Jul 25, 2010
ஷொராஹ்ப்தீன் போலி என்கெளண்டர் குற்றவாளி அமீத் ஷா கைது.
அகமதாபாத்,ஜூலை25:தலைமறைவாக இருந்து வந்த குஜராத் முன்னாள் அமைச்சர் அமீத் ஷா இன்று செய்தியாளர்களுக்கு நேரில் பேட்டி அளித்தார். பின்னர் சிபிஐ விசாரணைக்கு ஆஜரான அவரை வாசலிலேயே நிறுத்திய சிபிஐ அதிகாரிகள் அங்கு வைத்து கைது செய்தனர்.
ஷொராஹ்ப்தீன் ஷேக், அவரது மனைவி கெளசர் பீவி ஆகியோர் போலியான முறையில் என்கவுன்டரில் கொல்லப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார் அமீத் ஷா. இதையடுத்து அவர் தலைமறைவானார்.
நேரில் விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ உத்தரவிட்டும் அவர் வரவில்லை. இந்த நிலையில் பாஜக மேலிட உத்தரவைத் தொடர்ந்து அவர் ராஜினாமா செய்தார்.இந்தச் சூழ்நிலையில் இன்று திடீரென நேரில் தோன்றினார் ஷா. அகமதாபாத்தில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "என் மீதான அனைத்துப் புகார்களும் பொய்யானவை, புணையப்பட்டவை. அனைத்தையும் நான் அம்பலப்படுத்துவேன்.
நேற்றுதான் எனக்கு சிபிஐ சம்மன்வந்து சேர்ந்தது. அதற்கு உரிய பதிலை அளிப்பேன். என்னிடம் சிபிஐ நடத்தும் விசாரணை வீடியோவில் படமாக்கப்பட வேண்டும். அதை கோர்ட்டில் சமர்ப்பிக்க வேண்டும். இந்த செய்தியாளர் சந்திப்பு முடிந்த பிறகு நான் சிபிஐ அலுவலகத்திற்குச் செல்கிறேன். என்னை அவர்கள் கைது செய்தால் சட்டப்பூர்வமாக அதை எதிர்கொள்வேன்.
சிபிஐ தனது அரசியல் சுய லாபத்திற்காக காங்கிரஸ் பயன்படுத்தி வருகிறது. சட்டத்தின் எந்த நடவடிக்கையைக் கண்டும் நான் பயப்படவில்லை. கோர்ட்டில் அதை சந்திப்பேன். எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்லது. நாட்டில் 1700 என்கவுன்டர்கள் நடந்துள்ளன. ஆனால் குஜராத்தில் நடந்ததை பற்றி மட்டுமே சிபிஐ அக்கறை கொள்கிறது. ஏன் இந்த பாரபட்சம்.
கடந்த 20 வருடங்களாக காங்கிரஸ் ஒருதேர்தலில் கூட குஜராத்தில் வெற்றி பெற முடியவில்லை.அவர்களுக்கு இனியும் அங்கு வெற்றி கிடைக்கும் வாய்ப்பு இல்லை. இதனால்தான் சிபிஐ மூலம் பாஜகவை பழிவாங்கப் பார்க்கிறது காங்கிரஸ்" என்றார் அமீத் ஷா.
இதையடுத்து பிற்பகல் 2 மணியளவில் சிபிஐ அலுவலகத்திற்குச் சென்றார் ஷா. அவரை உள்ளேயே நுழைய விடாமல் வாசலிலேயே தடுத்து நிறுத்திய அதிகாரிகள், 'உங்களைக் கைது செய்கிறோம்' என்று கூறி கைது செய்தனர். பின்னர் உடனடியாக அவரை சிபிஐ கோர்ட் நீதிபதி தவே வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை விசாரித்த நீதிபதி, 14 நாள் சிறைக் காவலில் அனுப்பி உத்தரவிட்டார்.
விரைவில் ஷாவை தங்களது காவலில் எடுத்து தீவிரமாக விசாரிக்கவுள்ளது சிபிஐ. ஷொராஹ்ப்தீன் மற்றும் அவரது மனைவி கெளசர் பீபியைக் கொன்றது தொடர்பான சதித் திட்டம், அவர்களைக் கொன்ற சதியில் ஷாவுக்கு உள்ள தொடர்பு, கொலை செய்ய உத்தரவிட்டது யார், கொன்று எப்படி என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை ஷாவிடம் கேட்கவுள்ளது சிபிஐ. சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும் அமீத் ஷாவை, தமிழ்நாட்டைச் சேர்ந்தவரான சிபிஐ ஐஜி கந்தசாமி தலைமையிலான குழுவினர் விசாரிக்கவுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment