Dec 25, 2010

திருமணத்திற்கு பின் ஆண்கள்,..ஆய்வின் தவகல்

நியூயார்க்:திருமணத்திற்கு பின், ஆண்களின் குணநலன்களில் பெறும் மாறுதல் ஏற்படுவதாக, அமெரிக்காவில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.திருமணத்திற்கு பின், ஆண்களின் குணநலன்களில் ஏற்படும் மாற்றம் குறித்து, மெக்சிகன் மாகாண பல்கலைக்கழகத்தை சேர்ந்த அலெக்சாண்டிரா பட் தலைமையிலான குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். 17 முதல் 29 வயது வரையிலான திருமணமான மற்றும் திருமணமாகாத, தலா 289 ஆண்களிடம் 12 ஆண்டுகளாக இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன. இதில், 50 சதவீதத்திற்கும் அதிகமான ஆண்களின் குணநலன்களில் மாற்றம் ஏற்படுவதாக தெரிய வந்துள்ளது.

திருமணத்திற்கு முன், சமூக விரோத செயல்களில் ஈடுபடும் ஆண்கள், திருமணத்திற்கு பின், அந்த செயல்களை அறவே தவிர்க்கின்றனர். அவர்களிடம் உள்ள முரட்டுத்தனம் மாறி, மென்மையானவர்களாகவும், இனிமையாக பழக கூடியவர்களாகவும் மாறுகின்றனர். பொய் சொல்வதை தவிர்க்கின்றனர்.பிறர் தவறு செய்யும் போது, அதை மன்னிக்கும் பக்குவமும் அவர்களிடம் வந்து விடுகிறது. இந்த ஆய்வில் பங்கேற்ற திருமணமாகாத 29 வயது ஆண்களில் 1.3 சதவீதம் பேர் முரட்டுத்தனமாகவும், சமூக விரோத போக்கை கடைபிடிப்பவர்களாகவும் இருந்தனர். அதே வயதில் திருமணமான 0.8 சதவீதம் பேர் மட்டுமே இந்த குணங்களை கொண்டிருந்தனர்.பரம்பரை மற்றும் வளர்ப்பு சூழல் காரணமாகவும் குழந்தையிலிருந்தே முரட்டுதனமான குணங்களை கொண்டிருந்தவர்களும் திருமணத்திற்கு பிறகு மாறுகின்றனர் என்றும் இந்த ஆய்வில் தெரிய வந்தது.

இதுகுறித்து, இந்த ஆய்வில் பங்கேற்காத அல்பேனி பல்கலைக்கழகத்தை சேர்ந்த ரெயான் கிங் கூறியதாவது:திருமணத்திற்கு பின், ஆண்கள் மாறுகின்றனர் என்பது உண்மை தான் என்றாலும், அதற்கான காரணம் தான் புரியவில்லை. திருமணத்திற்கு முன்பு ஆண்கள் தங்கள் நண்பர்களுடன் இணைந்து மது அருந்துவது, சிகரெட் புகைப்பது உள்ளிட்ட பழக்கங்களை கற்றுக் கொள்கின்றனர். முரட்டுத்தனமான மற்றும் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதற்கும் இதுவே காரணம். அவர்கள் திருமணத்திற்குப் பின்னர் இந்த தொடர்புகளை அவர்கள் துண்டித்து கொள்கின்றனர். எனவே, அவர்களின் குண மாற்றத்திற்கு இதுகூட காரணமாக இருக்கலாம்.இவ்வாறு ரெயான் கிங் தெரிவித்தார்.