Nov 28, 2010

கஷ்மீரில் இந்திய அரசு நடத்தும் பயங்கரவாதம்: நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் பலி.

எதிர்ப்புகள் தணிந்த பின்னரும் மக்களின் சாவுகள் பற்றிய கோபம் கனன்று கொண்டுதான் இருக்கிறது -: நிருபமா சுப்ரமணியன் – தி இந்து நாளிதழ் 24.11.2010
---------------------------
ஷமீர் இந்தா, போய் பேரிக்கா வாங்கிக்க,” என்று தந்தை கொடுத்த 10 ரூபாய் நோட்டுடன் வாசலுக்கு ஓடிய சிறுவன், தள்ளுவண்டிக்காரரிடம் வாங்கிய கொழுத்த 5 பேரிக்காய்களுடன் திரும்பினான். அதில் ஒன்றைக் கவ்விக்கொண்டு, “அப்பா நான் மாமா வீட்டுக்குப் போயிட்டு வர்ரேன்” என்று கத்திக் கொண்டே மறுபடியும் வெளியே ஓடினான். ஸ்ரீநகர் பத்மலூ பகுதியில் வாழ்பவரும், பக்கத்து பேருந்து நிலையத்தில் பழ வியாபாரம் செய்பவருமான ஃபியாஸ் அகமத் ராஹ் என்ற தந்தையும் அவரது எட்டு வயது மகன் ஷமீரும் ஆகஸ்ட் 2 அன்று நண்பகலில் பேசிக்கொண்ட கடைசி சொற்கள் இவைதான். அடுத்த சில மணிகளில் அச்சிறுவன் ஷமீர் இறந்து கிடந்தான்.

புறக்கடை சந்தில் வைத்து நாலைந்து சி.ஆர்.பி.எஃப் ஜவான்கள் அவனை லத்திக் கம்புகளால் விளாசியதையும், அவன் தொண்டைக் குழியில் கம்பை வைத்து அழுத்தியதையும் பார்த்ததாக அக்கம் பக்கத்து மக்கள் ராஹிடம் தெரிவித்தனர்.”ஏழு வயது சிறுவனை, எங்கள் குல விளக்கை அவர்கள் அணைத்துவிட்டனர். அவன் தனது கையில் துப்பாக்கியை அல்ல, கல்லைக்கூட அல்ல, பேரிக்காயைத்தானே வைத்திருந்தான்” என்று கதறுகிறார் தந்தை.

சிறுவன் அடித்துக் கொல்லப்படவில்லை; அன்று அந்த பகுதியில் நடந்த ஆர்ப்பாட்டத்தின் மீது கண்ணீர்ப் புகைக் குண்டுகள் வீசப்பட்டபோது தலைதெறிக்க ஓடிய கூட்டத்தில் மாட்டி மிதிபட்டு செத்தான் என்று மறுத்துரைக்கிறது ஸ்ரீநகர் போலீசு. சட்டத்தை அமல் படுத்துவோருக்கும் மக்களுக்கும் இடையிலான பிளவு கடந்த நான்கு மாதங்களாய் படுபாதாளமாகி இருக்கும் நிலையில் போலீசின் இந்தக் கூற்றைக் கொள்வாரில்லை. ஷமீர் மரணம் தொடர்பாகப் போலீசால் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையை ஏற்க மறுக்கிறார் அவனது தந்தை.

”அன்று அப்படி எந்த ஒரு ஆர்ப்பாட்டமும் நடக்கவில்லை. என் மகனது மரணத்துக்குப் பின்னர்தான் எதிர்ப்புகள் கிளம்பின” என்று விவரிக்கும் தந்தையின் கண்ணீர் வழிந்தோடுகிறது. ”என் மகனைக் கொலை செய்த சி.ஆர்.பி.எஃப் ..காரர்களைத் தண்டிக்காமல் விடக்கூடாது” என்கிறார் ஃபயாஸ்.

ஸ்ரீநர் மற்றும் காஷ்மீரின் பிற பகுதிகளில் கல்லெறியும் மக்கள் போராட்டத்தை எதிர்கொண்ட போலீசு மற்றும் சி.ஆர்.பி.எஃப் படையினரின் தாக்குதலால் ஜூன் 11 அன்று கொல்லப்பட்ட 17 வயது பள்ளிச் சிறுவன் துஃபயில் மட்டூ தொடங்கி, ஜூன் முதல் அக்டோபர், 2010 வரையிலான மூன்று மாதங்களில் கொல்லப்பட்ட 112 பேர்களில் ஷமீரும் ஒருவன். ஒவ்வொரு சாவும் பல போராட்டங்களைக் கிளர்ந்தெழச் செய்கிறது. ஒவ்வொரு போராட்டமும் சாவு எண்ணிக்கையை உயர்த்துகிறது.

போலீசுத் தரப்பு மறுமொழி : “இந்த சாவுகளில் சில நியாயப்படுத்த முடியாத வகையில், தவறான நடவடிக்கைகளால் விளைந்ததாக இருப்பினும், பெரும்பாலான சம்பவங்களில் கிளர்ந்தெழும் கும்பலின் நோக்கம் வன்முறையாகவே இருந்தது. துப்பாக்கி சூடு நடத்துவதைத் தவிற வேறு தெரிவு இல்லை” என்கிறது போலீசு தரப்பு.

போலீஸ் தரப்பு நியாயங்கள் எதுவாயினும், போராட்டம் சற்றே ஓய்ந்திருப்பினும், இந்த மரணங்கள், “இந்தியப் படைகளுக்கும்”, புது டில்லி அரசுக்கும், மற்றும் ஒமர் அப்துல்லா தலைமையிலான மாநில அரசுக்கும் எதிராக நீறுபூத்ததொரு கோபக் கனலை விட்டுச் சென்றுள்ளன. இப் படுகொலைகளை விசாரிக்க ஜூலை இறுதி நாட்களில் இரு நபர் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இதில் வெறும் 17 சாவுகள் குறித்து மட்டுமே விசாரிக்கப்பட இருப்பது மேலும் ஒரு கசப்பான முடிவு.

நிகழ்ந்த எல்லாப் படுகொலைகள் பற்றியும் ஆய்வு செய்யப்படவேண்டும் என்பது மக்கள் கோரிக்கை. ஆனால், அதே சமயம், கடந்த கால விசாரணைக் கமிஷன்களில் தாங்கள் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில், குற்றவாளிகள், அதிலும் குறிப்பாக பாதுகாப்புப் படையினர், தண்டிக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களிடம் எள்ளளவும் இல்லை.

1990 முதல் 2006 வரையிலான காலத்தில் 458 வழக்குகளில் ஆய்வு முடிவுகள் பாதுகாப்புப் படையினர் மீது குற்றம் சுமத்தின. ஆனால் அவர்கள் மீது குற்ற வழக்குத் தொடுப்பதற்கான அனுமதி இதுநாள் வரை வழங்கப்படவில்லை என ஹிந்து நாளேட்டுக்குத் தெரிவிக்கிறார் ஜம்மு-காஷ்மீர் குடிமக்கள் கூட்டணியைத் தலைமையேற்று நடத்தும் வழக்கறிஞர் பர்வேஸ் இம்ரோஸ்.

மற்றொரு உதாரணம் : தங்கள் முன் வாக்குமூலம் அளிக்குமாறு விசாரணைக் கமிஷனில் இருந்து வந்த இரண்டு தாக்கீதுகளுக்கும் கொலையுண்ட சிறுவன் துஃபயிலினின் தந்தை அர்ஷத் மட்டூ செவிசாய்க்கவில்லை. மாறாக, தனது மகன் சாவுக்கு ஒரு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய வலியுறுத்தி அவர் சொந்த முறையில் நீதிமன்றப் போராட்டம் நடத்துகிறார்.

12-ம் வகுப்பு படிக்கும் மாணவன் வகுப்பு முடிந்து வீடு திரும்புகையில் இறக்கிறான். முதலில் அவன் தனது நண்பர்களால் கொல்லப்பட்டிருக்கலாம் என்றது போலீசு. ஆனால், தலையில் கண்ணீர்ப் புகைக் குண்டடி பட்டதால் ஏற்பட்ட மரணம் இது என்றது பிரேதப் பரிசோதனை அறிக்கை. அவன் கல்லெறியும் போராட்டத்தில் எல்லாம் கலந்து கொண்டதில்லை என்கிறார் அவனது தந்தை.

தான் பெற்ற நீதிமன்ற ஆணையைக் கொண்டு முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய போலீசை நிர்ப்பந்திக்கிறார் மட்டூ. ஆனால் அவ்வாறு பெறப்படும், நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட போலீசின் முதல் தகவல் அறிக்கையோ, இரு தரப்புத் துப்பாக்கிப் பிரயோகத்தின் இடையே நிகழ்ந்த மரணம் இது என்கிறது. மட்டூ இதை மறுக்கிறார். வழக்கு இன்னமும் சி.ஜெ.எம் கோர்ட்டில் நிலுவையில் இருக்கிறது.

வசதியான கம்பள வியாபாரியான அவர் அரசு அளித்த 5 லட்ச ரூபாய் இழப்பீட்டுத் தொகையை ஏற்கவில்லை. அக்கம்பக்கத்து வீட்டுச் சுவர்களில் எல்லாம் “இந்தியாவே வெளியேறு” என்ற முழக்கங்கள் கிறுக்கப்பட்டிருக்கின்றன. ”என் மகன் சிந்திய குருதியை விலைபேசவா நான் இருக்கிறேன். என் மகனைக் கொன்றவர்களைத் தண்டிக்க இந்த அரசு உடனடியாக முனைந்திருக்குமானால் ஏனைய 111 பேர் தம் உயிரை இழக்கும்படி நேர்ந்திருக்காது” என்கிறார் மட்டூ. ”இந்தியா என்னை ஏமாற்றிவிட்டது. செய்தி ஊடகங்கள் உள்ளிட்ட இந்திய ஜனநாயகத்தின் பல அம்சங்களை நான் மதித்து வந்தேன்… ஆனால், இனி என்றும் அதற்கு இடமில்லை” என்கிறார் அவர்.

இந்த மனநிலைதான் பரந்த அளவில் அங்கு காணப்படுகிறது. “உ.பி. போலீசு துப்பாக்கி சூட்டில் இரு விவசாயிகள் இறந்ததற்குப் பாராளுமன்றத்தில் கூப்பாடு போட்டார்களே; காஷ்மீரில் 112 பேர் செத்ததற்கு மட்டும் எதையும் காணோமே, ஏன்?” என்று கேட்கிறார்கள் மக்கள். ஊழல் விவகாரத்தால் மகாராட்டிர முதல்வர் இராஜினாமா செய்கிறார்; ஊடகங்களின் கூச்சலால் ரத்தோரி சிறைக்கு அனுப்ப்ப்படுகிறார்; ஆனால், இங்கே காஷ்மீரில் ஏராளமான படுகொலைகள் நிகழ்ந்த பின்னும் இதுபற்றி ஒரு சலசலப்பு கூட இல்லையே ஏன் என்கிறார்கள் அவர்கள்.

“இந்தியாவின் பிற பகுதிகளில், நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையிலும் கூட, மக்கள் சமூகம் தனது அக்கறையை வெளிப்படுத்திய விதம் காரணமாக இந்த அரசு தன் இஷ்டம்போல் செயல்பட முடியாது என்பதை உணர்ந்திருக்கிறது. ஆனால், காஷ்மீரில் இந்தப் பாதுகாப்புப் படை சட்ட ரீதியான பாதுகாப்பை மட்டுமல்ல, இந்திய மக்கள் சமூகம் மற்றும் ஊடகத் துறையின் அரசியல் மற்றும் தார்மீக பலத்தையும் பெற்றுத்தான் எங்கள் மீது பாய்கிறது” என்கிறார் வழக்கறிஞர் இம்ரோஸ்.

காஷ்மீரின் அரசியல் பிரச்சினைகள் சிக்கலானவை; உணர்ச்சிபூர்வமான பலவற்றை உள்ளடக்கியதாக, ஓருநாளில் தீர்வுகாண இயலாததாக இருக்கிறது என்பதை எல்லாம் புரிந்துகொள்ள முடிகிறது; ஆயினும், அதே வேளையில் இந்த அரசு குறைந்த பட்சம் மனித உரிமை விசயங்களையாவது உடனடியாகத் தீர்க்க வேண்டும் என்கிறார் இந்த வழக்கறிஞர். “நீங்கள் இதைக்கூட செய்யவில்லை என்றால், இந்திய ஜனநாயகம் தன் மூஞ்சியில் தானே கரி பூசிக்கொள்கிறது என்பதைத் தவிர வேறென்ன” என்கிறார் அவர்.

தெருநாய்களைக் கொல்வது தடை செய்யப்பட்டிருப்பதையும், ஒரு கரடியைக் கொன்ற குற்றத்துக்காக 2007-ம் ஆண்டுமுதல் சிறையில் கிடக்கும் இரண்டு காஷ்மீரிகளையும் குறிப்பிட்டு, ”இந்தியாவில் காஷ்மீரிகளைவிட விலங்குகளுக்குக் கூடுதல் நியாயம் கிடைக்கிறது” என்று ஷமீரின் நினைவில் கண்ணீர் வடித்தபடி அவனது தந்தை கூறுகிறார்.

’நியாயம் இல்லை’ ”இந்தியா ஒரு ஜனநாயக நாடாக இருக்கலாம். ஆனால், காஷ்மீர் விசயத்தில் அது ஜனநாயக விழுமியங்கள் அனைத்தையும் மறந்துவிடுகிறது. இந்திய அரசியல் அமைப்பில் காஷ்மீரிகளுக்கு நீதி இல்லை” என்கிறார் குலாம் நபி ஹகிம். போலீசு மற்றும் சி.ஆர்.பி.எஃப் துப்பாக்கி சூட்டில் ஒரு சிறுவன் கொல்லப்பட்டதைக் கண்டித்து நடந்த ஆர்ப்பாட்ட்த்தில் கலந்துகொண்டு குண்டடிபட்டு இறந்த சுகில் அகமத் தார் என்ற 15 வயது சிறுவனின் இறுதி ஊர்வலத்தில் கலந்துகொண்டு துப்பாக்கி சூட்டுக்கு பலியான ஃபிதா நபி என்ற 19 வயது சிறுவனின் தந்தை இவர்.

நுரையீரல் சிதைந்து சின்னாபின்னமானதால் மரணத்தைத் தழுவினான் உமர் கயாம் என்ற 17 வயது சிறுவன். “ஆகஸ்ட், 22 அன்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு போலீசு நடத்திய தாக்குதலுக்கு ஆளாகி அவன் இறந்தான். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய நாங்கள் விடுத்த வேண்டுகோள்கள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டன. இறந்தோர் பற்றிய அதிகாரபூர்வப் பட்டியலில் அவனது பெயர் சேர்க்கப்படவில்லை” என்கின்றனர் அவனது குடும்பத்தார்.

“காஷ்மீர் இந்தியாவின் பிரிக்கவொண்ணா அங்கமாக இருப்பது உண்மையானால், இந்தியா எங்களுக்காக ஏன் வருந்தவில்லை? உடலின் ஒரு உறுப்பு காயமுறுமானால் பிற உறுப்புகள் அதன் வலியை உணரவேண்டும். தயவுசெய்து எங்கள் வலியை உணருங்கள்” என்கிறார் அச் சிறுவனின் தந்தை அப்துல் கயாம்.

நன்றி: ஹிந்து நாளிதழில் வந்த செய்தி தமிழ் வினவு.

2 comments:

தமிழ்க்காதலன் said...

உங்களின் எழுத்துக்கள் உண்மையாய் இருக்கும் பட்சத்தில் இந்த கொடுமைகளுக்காக.... இந்தியன் என்கிற முறையில் என் முதல் வருத்தத்தை தெரிவிக்கிறேன். முதல் மன்னிப்பையும் பதிவு செய்கிறேன். உங்களின் எழுத்தில் இருக்கும் ஆதங்கம் புரிகிறது. ஆனால் ஒரு ஊடகம் கூடவா இந்த விசயங்களை கவனிக்கவில்லை. ஒரு தேசத்தின் அவலம் நிச்சயமாய் கலையப் பட வேண்டும்.
இந்த தேசம் சட்டென்று எதற்கும் முடிவு காண முடியா சிக்கலான சட்டத்தை கையில் வைத்துக் கொண்டு தத்தளிக்கிறது. மதத்துக்கொரு சட்டம்., மாநில சிறப்பு சட்டம்..., பழங்குடி சட்டம்.., ஆதிதிராவிடர் சட்டம்... இப்படி சட்டம் நீள்கிறது. ஆனால் இன்னமும் மனித உரிமைகளைக் கூட காக்க முடியாத நிலையில் நம்முடைய சட்டம் இருக்குமானால்... அதைப் பற்றி தார்மீகப் பொறுப்பெடுத்து... இந்திய அரசாங்கம் யோசிக்க வேண்டும்.
நம்முடைய மக்களிடம் எதிர்ப்பை சம்பாதித்து விட்டு.... நிச்சயமாய்... காஷ்மீரை நம்மால் காப்பாற்ற முடியாது. நம் மக்களின் உணர்வுகள் புரிய வேண்டும். புரியப் பட வேண்டும். இந்த அரசியல் குளிர்காயலை விட்டுவிட்டு நிரந்தர தீர்வுக்கு வழி தேட வேண்டும். காலத்துக்கும் நம்முடைய பிரச்சனைகளை நாம் அடுத்த தலைமுறைக்கும் விட்டு செல்வோமானால் நாம் வாழ்ந்ததில் அர்த்தமில்லை. நம்மை மனிதன் என்றோ, இந்தியன் என்றோ சொல்லிக் கொள்ள தகுதி இல்லை என்பதை வெளிப்படையாய் ஒத்துக் கொள்வதை தவிர நமக்கு வேறு வழி இல்லை.
நம்முடைய காவல்துறையும், இராணுவமும் நம் மக்களின் துயர் துடைக்கும் அரும் பணியை செய்துக் கொண்டிருக்கின்றன. இது தவறாக எங்கேனும் தம் கடமை மறந்து, வரம்பு மீறி இருக்குமானால்... இனி திருத்திக் கொள்ள வேண்டும்.
தேசத்தை புண்ணாக்க அல்ல இராணுவம்.

PUTHIYATHENRAL said...

thank you for you good comment.