Dec 25, 2010
அஜ்மீர் குண்டுவெடிப்பு: பரபரப்பு துப்பு கிடைத்துள்ளது.
ஜெய்ப்பூர்,டிச.26:அஜ்மீர் தர்கா குண்டுவெடிப்பில் பயன்படுத்தப்பட்ட காரை ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த வழக்கில் சில முக்கிய துப்பு கிடைத்திருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 2007-ம் ஆண்டு ஆஜ்மீர் தர்கா வளாகத்தில் குண்டு வெடித்தது. இதில் 3 பேர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் இந்து தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பதை போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். இதுதொடர்பாக ஒரு சாமியார் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது முக்கியத் துப்பு கிடைத்துள்ளதாக ராஜஸ்தான் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர். குண்டுவெடிப்புச் சம்பவத்தின்போது வெடிகுண்டுகளை எடுத்துச் செல்ல பயன்படுத்தப்பட்ட காரை போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஐவரின் பெயர் விவரங்களும் கிடைத்துள்ளன. இது முக்கியத் திருப்பமாக கருதப்படுகிறது.
கருப்பு நிற சான்ட்ரோ காரைத்தான் இந்த தீவிரவாத செயலுக்கு குற்றவாளிகள் பயன்படுத்தியுள்ளனர். இந்த கார் மத்தியப் பிரதேசத்தில் வைத்து சிக்கியுள்ளது. இந்தக் காரில் வெடிகுண்டுகளை வைத்துக் கொண்டு ம.பி. மாநிலம் இந்தூரிலிருந்து குஜராத் மாநிலம் கோத்ராவுக்குப் போயுள்ளனர். கோத்ராவிலிருந்து அஜ்மீருக்கு பஸ்ஸில் வைத்துக் கொண்டு சென்றுள்ளனர் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. ஏற்கனவே அஜ்மீர் சம்பவம் தொடர்பாக ஆர்எஸ்எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் என்பவரை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்துள்ளனர் என்பது நினைவிருக்கலாம்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment