Dec 1, 2010

10 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர்” திரைப்படம் வெளியாகிறது.


அம்பேத்கர் விருது பெற்றவருமான தமிழக முதல்வர் கருணாநிதி அவர்களின் ஆட்சி நடைபெற்றும், தமிழகத்தில் டாகடர் அம்பேத்கர் பற்றிய திரைப்படம் இதுவரை வெளியாகாமல் இருந்தது. இத்தனைக்கும் இந்தியாவில் தலித் மக்கள் அதிகம் வசிக்கும் மாநிலங்களில் மூன்றாவது மிகப்பெரிய மாநிலம் தமிழகம்.ஒரு “தலித்” வாழும்போது மட்டுமல்லாமல், வாழ்க்கைக்குப் பின்னரும் சாதி ஆதிக்கத்தின் பிடியில் அவலம் நேரத்தான் செய்கிறது. இந்திய அரசியல் அமைப்பையே உருவாக்கிக் கொடுத்தவரும், இந்திய சமூக நீதிப் போராட்டத்திற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டவருமான டாக்டர். பி.ஆர். அம்பேத்கருக்கும் இந்த நிலைதான் என்பது எத்தனை மோசமானது.

ஆம், ஜபார் படேல் இயக்கிய “டாக்டர். பி.ஆர்.அம்பேத்கர்” திரைப்படம் தயாரிக்க கடந்த 1991 ஆம் ஆண்டு மகாராஷ்டிர அரசு ரூ.7.7 கோடி ஒதுக்கியது. ஆயிரக்கணக்கான நடிகர்களைப் பார்த்து, பொருத்தமான நடிகராக மம்மூட்டி தேர்வு செய்யப்பட்டார்.
ஆங்கிலத்தில் மட்டுமல்லாது, இந்தியாவின் பிற 9 மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட படம் கடந்த 1998 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளியானது. மிகத் துல்லியமான ஆய்வு செய்யப்பட்டு எடுக்கப்பட்ட சிறந்த படமாக பத்திரிக்கைகள் கொண்டாடின. இதனால் அந்த ஆண்டுக்கான சிறந்த ஆங்கிலப்படம், சிறந்த நடிகர் மற்றும் சிறந்த கலை இயக்கம் உள்ளிட்ட பிரிவுகளில் தேசிய விருதுகளை இப்படம் குவித்தது.

ஆனால், இத்தனைச் சிறப்புகளைப் பெற்ற அந்தப்படம், சேரவேண்டிய மக்களை அடையவில்லை. “இதற்கு காரணம் பெரும்பாலான தியேட்டர்கள் சாதி ஆதிக்க உணர்வு படைத்தவர்கள் வசம் இருப்பதே” என்று அன்றே தலித் விடுதலைப் போராளிகள் வருத்ததுடன் கூறினர்.

சுதந்திர இந்தியாவின் சட்டத்தை இயற்றியவருக்கே அநீதியா?” என்று நாம் கேட்கலாம். அது அப்படித்தான், இன்னும் வர்ணாசிரம கொள்கைகளே இந்தியாவில் ஆட்சி செய்கிறது என்பதையே பார்க்கமுடிகிறது. தமிழகத்தில் ஒரு வருடத்திற்கு 120 படங்கள் வெளியாகின்றன, 800 கோடிக்கும் குறையாமல் வர்த்தகம் நடக்கிறது. ஆயிரத்து 800 திரையரங்கங்கள் நாள்தோறும் இயங்குகின்றன. ஆனாலும், ஒரு தலித் விடுதலைப் போராளியின் வரலாறு மக்களிடம் இருந்து மறைக்கப்பட்டது.

10 ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னர் அம்பேத்கர் இப்போது டிசமபர் 3ம் தேதி வெளியாக இருக்கிறார். இதுபற்றி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில நிர்வாகியும், ஆதித்தமிழர் பேரவையின் பொதுச்செயலாளருமான வழக்கறிஞர் நீலவேந்தன் கூறுகையில், “இந்தியா முழுவதும் செய்ததைப் போல, தமிழகத்திலும் ஆதிக்க எண்ணம் கொண்ட சக்திகள் திரையரங்குகளில் படத்தை இருட்டடிப்பு செய்யக்கூடும். அதனை முறியடித்து, இந்தப் படத்தையே ஒரு இயக்கமாக்க வேண்டும்” என்றார்.

No comments: