Jul 24, 2010

சீனாவின் ராணுவ விரிவாக்கத்தால் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: அமெரிக்க செனட்டர்கள் கவலை.

வாஷிங்டன், ஜூலை 24: சீன ராணுவம் பலப்படுத்தப்படுவது தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமது நாட்டு பாதுகாப்புத் துறையை அமெரிக்க எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சியின் செனட்டர்கள் வலியுறுத்தியுள்ளனர்.சீனா தமது ராணுவத்தை பலப்படுத்திவருவது தொடர்பாக அதிருப்தி தெரிவித்துள்ள குடியரசுக் கட்சி உறுப்பினர்களான ஜான் கோர்னின், ஜான் மெகைன், ஜேம்ஸ் ரிச், ராபர்ட்ஸ், ஜேம்ஸ் இன்ஹோப் ஆகியோர், தமது கோரிக்கையை வலியுறுத்தி பாதுகாப்புத் துறைக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளனர்.

அந்தக் கடிதத்தில் கூறியிருப்பது: சீனா தமது ராணுவத்தை பலப்படுத்தி வருகிறது. நவீன ஏவுகணைகளை தயாரித்தல், ஏவுகணை தயாரிக்கும் புதிய தொழிற்சாலைகளை அமைத்தல், அதிநவீன நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தலில் முனைப்பு காட்டி வருகிறது.அந்நாடு வடிவமைக்கும் நவீன ஏவுகணைகளை அவ்வப்போது சோதித்தும் வருகிறது. தமது ராணுவத்தில் ஏவுகணைப் பிரிவை வலிமையானதாக மாற்றுவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறது. இதற்காக ஒவ்வொரு ஆண்டும் பட்ஜெட்டில் கணிசமான தொகையை ஒதுக்கீடு செய்கிறது.

சீனாவின் இத்தகைய நடவடிக்கையால் அமெரிக்க பாதுகாப்புக்கான அச்சுறுத்தல் அதிகரித்து வருகிறது என்பதில் ஐயமில்லை. ஆனால் அமெரிக்க பாதுகாப்புத் துறை இது பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை.அமெரிக்காவின் 2000-ம் ஆண்டு தேசிய பாதுகாப்பு சட்டப்படி, சீனாவின் ராணுவ செயல்பாடு குறித்து கண்காணித்து நாடாளுமன்றத்தில் பாதுகாப்புத் துறை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால் பாதுகாப்புத் துறை சமீபகாலமாக இந்த பொறுப்பை மறந்து செயல்படுகிறது.

சீனாவின் ராணுவ நடவடிக்கை தொடர்பாக கடந்த சில மாதங்களாக நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்படவில்லை. இது ஏன்? இதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும். அத்துடன், நிலுவையில் உள்ள அறிக்கைகளை உடனடியாக தாக்கல் செய்ய வேண்டும் என்று குடியரசுக் கட்சி செனட்டர்கள் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

No comments: