Nov 15, 2009

உலக பொருளாதாரத்தில் அமெரிக்க டாலரின் வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது.


அமெரிக்க டாலருக்கு வரலாறு காணாத நெருக்கடி ஏற்பட்டிருக்கிறது. இனி உலகிலேயே முன்னணி கரன்சி என்ற அதீத கவுரவம் இனி தொடருமா என்று அலசப்படும் அளவிற்கு, நிலைமை கீழிறங்கி வருகிறது. உலகப் பொருளாதாரத்திற்கு தரப்படும் ஊக்குவிப்புகளால், அடுத் தடுத்து ஓரளவு நிலைமை சீராகும் என்ற கருத்து பேசப்பட்டாலும், அது அமெரிக்க கரன்சியான டாலரின் ஸ்திரத்தன்மைக்கு வலு சேர்க்கவில்லை.

பல்வேறு நாடுகளின் கரன்சிகளுடன் ஒப்பிடும் போது, அமெரிக்க டாலர் மதிப்பு சரிவு, கடந்த பதினைந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு ஏற்பட்டிருக்கிறது.சீனாவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா விஜயம் மேற்கொள்ளும் போது, அந்த நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள பரிவர்த்தனையில் அமெரிக்க டாலர் வீழ்ச்சி அடையாமல், ஏற்பாடுகள் செய்வார் என்ற பேச்சு இருக்கிறது.

கடந்த சில வாரங்களில் ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் கரன்சிகள் அன்னியச் செலாவணி வர்த்தகத்தில் மதிப்பு கூடி நிற்கின்றன. இதில், மற்றொரு கரன்சியான யூரோ அதிக நம்பிக்கை தரும் கரன்சியாக பிரிட்டன் ஸ்டெர்லிங் பவுண்டை விட முந்தி நிற்கிறது. அமெரிக்க டாலர் மதிப்பில் மட்டும் உள்ள பொருட்கள் மவுசு குறைந்து வருகிறது.

ஐரோப்பாவில் எந்த ரசீதும் இல்லாமல் தங்கக் கட்டிகளை வாங்கி சேமிப்பாக வைக்கின்றனர். இதுவரை இல்லாத வகையில், வெள்ளிக்கும் கிராக்கி ஏற்பட்டிருக்கிறது. நூறு கிராம் எடையுள்ள தங்கக்கட்டி உள்ளங்கையில் அடங்கிவிடும், அதன்விலை 3,500 டாலர், அதாவது அதன் மதிப்பு 1.60 லட்சம் ரூபாய். உலக கோல்டு கவுன்சில் தகவலின்படி, இந்த ஆண்டில் இதுவரை 20 சதவீதம் தங்கம் விற்பனை அதிகரித்திருக்கிறது.

இந்தியாவில் ரிசர்வ் வங்கியும், கையிருப்பில் உள்ள டாலரைக் கொண்டு 200 டன் தங்கத்தை சர்வதேச நிதி நிறுவனமான ஐ.எம்.எப்.,மிடம் இருந்து வாங்கியிருக்கிறது.இப்படி இருக்க கச்சா எண்ணெய் உற்பத்தி நாடுகள்(ஒபெக்) கூட்டத்தில் ஈரான் மற்றும் வெனிசூயலா ஆகிய இரு நாடுகளும், கடந்த இரு ஆண்டுகளாகவே கேள்வி எழுப்புகின்றன.கச்சா எண்ணெயை விற்று டாலராகப் பெற்று, அதை வைத்து நமக்குத் தேவையான பொருட்கள் வாங்கும் போது டாலர் வீழ்ச்சியால் அப்பொருட்கள் கூடுதல் விலை மதிப்பு பெறுகின்றன. இதைத் தடுக்க யூரோ, யென் போன்ற கரன்சிகளுக்கும் வர்த்தகம் செய்தால் என்ன என்பது இவர்கள் கேள்வி.ஆனால் ரஷ்யாவும், சீனாவும் தங்களுக்குள் நடக்கும் வர்த்தகத்தில் டாலர் தேவையின்றி, பரஸ்பரம் இருநாட்டு கரன்சிகளை பயன்படுத்திக் கொள்வது என்ற முடிவுக்கு ஏற்கனவே வந்து ஒப்பந்தமும் ஆகியிருக்கிறது. இப்பாணியில் பிரேசில், இந்தியா பேச்சு நடைபெறுகிறது.

இவைகளை எல்லாம் பார்க்கும் போது, அடுத்த சில மாதங்களில் டாலர் வீழ்ச்சியடையும் என்பது உறுதியாகிவிட்டது.

No comments: