Feb 28, 2010

மத்திய பட்ஜெட்:ஏமாற்றம் அளிக்கிறது: சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா.

மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு எரிபொருள் விலையை அதிகரித்ததை மறு ஆய்வு செய்ய வேண்டுமென்றும் ஏற்கனவே சுட்டெரிக்கும் பொருள்களின் விலைவாசி உயர்வால் தகர்ந்திருக்கும் சாதாரண மனிதர்களை மேலும் இன்னலுக்கு ஆளாக்காமல் காப்பாற்றவேண்டும் என்றும் சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.

மத்திய பட்ஜெட் தொடர்பாக அறிக்கை வெளியிட்ட சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் பொதுச் செயலாளர் ஏ.சயீத் கூறியிருப்பதாவது: "மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது. எரிபொருள் விலையை அதிகரித்ததால் அத்தியாவசியப் பொருட்களின் விலை மேலும் உயரும். சாதாரண இந்தியக் குடிமகன்கள் ராக்கெட் வேகத்தில் ஏறும் விலைவாசியினால் சுருண்டுபோய் உள்ளனர். அத்தியாவசியப் பொருள் வாங்குவதற்கு தடை ஏற்படுமாயின் அன்றாட வாழ்க்கைக்கே திண்டாடும் நிலைமை உருவாகும். பெட்ரோல் விலையை அதிகரிப்பது ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தொடர் வழக்கமாகிவிட்டது ஆனால் அதிகரித்துவரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசியை குறைக்க எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இந்த பட்ஜெட் மக்கள் விரோத பட்ஜெட், ஏழைகளுக்கு எதிரான பட்ஜெட்.

மஹராஷ்ட்ரா மாநிலத்தில் விதர்பா பகுதியில் வறுமையால் வாடும் 50 லட்சம் விவசாயிகளை மேலும் கீழ்நிலைக்கு கொண்டு செல்லும் என சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கவலைக் கொள்கிறது. அப்பகுதி விவசாயிகள் நிதியமைச்சரிடம் அதிக நிதி ஒதுக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர். மேலும் பரவலாகியிருக்கும் ஊழலை கட்டுப்படுத்தவும், நிலவுடைமை பிரச்சனையை சீராக்கவும் கோரியிருந்தனர், ஆனால் இக்கோரிக்கைகள் முற்றிலும் பொருட்படுத்தப்படவில்லை.இந்த பட்ஜெட்டில் நிலவுடைமை பிரச்சனைப் பற்றியோ, உணவு பாதுகாப்பு பற்றியோ எந்தவொரு திட்டமும் இல்லை.
விதர்பா பகுதியில் செத்துக்கொண்டிருக்கும் இறந்துபோன விவசாயிகளின் விதவைகளுக்கு எந்தவொரு நிவாரணத் தொகையும் ஒதுக்கப்படவில்லை. ஆகவே இந்த பட்ஜெட் விவசாயிகள் விரோத பட்ஜெட்டாகும். இந்தநிலையில் எஸ்.டி.பி.ஐ சிறுபான்மையினர் நலநிதியை 50 சதவீதம் உயர்த்தியதற்கு மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது" இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments: