![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjc_oWZWDxS2zin7WW4iXRZ-KxFoEeYxIccpvC4ba_AOgCF21c9WhMhVqRc2ReyTL0MnWRHjqFPnykSFrRwvCoF9xjBoU8kaQWnm19AtjOc5C820jUrHqS_1t8iMVxJF7ntTEFU7NPu4hg/s320/viruthagiri_002.jpg)
இந்த உலகில் பைசாவுக்கு அருகதை இல்லாத விசயங்களுக்கெல்லாம் தமிழ் மக்கள் உணர்ச்சிவசப்படுகிறார்கள் என்று சிலர் கூறுவது உண்மைதானோ? தமிழக அரசியலின் திசையை தீர்மானிப்பவர்களாக திரையுலக மாந்தர்கள் இருக்கும் அவலத்தினை பார்க்கும் போது அது பொய்யில்லை என்றே தோன்றுகிறது. பின்னே ஒரு தி.மு.க, அ.தி.மு.க தொண்டனுக்கு இருக்கும் அடிப்படை அரசியல் அறிவு கூட இல்லாத விஜயகாந்த் போன்ற அட்டை கத்திகள் அரசியல் உலகில் சுழற்றும் வாள் சண்டையைப் போய் ஆகா, ஓகோ என்று உளமாற உருகி ரசிப்பதற்கும் இங்கு ஒரு பரிதாபத்திற்குரிய கூட்டம் இருக்கிறதே!!.
2006ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வந்தது. ஜெயா எதிர்ப்பு அலையில் தி.மு.க கரையேறிது போல கேப்டனும் ஏதோ ஏழு, ஏட்டு சதவீத வாக்குகளைப் பெற்றார். விட்ட சவுண்டுக்கு இது பெரிய வெற்றி இல்லையென்றாலும் ஊடகங்களும், துக்ளக் சோ போன்ற கருணாநிதியை கட்டோடு வெறுக்கும் பார்ப்பன தரகர்களும் இதை மாபெரும் வெற்றியாக கொண்டாடி ஐயாவை உசுப்பி விட்டனர். துக்ளக் சோவைப் பொறுத்தவரை கேப்டனை கொஞ்சம் சரிக்கட்டி போயஸ் தோட்டத்தில் சேர்த்து விட்டால் அ.தி.மு.க அமோக வெற்றி பெறும் என்று படாதபாடு பட்டார். ஆனாலும் ஒரு உறைக்குள் இரண்டு கத்திகள் இருக்க முடியாது அது போல இரண்டு ஈகோ பார்ட்டிகள் (ஜெ & விஜயகாந்த்) சேர்வதற்கான சாத்தியம் இல்லை. இரண்டு தான்தோன்றி தன்னகங்காகர ஆளுமைகள் அவ்வளவு சீக்கிரத்தில் ஒன்றுபடாது என்பதையும் வரலாறு குறித்து வைத்திருக்கிறது.
இது போக கேப்டன் சரக்கடித்துவிட்டு பேசுகிறார் என்ற உண்மையை அம்மா சொல்ல, கேப்டனும் “நீதான் கூட இருந்து ஊற்றி கொடுத்தாயா?” என்ற ஜாலி ஜம்பர் சண்டையை நீங்களும் மறந்திருக்க மாட்டீர்கள். மேலாக கருணாநிதியின் துரதிர்ஷடத்தை பாருங்கள், அரசியலில் தெற்கு வடக்கு தெரியாத விஜயகாந்தை எல்லாம் மதித்து பேச வேண்டியிருந்தது.
தனக்கு கூடிய கூட்டம், தேர்தலில் வாங்கிய எட்டு சதவீத வாக்குகள் எல்லாம் சேர்ந்து கேப்டனுக்கு முழு போதையை குடிக்காமலேயே அளிக்கத் தவறவில்லை. அடுத்த தேர்தலில் தான்தான் கோட்டையில் கொடியேற்றுவோம் என்று அவர் உண்மையிலேயே நம்பினார். இடையில் தி.மு.க, அ.தி.மு.க கட்சிகளில் வாழமுடியாத பண்ருட்டி போன்ற பழம்பெருச்சாளிகள் கேப்டன் கட்சியில் குவிய ஆரம்பித்தனர். கேப்டனும் தனது கட்சியில் ஏழை இரசிகன் செலவழிக்க முடியாது என்று தெளிந்து அந்த பணக்கார பெருச்சாளிகளை மானாவாரியாக சேர்க்க ஆரம்பித்தார். அந்த தேர்தலில் வேட்பாளர் தேர்வுக்கான நேர்காணலில் எவ்வளவு செலவழிப்பீர்கள் என்பதுதான் கேப்டனின் முக்கியக் கேள்வியாக இருந்தது.
சேலம் மாநாட்டில் அவர் கூட்டணி வேண்டுமா என்று கேட்ட போது தொண்டர்கள் அனைவரும் வேண்டு மென்று கை தூக்கினார்களாம். வேண்டா மென்று யாரும் சொல்ல வில்லையாம். இதையே கேப்டனது கட்சியினர் கொண்டிருக்கும் சமரச பிழைப்பு வாதத்திற்கு அடையாளமாக சுட்டிக்காட்டலாம். அதாவது வறுமை ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, மானாட மயிலாட ஒழிப்பு, முதலான அன்லிமிட்டட் ஒழிப்புகளை யாருமே பேசாத அளவில் மாபெரும் கொள்கையாக பினாத்தும் ஒரு கட்சி அதை சாத்தியப்படுத்துவதற்காக ஊழல் நாயகியோடு அணிசேருமாம். என்ன ஒரு கொள்கை பிடிப்பு!
கூட்டணி தயவில்தான் இனி மிச்சமிருக்கும் காலத்தை ஓட்ட முடியும் என்பதை அறிந்ததினால்தான் கேப்டன் சமீப காலமாக, கூட இருந்து ஊற்றிக் கொடுத்தாயா என்று எகத்தாளம் பேசிய தலைவி குறித்து எதுவும் பேசுவதில்லை. அதுவும் மாலை பத்திரிகை ஒன்றில் அ.தி.மு.கவுக்கு எதிர்ப்பு காட்டும் விளம்பரம் ஒன்று தே.மு.தி.க சார்பில் வந்ததும் கேப்டன் படாதபாடுபட்டு அதை மறுத்தார். இது கூட்டணியை பிளப்பதற்கு கருணாநிதியின் சதி என்று சாடினார். காரியம் கை கூடும் நேரத்தில் காலை வாரிவிடும் வஞ்சகம் என்றும் அதை பார்த்தார்.
சரி, கேப்டன் போயஸ் தோட்டத்திலே போய் ஊழல் எதிர்ப்பு வசனம் பேசட்டும். ஆனால் இந்த யோக்கிய சிகாமணிக்கு ஊழலை எதிர்க்க என்ன அருகதை இருக்கிறது? ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியில் அரசு நிர்ணயித்திற்கும் மேலாகவும், சொந்த ஒதுக்கீட்டில் இலட்சம் இலட்சமாகவும் பணம் பெறுவதில் என்ன எழவு நேர்மை இருக்கிறது? அந்த கல்லூரி என்ன தர்ம சத்திரமாகவா இயங்குகிறது? கேப்டன் இதுவரை நடித்த படங்களில் கருப்பாகவும், வெள்ளையாகவும் வாங்கிய ஊதியத்தை வெளியிடுவாரா? இல்லை அவர் உச்சத்தில் இருந்தபோது அவரது படங்களுக்கான டிக்கெட்டுகள் பிளாக்கில் விற்றதைத்தான் திரும்பத் தருவாரா?
ஊரைக் கொள்ளையடித்து ஆளாகி, பிறந்த நாள் வந்தால் ஐந்து பேருக்கு தையல் மிஷன், நாலு மாற்றுத் திறனாளிகளுக்கு இரண்டு சைக்கிள்கள், பத்து பேருக்கு அன்னதானம் வழங்கிவிட்டு கொடை வள்ளல் என்று போஸ்டர் அடித்து விட்டு நானும் ஊழலை எதிர்க்கிறேன் என்றால் என்ன சொல்ல? ஊழலை எதிர்ப்பது இத்தனை சுலபமா என்று கையில் பேகான்ஸ்பிரேவுடன் நாளைக்கு வடிவேலுவும், சந்தானமும் இறங்கிவிட்டால் தமிழகத்தின் கதி, மோட்சமா இல்லை நரகமா?
கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்க்கும் கேப்டனின் யோக்கியதை என்ன? சாம்பார் எப்படி வைக்க வேண்டுமென்பது கூட தெரியாத, தெரிந்து கொள்ள தேவையில்லாத பண்ணையாரம்மா பிரேமலாதாவை மகளிர் அணி தலைவியாக்கி எல்லா கூட்டத்திலும் அமரவைத்து அந்த அம்மாவும் தே.மு.தி.கவை தனது பிறந்த வீட்டு சீதனம்போல உரிமை கொண்டாடி செய்யும் அளப்பறைகள் ஆபாசமாக இல்லையா? கேப்டனின் மச்சான் சதீஷ் இளைஞர் அணித் தலைவர். இந்த குடும்ப கிச்சன் கேபினட்தான் கூட்டணி பேரங்களுக்கான வரவு சேமிப்பு குறித்து முடிவெடுக்கிறது. இப்படி கட்சியையே முழு குடும்பத்தின் வருமானம் ஈட்டும் தொழிலாக்கி தமிழகத்தை வலம் வருபவர், கருணாநிதியை குடும்ப ஆட்சி என்று சாடினால் சொறிநாய் கூட காறித்துப்பாதா?
பண்ணையாரம்மா பிரமேலதா சேலம் மாநாட்டில் பேசும் போது, ” இதுவரை நாம் நம் தலைவரை கேப்டன் என்று அழைத்தோம், இனி இந்த மேடையில் அவரை நாம் டாக்டர் என்று அழைக்கப் போகிறோம்” என்று உச்சிமோந்திருக்கிறார். இதையெல்லாம் எழுதித் தொலைப்பதற்கு குமட்டிக் கொண்டு வருகிறது. தமிழகத்தில் ஜேப்பியாருக்கோ, இல்லை பச்சமுத்து முதலியாருக்கோ ஒரு போனை போட்டு ஒரு மாலை கல்லூரி விழாவுக்கு கால்ஷீட் கொடுத்தால் டாக்டர் பட்டம் கலை ஞானி கமலுக்கோ, இளைய தளபதி விஜயிக்கோ வீடுதேடி வரப்போகிறது. இந்த எழவை ஏதோ அமெரிக்க அல்லேலூயா பார்ட்டிகளிடம் வாங்கி அதையும் கூச்சநாச்சமில்லாமல் இதயம் வெட்கப்படுமளவு கூவித்திரிவதை பார்த்தால் மீண்டும் கண்ணகி உயிர்பெற்று முழு தமிகத்தையே எரித்து விட்டால் தேவலை.
சேலம் மாநாட்டில் அந்த அம்மா பிரேமலதா, ” நாங்க எங்க கைக்காசைப் போட்டுத்தான் மாநாடு நடத்துகிறோம்” என்று வேறு பீற்றியிருக்கிறார். அதே மாநாட்டில் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் அருண்குமார் 51 இலட்சம் ரூபாய் நிதியை கட்சிக்கு வழங்கியிருக்கிறார். மற்ற மாவட்டத்து கணக்குகள் நமக்கு தெரியவில்லை. ஆனால் இந்த காமா சோமா கட்சிக்கெல்லாம் இவ்வளவு நிதி எங்கிருந்து வரும்? யார் கொடுப்பார்கள்? இதை திரட்டுமளவு யாருக்கு சாமர்த்தியம் இருக்கும்? எல்லாம் முதலீடு போட்டு திரும்ப எடுக்கும் அந்த ஏனைய கட்சிகளிலிருந்து வந்த பெருச்சாளிகள்தான் காரணம். கூட்டணி தயவில் அம்மாவின் பிச்சையில் நாளைக்கு இவர்களிடமும் காரியம் சாதிக்க வேண்டியிருக்கலாம் என்று கூடவா திருவள்ளூர் மாவட்ட முதலாளிகளுக்குத் தெரியாது? தமிகத்தின் ஆக்டோபஸ்ஸாக உருவெடுத்துவிட்ட கருணாநிதியின் குடும்ப ஆதிக்கத்தை எதிர்த்து வீழ்த்த, கேப்டனது குடும்பத்தால்தான் முடியுமென்று யாராவது நம்பினால் அவர்களுக்கு ஒன்று சொல்லிக்கொள்ள கடமைப் பட்டுள்ளோம். அந்த கொடுமைக்கு நாம் கருணாநிதியையே சகித்துக் கொள்ளலாம்.
நன்றி: வினவு
6 comments:
2010 ம் வருடத்தின் சிறந்த முட்டாள் கலைஞர்
பாராட்ட வார்த்தைகள் இல்லை. அருமையா எழுதி இருக்கீங்க.
பகிர்வுக்கு நன்றி.
JJ odai koottu sernthaa avar solliyathu pola JJ vaarthu kodukkaa puthu Dr adilla romba vasathiyaha irukkum. Pavam premalathaaaaaa.
இதை வினவு வலைப் பக்கத்தில் படித்தேனே???????
super பதிவு! அருமையான அலசல் ! தொடரட்டும் பணி!
good work......will u stand opposing jj and karunanithi in tamilnadu.....
Even if you mourn against them in public, u will be finished.....in that way, vijayakantha paraatalam....
Ivan public ah sarakadikkaran, jjyum karunanithiyum hiddenah ennennavo adikkaranga.....
vijayakanth otta piricha alavukku romba naal irukkara pa ma ka vum, other katchigalum pirikkalaye ean......
college nadathura eavanum summava nadathuvaan.....college nadatha eavlo selevaagum......ompaatla eluthi irukka....sila karuthugal okay....but, nee than arasiyalaye periya paruppu maathiri innoruthana thitti irukka.....
aduthavan mudhugu thatti kodukka mattum than......
i too dont like vijayakanth.....but, avana thittrathukkagave ipdi eluthurathu sari illa brother......
can u make a comparision of merits and demerits between vijayakanth, jj and karunanithi (Nee than arasiyal perichali aache)........
Post a Comment