Dec 4, 2010

ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்”.

விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார்.“எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத்தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்” என்று திப்பு பிரகடனம் செய்கிறார். பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார். இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார். சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.

“ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்” என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும் முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது. அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன. விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.

ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்கவில்லை. மாறாக, உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால் பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு.

“அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5% பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகியிருந்தன; உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன. நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும், நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந்ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறான் கும்பினி அதிகாரி புக்கானன்.

அரசு கஜானாவுக்கு நிதியைத் திரட்டுவதற்காக மதுவிற்பனையை அனுமதித்த தனது நிதி அமைச்சரைக் கண்டித்து, “மக்களின் ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் அவர்களது பொருளாதார நலனையும் காட்டிலும் நம் கஜானாவை நிரப்புவதுதான் முதன்மையானதா?” என்று கேள்வி எழுப்புகிறார். கஞ்சா உற்பத்தியைத் தடை செய்கிறார். அவரது எதிரியான வெள்ளை கும்பினி படைகளோ , கஞ்சா பயிரிடுமாறு வங்காள விவசாயிகளைத் துன்புறுத்தியது; கஞ்சா இறக்குமதியை எதிர்த்த சீனத்தின்மீது போர் தொடுத்தது; கஞ்சா விற்ற காசில் சாம்ராச்சியத்தை’ உருவாக்கியது.

அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக விற்பதையும், விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு. அதே காலகட்டத்தில் பூரி ஜகந்நாதர் கோயிலின் தேரில் விழுந்து சாகும் பக்தர்களின் மடமையிலும், அவ்வூரின் விபச்சாரத்திலும் காசு பார்த்தார்கள் கும்பினிக்காரர்கள்.

“எகிப்தியப் பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும், கிரேக்க ரோமானியக் கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை. கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி” என்று எழுதிய திப்பு, தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை செய்தார். “எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக் கூடாது” என்று தன் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.

கும்பினிக்காரர்களோ திப்புவிடமிருந்து கைப்பற்றிய மலபார் பகுதியில் பின்னாளில் தம் எஸ்டேட்டு வேலைக்காக வாயில் துணி அடைத்துப் பிள்ளை பிடித்தனர்; முதல் விடுதலைப் போரில் தென்னிந்தியா தோற்றபின், தென் ஆப்பிரிக்கா முதல் மலேயா வரை எல்லா நாடுகளுக்கும் கொத்தடிமைகளாக மக்களைக் கப்பலேற்றினர்.

திப்புவின் ஜனநாயகப் பண்பு அவருடைய நிர்வாக ஆணைகள் அனைத்திலும் வெளிப்படுகிறது. “விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்” என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார். தவறிழைக்கும் சிப்பாய்கள் மீதும் உடல் ரீதியான தண்டனைகள் திப்புவின் இராணுவத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.

“தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால், தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்” என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு. ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.

தன் அரண்மனையில் திப்பு பொறித்து வைத்துள்ள வாசகங்கள் இதற்குச் சாட்சி கூறுகின்றன.
“நம்முடைய குடிமக்களுடன் சச்சரவு செய்வதென்பது, நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது. மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான். நம்முடைய சாம்ராச்சியத்தின் வலிமையனைத்தையும், வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள். அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்.”

வெறும் சொற்களல்ல. காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தன் மக்களைக் கவசமாக மட்டுமின்றி, வாளாகவும் பயன்படுத்தக் கனவு கண்டார் திப்பு. “விவசாயிகள் அனைவருக்கும் துப்பாக்கி வழங்கப்பட வேண்டும். அன்றாடம் ஊருக்கு வெளியே துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்” என்று தன் வரி வசூல் அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பித்திருக்கிறார் திப்பு. இந்த ஆணை செயல் வடிவம் பெற்றிருக்குமா என்ற கேள்வி இருக்கட்டும். தன் குடிமக்கள் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தால் ஒரு மன்னனே அவர்களுக்கு ஆயுதம் வழங்குமாறு உத்தரவிட்டிருக்க முடியும்?

காலனியாதிக்கத்துக்கு எதிராக ஒரு மக்கள் படையைக் கட்டக் கனவு கண்டார் திப்பு. அவர் மறைவுக்குப்பின் ஒன்றரை லட்சம் பேரைத் திரட்டி, ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் நடத்தி, தன் மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினான் திப்புவின் குதிரைப் படைத் தளபதி தூந்தாஜி வாக்.
ஒருவேளை திப்பு பிழைத்திருந்தால்? “உயிர் பிழைத்தல்’ என்ற சொற்றொடரே திப்புவின் அகராதியில் இல்லை. 1792 போரில் வெள்ளையரிடம் தோற்றவுடன் “ஆங்கிலேயரை ஒழிக்கும் வரை இனி நான் பஞ்சணையில் படுக்கமாட்டேன்” என்று அரசவையிலேயே சூளுரைத்தார் திப்பு.

இதோ, குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கிறார் திப்பு.”"மன்னா, யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்” என்று பதறுகிறான் அவருடைய பணியாள். “முட்டாள்… வாயை மூடு” என்று உறுமுகிறார் திப்பு. ஆம்! “ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்” என்று பிரகடனம் செய்த அந்தப் புலி, போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது. இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் திப்புவின் உடலைத் தழுவிச் சென்ற அந்த ஓலம், இதோ நம் இதயத்தை அறுக்கிறது. திப்பு எனும் அந்தக் காப்பியத் துயரம் நம் கண்ணில் நனைகிறது.