புதுடெல்லி,நவ.29:கஷ்மீர் குறித்து நான் கூறிய கருத்துக்களை தேசத்துரோக குற்றமாக கருதி வழக்கு பதிவுச்செய்ய வேண்டும் என உத்தரவிட்ட டெல்லி நீதிமன்றம், இதைப்போன்ற வழக்கை இந்தியாவின் முதல் பிரதமர் மறைந்த ஜவஹர்லால் நேரு மீதும் அவருடைய மரணத்திற்கு பிறகு பதிவுச் செய்யட்டும் என பிரபல எழுத்தாளர் அருந்ததிராய் தெரிவித்துள்ளார்.
கஷ்மீர் குறித்து நேரு வெளியிட்ட அறிக்கைகளும், அவர் அனுப்பிய தந்திகளின் தகவல்களையும் இதற்காக அருந்திராய் சுட்டிக் காட்டுகிறார்.நேருவின் சில முக்கியமான நிலைப்பாடுகளை அருந்ததிராய் தனது நிலைப்பாடுகளுக்கு ஆதாரமாக சுட்டிக் காட்டுகிறார்.
1947 ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு பாகிஸ்தான் பிரதமருக்கு அனுப்பிய தந்தியில் இவ்வாறு கூறுகிறார்: 'இந்தியாவுடன் இணைவதற்காக கஷ்மீரை ஈர்க்கவேண்டும் என்பதற்காக அல்ல நாங்கள் இத்தகையதொரு குழப்பமான காலக்கட்டத்தில் நாங்கள் அம்மாநிலத்திற்கு உதவியது.
மாறாக, இவ்விவகாரத்தில் எங்களுடைய நிலைப்பாடு என்னவெனில், ஏதேனும் சர்ச்சைக்குரிய பகுதியை இந்தியாவுடன் இணைக்க வேண்டுமென்றால் அது அப்பகுதி மக்களின் பரிபூரண சம்மதத்துடன்தான் நடைபெறும். இதுதான் எக்காலத்திலும் இந்தியாவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என நேரு அந்த தந்தியில் குறிப்பிடுகிறார்.
அதே ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி பாகிஸ்தான் பிரதமருக்கு அனுப்பிய மற்றொரு தந்தியில் நேரு தெளிவுப்படுத்துவது என்னவெனில், மகாராஜாவின் கோரிக்கையின்படி கஷ்மீரை இந்தியாவுடன் இணைப்பதற்கு ஒப்புக்கொள்வதாகவும், ஆனால், கஷ்மீரில் சட்டம் ஒழுங்கு சீராகும் வரைதான் இது என்ற நிபந்தனையின் அடிப்படையிலாகும்.
கஷ்மீர் இந்தியாவுடன் இணைவதைக் குறித்து தீர்மானிக்க வேண்டியது கஷ்மீர் மக்கள்தான் என 1947 ஆம் ஆண்டு அக்டோபர் 2,3 ஆகிய தேதிகளில் நேரு வெளியிட்ட அறிக்கையாகும். கஷ்மீரில் சட்டம் ஒழுங்கும், சமாதானமும் சீரானால் உடனடியாக ஐ.நாவின் மேற்பார்வையில் இணைப்புத் தொடர்பாக கஷ்மீர் மக்களின் அபிப்ராய வாக்கெடுப்பு நடத்தப்படும் என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடு என நேரு திட்டவட்டமாக தெரிவித்ததாக அருந்ததிராய் சுட்டிக் காட்டுகிறார்.
1947ஆம் ஆண்டு நவம்பர் 25 ஆம் தேதி இந்திய அரசியல் சட்ட அவையில் வைத்து நேரு வெளியிட்ட மற்றொரு அறிக்கையின் சுருக்கம் என்னவெனில், கஷ்மீரின் உண்மையான பிரச்சனை அம்மாநிலத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க வேண்டியது ராணுவமா? அல்லது கஷ்மீர் மக்களின் விருப்பமா? என்பதாகும்.
மாநிலத்தின் எதிர்காலத்தை தீர்மானிக்க கஷ்மீரிகளுக்கு வாய்ப்பு ஏற்படும்பொழுது பாரபட்சமற்ற அமைப்பான ஐக்கிய நாடுகள் சபையின் மேற்பார்வையில் மக்கள் விருப்ப வாக்கெடுப்பு நடத்தட்டும் என நேரு அறிவித்தார்.
கஷ்மீர் மக்களின் மனோநிலைக்கு மாற்றமான நிலைப்பாட்டை இந்தியா எடுக்காது எனவும் நேரு தெளிவுப்படுத்தினார். பிரச்சனையை தீர்ப்பதற்கு கடைசி நிலைப்பாடு முதலாவதாக கஷ்மீர் மக்களின் நிலைப்பாடுதான் எனவும், இரண்டாவதாக மட்டுமே இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமிடையே பேச்சுவார்த்தை எனவும் நேரு திட்டவட்டமாக தெரிவித்தார்.
1955 ஆம் ஆண்டில் மக்களவையில் நேரு கூறியதாவது, கஷ்மீர் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சண்டையிடுவதற்கான பிரச்சனை அல்ல என்ற உண்மையை மறந்துவிடாதீர்கள். அம்மாநிலத்திற்கு தனிப்பட்ட மனமும் தன்மையும் உண்டு. எனத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் பேசிய நேரு தனது உரையில் கஷ்மீர் விவகாரத்தில் தீர்மானம் எடுக்க பாராளுமன்றத்திற்கு கூட அதிகாரமில்லை. இறுதி தீர்மானம் எடுக்கவேண்டியது கஷ்மீர் மக்கள்தான் என்பதாகும். இதனை சுட்டிக் காட்டுகிறார் அருந்ததிராய்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment