகும்.

நாம் தற்போது உருவாக்கி வரும் அரசாங்கக் கட்டடைப்புக்கள் எதிர்காலத்தில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தினை ஒரு வலுமையமாக உருவாக்குவதற்கு உறுதுணையாக அமைய வேண்டியவை. தற்போதைய சூழலில் நாம் ஒருங்குபட்டு கடினமாக உழைப்பதன் ஊடாகவே வலுவுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்கான அடித்தளத்தை இட முடியும்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இக் குறுகிய கால இயக்கத்தின்போது தனது செயற்பாடுகளை விரிவாக்கத் தொடங்கியுள்ளது. தமிழ்நாட்டிலும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தோழமை மையம் அமைக்கப்பட்டுள்ளது. தென்சூடானுடன் நட்புறவுப்பாலம் கட்டப்பட்டள்ளது.

ஏனைய பல முனைகளிலும் இராஜதந்திர உறவுகள் கட்டும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறோம். உரிய நேரம் வரும் போது அவற்றை மக்களுக்கு அறியத் தருவோம். சிங்கள தேசமும் அனைத்துலக சமூகமும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைந்துள்ளதையும் அவற்றின் செயற்பாடுகளையும் உன்னிப்பாக அவதானித்து வருகிறது.

சிறிலங்கா ஆட்சியாளர்களுக்கு நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அச்சத்தைத் தருவதாக உள்ளது என்பதை அவர்களின் செயற்பாடுகள் உணர்த்துகின்றன. ஈழத் தமிழர் தேசமானது தனது பலத்தை தமிழக மற்றும் உலகத் தமிழர்கள் எல்லோரது பங்கு பற்றலுடனும் நியாயத்துக்காகக் குரல் கொடுக்கக்கூடிய அனைத்துலக மக்கள், சக்திகளின் துணையுடனும் கட்டி எழுப்புவதற்காக நாம் அயராது உழைக்க வேண்டிய கால கட்டம் இது.

இத்தகையதொரு சூழலிலே, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டவர்களில் ஒரு பகுதியினர் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசமைப்பினை ஏற்றுக் கொண்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்றத்தில் தம்மை உறுப்பினர்களாகப் பிரகடனம் செய்யாமல் இன்றுவரை இருந்து வருவது நமக்குக் கவலையையும் ஏமாற்றத்தையும்; தருகிறது.
மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பினை ஏற்று உறுதிமொழி எடுக்கும்போதுதான் உறுப்பினர் தகைமையைப் பெறுகின்றனர். இதனால் அனைத்துத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களையும் முறையாக எல்லோரது அங்கீகாரத்துடனும் ஏற்றுக் கொள்ளப் பட்ட அரசியலமைப்பின்படி உறுதிமொழியெடுத்து உறுப்பினர்களாகுமாறு நாம் தொடர்ச்சியாக அழைப்பு விடுத்து வருகிறோம்.

எத்தகைய கருத்து முரண்பாடுகளையும்; உறுப்பினர்கள் என்ற நிலையில் இருந்து அணுகுவோம் என்பதுதான் இவ் விடயத்தில் எமது நிலைப்பாடாக இருந்து வருகிறது.
இக்தகைய சூழலில் பெப்ரவரி மாதம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டு உறுதிமொழி எடுக்காத சிலரதும் தெரிவு செய்யப்படாதவர்கள் சிலரதும் பெயர்களில் சில கோரிக்கைகளும் நிபந்தனைகளும் உள்ளடக்கிய கடிதம் ஒன்று எனக்கு அனுப்பப்பட்டிருந்தது.

இக் கடிதம் என்னை வந்தடைவதற்கு முன்னரே ஊடகங்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது. ஓரிரு இணையத்தள ஊடகங்களிலும் பிரசுரமாகியிருந்தது. இக் கடிதம் நாடு கடந்த தமிழீழ அரசின் பிரதமர் என்ற ரீதியில் எனக்கு எழுதப்படவில்லை. இக் கடிதத்திற்கு நான் பதிலளிக்காமைக்குப் பல காரணங்கள் உண்டு.

முதலாவதாக இக் கடிதம் ஊடகங்களில் முதலில் வெளிவந்து ஒரு கிழமைக்குப் பின்னர் தான் எனக்குக் கிடைத்தது. இரண்டாவதாக நாடு கடந்த உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்படாத சிலரது பெயர்களும் கடிதத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தன. மூன்றாவதாக இக்கடிதத்தில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பாகத் தீர்மானிக்கும் அதிகாரங்கள் எல்லாம் என்னிடம் இல்லை.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் யாப்பில் உள்ளடங்கும் அதிகாரங்கள் மட்டும் எனக்கு உண்டே ஒழிய, நான் சர்வ அதிகாரங்கள் கொண்டவன் அல்ல. நான்காவதாக இக்கடிதத்தில் காணப்பட்ட மிரட்டல் தொனி. இக்கடிதம் எனக்குப் பிரதமர் என்ற ரீதியில் எழுதப்படா விடினும், இது நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பானது என்ற படியினால் இக்கடிதம் பற்றி நான் அமைச்சரவையின் கருத்தைக் கேட்டேன்.

மேலே கூறப்பட்ட காரணங்களின் அடிப்படையிலும் இக்கடிதம் ஒரு நல்லெண்ணத்துடன் எழுதப்பட்ட கடிதமாக அமையவில்லை என்பதனாலும் நான் அதற்குப் பதில் அனுப்பவேண்டிய அவசியம் இல்லையென அமைச்சரவையும் கருதியது. இச் சிக்கலை மேலும் நீடிக்க விரும்பாத நாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை உறுதிமொழி எடுத்து உறுப்பினர்களாக தகைமைப்;படுத்துமாறு குறிப்பிட்ட கால அவகாசம் கொடுத்து அழைத்தோம்.

இக் கால அவகாசம் போதாது எனத் தெரிவிக்கப்பட்டமையால் இது இம்மாதம் 25 ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டள்ளது. அவைத் தலைவர் பொன் பாலராஜன் அவர்கள் அறிவித்தவாறு இம் மாதம் 25 ஆம் திகதிக்குள் உறுதிமொழி எடுக்கத் தவறும் தெரிவு செய்யுப்பட்ட உறுப்பினர்கள் தாங்களாகவே நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற நிலையில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்வதாகக் கருதி அடுத்த கட்ட நடடிவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் நிலை தோன்றிவிடும்.

இந் நிலை தோற்றம் பெறுவதை நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் என்ற நிலையில் இருந்து நான் விரும்பவில்லை. அவைத்தலைவர், அமைச்சர்கள், துணை அமைச்சர்கள், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பினை ஏற்றுக் கொண்டு உறுதிமொழி எடுத்துக் கொண்ட மூன்றில் இரண்டு பங்குக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எவரும் விரும்பவில்லை.

இவ் வேளையில், உறுதிமொழி எடுக்காதவர்களை உறுதிமொழியை எடுத்து அவையின் உள்ளே வந்து எமது ஒற்றுமையைப் பலப்படுத்துமாறு நாடு கடந்த தமிழீழ அரசங்கத்தின் இளம் தலைமுறை உறுப்பினர்கள் எடுத்திருக்கும் முயற்சியையும் உங்களுக்குத் தெரிவிக்க விரும்புகின்றேன். இம் முயற்சிக்குப் பாராட்டும், இம் முயற்சி வெற்றிபெற எனது வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் உறுப்பினர்கள் எல்லோரும் ஒரே இலக்கினைக் கொண்டவர்கள். ஒரே நோக்கத்துக்காhகச் செயற்படுபவர்கள். அணுகுமுறை வேறுபாடுகள் நமக்கிடையே இருக்கக்கூடினும் நாம் வென்றடைய வேண்டிய இடம் தொடர்பாக நமக்கிடையே மாறுபாடுகள் எதுவுமில்லை. இதனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்துக்குள் அணிகள் எதற்கும் தேவையும் இல்லை. இடமும் இல்லை.

தமிழீழ தேசத்தின் விடுதலைக்கெனச் செயற்படுவதற்காக மக்கள் நம்மைத் தேர்ந்தெடுத்தார் களேயன்றி அணிபிரிந்து மல்லுக் கட்டுவதற்காக மக்கள் நம்மைத் தேர்ந்தெடுக்கவில்லை. இவ்வாறு அணிபிரிந்து செயற்படுவோமானால் அது மக்களுக்கும் தமிழீழ விடுதலைக்ககாகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீர்களுக்கும் நாம் செய்யும் அநீதியாகத்தான் அமையும்.

இதனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வெளியே நின்று அணிபிரிந்து இயங்கும் செயற்பாடுகளைக் கைவிடுமாறு ’ஜனநாயக அணி’ எனத் தம்மை அழைத்துக் கொள்வோரை உரிமையுடன் வேண்டிக் கொள்கிறேன். நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பின்படி உறுதிமொழி எடுத்து உறுப்பினர் தகைமையினை எட்டிக் கொள்ளுமாறும் அவர்களிடம் கோருகிறேன்.

நமக்கிடையே இருக்கக்கூடிய வேறுபாடுகளை உறுப்பினர் என்ற நிலையில் இருந்து நாம் பேசித் தீர்ப்போம் வாருங்கள். முரண்பாடுகளை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் என்ற அமைப்பின் ஜனநாயக வரையறைக்குள் இருந்து அணுகுவோம் வாருங்கள்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இதுவரை தெரிவு செய்யப்படாத உறுப்பினர்களைத் தெரிவு செய்யவும், நியமனம் செய்யப்படும் பேராளர்களை நியமனம் செய்யவும,; செனட்சபையை நிர்ணயம் செய்வதற்குமான ஏற்பாடுகளை நாம் இப்போது முன்னெடுத்து வருகிறோம்.

பிரான்சிலும் பிரித்தானியாவிலும் நெதர்லாந்திலும் பின்லாந்திலும் இருந்து இன்னும் தேர்தல்கள் மூலம்; தெரிவு செய்யப்பட வேண்டியுள்ள 10 பிரதிநிதிகளுக்கான தேர்தல்களை நடாத்துவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு நாம் தேர்தல் ஆணையத்தைக் கோரியுள்ளோம்.

இத் தெரிவுகள் நடைபெற்ற பின்னர், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியலமைப்பு உட்பட உறுப்பினர்கள் மேற்கொள்ள விரும்பும் மாற்றங்களை அரசியலமைப்புக்குட்பட்டு மேற்கொள்ள முடியும். பேச்சுக்களின் மூலம் மாறுபட்ட கருத்துக்களுக்குள் உடன்பாடு காணவும் முடியும்.

நாம் அரசாங்கத்தினை அமைத்த பின்னர் அரசாங்க நடைமுறைகளில் இருந்து பின்வாங்குவதோ, விலகிச் செயற்படுவதோ அல்லது தடம் பிறள்வதோ நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் வளர்ச்சிக்கோ அல்லது சிறப்புக்கோ உதவாது. இந்த விடயத்தில் நாம் தெளிவாகத் தான் இருக்கின்றோம.;

நாம் இப்போது உருவாக்கும் அரசாங்கத்தை அதன் கட்டமைப்புக்களை மக்களால் தெரிவு செய்யப்படவர்களே எதிர்காலத்திலும் நடாத்திச் செல்லப் போகின்றனர். இங்கு நான் உட்பட தனி மனிதர்கள் எவரும் அரசாங்கத்தின் நிலையான தலைவர்களாக இருக்கப் போவதில்லை.

ஆனால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தமிழீழ மக்கள் தமது முழுமையான விடுதலையை அடைந்து கொள்வதற்கு வழிகோலும் வலுமையமாக நிலைபெற வேண்டியது காலத்தின் கட்டாயமாக எம்முன்னே விரிந்து நிற்கின்றது. அதனைக் கவனத்தில் கொண்டு அவ்வுண்மையை ஏற்றுக் கொண்டு அனைவரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும் என்பதனை உரிமையுடன் கோரி நிற்கின்றேன்.

தமிழ் உறவுகளே! நாம் அதிவேகமாகச் செயற்பட வேண்டிய காலம் இது. தமிழ் ஈழத் தேசத்தவராகிய நமக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நியாயம் கோர வேண்டிய காலகட்டம். நமது மக்களுக்கு அநீதியினை இழைத்தவர்களை நீதியின்முன் நிறுத்துவதற்கு நாம் அணிவகுக்கும் காலகட்டம். நமது மக்களுக்கு மறுக்கப்பட்ட உரிமைகள் வேண்டி நாம் போர்க்கொடி தூக்கும் காலகட்டம்.

தமது குருதியால் நமது தாயகப் பூமியினை நனைத்து, தமிழீழ விடுதலை என்ற இலட்சியத்தை நமது தேசமெங்கும் விதைத்து, இக் கனவுகளுடன் தம்விழி மூடிய நமது மாவீர்களின் எண்ணங்களுக்கு நாம் வடிவம் கொடுக்கும் கால கட்டம்.

தாயக பூமியில் சிங்கள இனவாதப் பூதத்தால் பிய்த்தெறியப்பட்ட நமது மக்களின் மற்றும் மாவீரர், போராளிகள் குடும்பங்களின் வாழ்க்கையினை நிமிரச் செய்வதற்கு நாம் உறுதுணையாக நிற்க வேண்டிய காலகட்டம்.

நமது தேசத்தின், மக்களின் நலன் சார்ந்து, நமது மக்களுக்கு விசுவாசமாக நாம் செயற்பட வேண்டிய காலகட்டம். இக் காலகட்டத்தில் மக்கள் நலனை மட்டும் முன்னிறுத்தியதாக நமது செயற்பாடுகள் அனைத்தும் அமையட்டும்.

உறுதிமொழி எடுக்காதிருக்கும் உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் இவ் அழைப்பினைத் தனிப்பட்ட அழைப்பாகக் கருதுமாறு கேட்டுக்கொள்கிறேன். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் என்ற ரீதியில் இரு கரம் விரித்து உங்களை அழைக்கின்றேன். வாருங்கள்;. ஒன்றாகப் பயணிப்போம். சுதந்திர இறைமையுள்ள தமிழீழம் அமைப்போம்.

நன்றி. விசுவநாதன் ருத்திரகுமாரன், பிரதமர் :நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்.

No comments: