நெல்லையில் சமூக விரோதிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட போலீஸை கண்டித்து பாளை.யில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொண்ட 227 பேர் கைது செய்யப்பட்டனர்.
நெல்லை ஜங்ஷனில் சர்ச்சைக்குரிய புரோட்டா கடையில் பிரச்சனை ஏற்படுத்தியவர்களையும், அவரது ஆதரவாளர்களை கைது செய்ய வேண்டும். தடியடி நடத்திய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கையை வலியுறுத்தி பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் பாளை.மார்க்கெட் திடலில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்கு போலீசார் தடை விதித்தனர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டதால் பாளை. மார்க்கெட் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.இதையடுத்து நேற்று மாலை பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் பாளை.நகர தலைவர் ஷேக் முகமது தலைமையில் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு சமூக விரோதிகளை கைது செய்ய வலியுறுத்தியும், அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நகர தலைவர் ஷேக் முகமது உட்பட பாப்புலர் ஃபரண்ட் ஆஃப் இந்தியா இயக்கத்தை சேர்ந்த 227 பேரை போலீசார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், பாதிக்கப்பட்ட அப்துல் ஹமீதுவின் புரோட்டா கடை உரிமையை பெற்றுத்தந்த அதிகாரிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
ஆர்.டி.ஓ. உத்தரவு
இந்நிலையில் ஆர்.டி.ஓ தமிழ்செல்வி சம்பவம் குறித்து விசாரணை நடத்தினர். இதில் இரு தரப்பு ஆவணங்களையும் ஆய்வு செய்ததில், அப்துல் ஹமீதுவின் தாய், ஜெயினம்பு பீவியின் பெயரில் பல ஆண்டுகளாக கடை நடத்தியது தெரியவந்தது. இதனால் அப்துல் ஹமீது நடத்திவந்த கடையை தொடர்ந்து நடத்திக் கொள்ளலாம் என ஆர்.டி.ஓ. தமிழ்செல்வி உத்தரவிட்டார்.மேலும் இது தொடர்பாக கோர்ட்டில் நடந்துவரும் தீர்ப்பின் அடிப்படையில் இருவரும் நடந்துகொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
இதையடுத்து புரோட்டா கடையை அப்துல் ஹமீது சகோதரர் பீர்முகைதீன் நேற்று திறந்தார். அந்த கடையை ஆர்.டி.ஓ. தமிழ்செல்வி, தாசில்தார் சுப்பையா, போலீஸ் துணைக் கமிஷனர் அவினாஷ்குமார், உதவிக்கமிஷனர் ராமமூர்த்தி பார்வையிட்டனர்.இந்த சம்பவம் அறிந்த மற்றொரு தரப்பினர் சார்பில் வக்கீல்கள் பிரபாகரன், முத்துப்பாண்டியன் அங்கு வந்தனர். கோர்ட்டில் வழக்கு நடைபெறும் போது கடையை திறக்க எப்படி அனுமதி வழங்கலாம் என போலீசாரிடம் கேட்டனர். அதற்கு போலீசார், ஆர்.டி.ஓ. உத்தரவின் பேரில் கடை திறக்கப்பட்டதாக கூறினர். இந்த சம்பவத்தில் நெல்லை ஜங்ஷன் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. அந்த புரோட்டா கடை முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment