Nov 7, 2009

வந்தேமாதரத்தை முஸ்லிம்கள் மீது திணிக்கக்கூடாது:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா


பெங்களூர்:வந்தே மாதரம் பாடுவது தொடர்பாக ஜம்மியத்துல் உலமா ஹிந்த் தீர்மானம் நிறைவேற்றியதைத்தொடர்ந்து முஸ்லிம்களின் நாட்டுப்பற்றை பற்றிய கேள்வியை எழுப்பி சங்கபரிவார பாசிஸ்டுகள் நடத்தும் கீழ்தரமான முயற்சிகளுக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
உள்கட்சி பூசலால் பிரச்சனைகளில் சிக்கித்தவிக்கும் பா.ஜ.க அரசியல் காரணங்களுக்காக இப்பிரச்சனையை பயன்படுத்துகிறது. சொந்த நம்பிக்கையை உயர்வாக கருதுவதற்கான உரிமை எல்லா சமூகங்களுக்கும் உண்டு. தங்களது நம்பிக்கைக்கு எதிரான‌ வழிப்பாடுகளை ஒரு சமூகத்தின் மீது திணிப்பது மத சுதந்திரம், நம்பிக்கை சுதந்திரம் ஆகியவற்றிற்கு எதிரானது.
தாய்நாட்டை வழிப்பாட்டுகுரியதாக கருதமுடியாது என்று கூறுவதால் முஸ்லிம்களின் தேசப்பற்றை குறித்து வினாவெழுப்புவது தேசப்பற்றையே கேள்விக்குறியாக்குவதற்கு சமம். தாய் நாட்டின் விடுதலைக்கான சுதந்திரப்போராட்டத்தில் பங்குபெறாமால் ஒதுங்கியிருந்த ஆர்.எஸ்.எஸ் போன்ற இயக்கங்கள்தான் இப்பொழுது முஸ்லிம்களின் தேசப்பற்றைக்குறித்து வினா எழுப்புகின்றனர். எந்தவொரு மதத்தைச்சார்ந்தவர்களும் அவர்களுடைய மதச்சட்டத்திட்டங்களின் படி வாழ்வதற்கு இந்திய அரசியல் சட்டம் அனுமதியளித்துள்ளது. பரஸ்பர மத உணர்வுகளை மதித்து நடப்பது பன்முக சமூகத்தின் கடமையாகும். ஓரிறைவனை வணங்கும் முஸ்லிம்களின் உரிமைக்கெதிராக காழ்ப்புணர்வை பிரச்சாரம் செய்து நாட்டை துண்டாட நினைக்கும் சக்திகள் நாட்டின் ஒருமைப்பாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக விளங்குகின்றனர்.
ஜம்மியத்துல் உலமாவின் மாநாட்டில் பங்கேற்ற மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்திற்கெதிரான விமர்சனங்களை கண்டித்த பாப்புலர் ஃப்ரண்ட் அதேவேளையில் தலை தப்புவதற்காக மாநாட்டில் பங்கேற்றதற்கு மன்னிப்பு கேட்ட மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் செயல் வகுப்புவாத சக்திகளுக்கு ஊக்கமூட்டுவதாகும் என்று தனது அறிக்கையில் கூறியுள்ளது.
மத நம்பிக்கைக்கு எதிரானது என்ற காரணத்தால் ஒரு பாடலை பாடுவதிலிருந்து விலகி நிற்கும் முஸ்லிம்களுக்கு அரசியல் கட்சிகள் உள்ளிட்ட மத சார்பற்ற அமைப்புகள் உறுதுணையாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நம்பிக்கை தெரிவித்துள்ளது.

நன்றி :தேஜஸ் மலையாள தினசரி

No comments: