Nov 23, 2010

வரி மோசடிகளினால் 462 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இந்தியா இழந்துள்ளது

வரி மோசடி நடவடிக்கைகளினால் 462 பில்லியன் அமெரிக்க டொலர் வருமானத்தை இந்தியா இழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சுதந்திரத்திற்கு பின்னர் இந்திய நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் உரிய முறையில் வரியைச் செலுத்தாத காரணத்தினால் இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது.

அநேகமான நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட நபர்கள் சொத்துக்களை வெளிநாடுகளில் சட்டவிரோதமான முறையில் முதலீடு மற்றும் வைப்புச் செய்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

வரி ஏய்ப்பு, குற்றச் செயல்கள் மற்றும் மோசடி ஆகிய காரணங்களினால் இந்திய மக்களிடையே வருமான ஏற்றத் தாழ்வு காணப்படுவதாக ஆய்வுத் தகவலொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

1991ம் ஆண்டு பொருளாதார மறுசீமைப்பு கொள்கையின் பின்னர் மோசடி மற்றும் வரி ஏய்ப்பு நடவடிக்கைகள் உயர்வடைந்துள்ளதாக அமெரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கி வரும் க்ளோபல் பினான்சியல் இன்டகிரிட்டி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஆட்சி நடத்திய அரசாங்கங்களும், அரசியல்வாதிகளும் ஊழல் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1947ம் ஆண்டின் பின்னர் ஆட்சி நடத்திய அநேக அரசாங்கங்களின் நிர்வாக சீர்கேடுகளினால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் குறிப்பிடப்பட்டுள்ளது.

கறுப்புப் பணத்தின் பயன்பாடு அதிகமாகக் காணப்படுவதாகவும் இதனால், இந்தியா இழந்த வருமானத்தின் அளவு மேலும் உயர்வடையக் கூடுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தமிழன்

No comments: