Sep 6, 2010

இலங்கையுடனான ராணுவ உறவை சீனா வலுப்படுத்திவருவதால் இந்திய இராணுவத்தளபதி இலங்கை பயணம்.


இலங்கையுடனான ராணுவ உறவை சீனா வலுப்படுத்தி வருவதோடு, இந்தியப் படைகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர்க் கப்பல்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்க மையங்களையும் அமைக்க முயன்று வருகிறது. இதையடுத்து இலங்கைக்கு சீனாவை விட அதிகளவில் ராணுவ உதவிகள் செய்ய வேண்டிய நிலைக்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

ராணுவத் தளபதி வி.கே.சிங் 5 நாள் பயணமாக நேற்று இலங்கை சென்றார்.இந்திய இலங்கை இடையிலான ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பான பேச்சு வார்த்தைகளைத் துவக்க அவர் கொழும்பு சென்றுள்ளார்.தனது மனைவியுடன் சென்ற சிங்கை கொழும்பு விமான நிலையத்தில், இலங்கை ராணுவ தளபதி ஜகத் ஜெயசூர்யா வரவேற்றார்.

வி.கே.சிங்குக்கு இன்று ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்படுகிறது. அதன்பிறகு அவர் ஜகத் ஜெயசூர்யா மற்றும் இலங்கை ராணுவ உயரதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். வி.கே.சிங், கடந்த 1987ம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதி காக்கும் படை நடத்திய `ஆபரேஷன் பவன்' போரில் பங்கேற்றவர் ஆவார். அதற்காக, `யுத் சேனா' என்ற விருதும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments: