Feb 12, 2010

இலங்கை கடைசிகட்ட போரின் உண்மைகள்: ஐ.நா. செய்தித் தொடர்பாளர் பரபரப்புத் தகவல்.


சிட்னி: ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில் கிட்டத்தட்ட 40,000 தமிழர்கள் வரை படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று முன்னாள் ஐ.நா. செய்தித் தொடர்பாளர் கார்டன் வெய்ஸ் பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். இலங்கை அரசு மீது சர்வதேச போர்க் குற்றங்களுக்கான நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் ஏபிசி நியூஸ் சேனலுக்கு வெய்ஸ் அளித்துள்ள பேட்டியில், ஈழப் போர் குறித்து இலங்கை அரசு தொடர்ந்து பொய்களையேக் கூறி வருகிறது அல்லது உள்நோக்கத்துடன் பலவற்றை மறைத்து வருகிறது.தப்பி ஓடும் மக்களை விடுதலைப் புலிகள்தான் கொன்றனர் என்று இலங்கை அரசு கூறியது முழுக்க முழுக்கப் பொய்யாகும்.

கடைசிக் கட்டப் போரின்போது குறைந்தது 10 ஆயிரம் முதல் அதிகபட்சம் 40 ஆயிரம் பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம். போரின் கடைசிக் கட்டத்தில் நியூயார்க் சென்டிரல் பார்க் அளவிலான இடத்துக்குள் கிட்டத்தட்ட 3 லட்சம் பேர் முடக்கப்பட்டிருந்தனர். அவர்களில் விடுதலைப் புலிகளும் அடக்கம்.

அனைத்து விதமான ஆயுதங்களும் அவர்களுக்கு வெகு அருகிலிருந்தன. விடுதலைப் புலிகளை ஒடுக்க இலங்கை ராணுவத்தினர் பல வகையான அபாயகரமா ஆயுதங்களைப் பயன்படுத்தினர் என்பது அனைவரும் அறிந்ததுதான். எனவே கடைசிக் கட்டத் தாக்குதலின் போது அங்கு மிகப் பெரிய மனிதப் பேரழிவு நடந்துள்ளது.

மிக மிக நம்பகத்தன்மை வாய்ந்த இடத்திலிருந்து எனக்கு இதுதொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழ் மக்களோ அல்லது விடுதலைப் புலிகளோ இதை எனக்குக் கொடுக்கவில்லை. மாறாக போர் நடந்த பகுதியில் இருந்தவர்கள் மூலம் எனக்குக் கிடைத்தத் தகவல் இது.

எனவே போரின் இறுதிக் கட்ட பலி எண்ணிக்கை குறித்தும், அதற்கு முன்பு நடந்த உயிரிழப்புகள் குறித்தும் இலங்கை அரசு கூறியதும், கூறிக் கொண்டிருந்ததும் நிச்சயம் பொய்யாகும். போர் முடிவடைந்ததும், அப்பாவி மக்களின் உயிர்ப்பலி குறித்து அரசுத் தரப்பில் வேண்டுமென்றே குறைத்து கூறப்பட்டதாக ஒரு மூத்த அரசு அதிகாரி பகிரங்கமாக ஒப்புக் கொண்டதை இங்கு நினைத்துப் பார்க்க வேண்டும் என்றார் வெய்ஸ்.

No comments: