Dec 4, 2012

தலைவர்கள் எதற்கு? மக்களை பாதுகாக்கவா? பலி கொடுக்கவா?

Dec 05: அரசியல் கட்சி மற்றும்  ஜாதி, மத அமைப்புகளின் தலைவர்கள் தங்களுக்கு  உண்டான பொறுப்புகளை உணர்ந்து பேச வேண்டும்.

இவர்கள்  தங்களை சார்ந்திருக்கும் அப்பாவி மக்களை உசுப்பு ஏற்றிவிட்டு வேடிக்கை பார்க்கக்கூடாது. நீங்கள் மேடைகளில் வெள்ளை வேஷ்டி, வெள்ளை சட்டை சகிதம், சோடாவை குடித்து அனல் பறக்க பேசிவிட்டு சென்று விடுகிறீர்கள்.

அதற்க்கு பின்னால் நடக்கும் சண்டைகளில், கலவரங்களில் கொல்லப்படுவது, காயம் அடைவது, பொருளாதார இழப்புகளை சந்திப்பது, ஜெயில் வாழ்க்கை வாழ்வது எல்லாமே உங்களை நம்பிய அப்பாவி மக்களே.

தங்களது உரிமைகளை, தங்களது பிரச்சனைகளை தீர்த்து வைப்பீர்கள் என்று நம்பித்தான் இந்த மக்கள் உங்களை தலைவர்களாக தெரிவு செய்தார்கள். நிறைய சந்தர்ப்பங்களில் நீங்களே அவர்களுக்கு பிரச்சனையாகி போகிறீர்கள். உங்களை நம்பிய மக்களுக்கு குறைந்த பட்சம் நன்மைகள் செய்யா விடிலும் தீமையாவது நிகழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

“வன்னிய இனப் பெண்களை கலப்புத் திருமணம் செய்பவர்களை வெட்டுங்கடா" வன்னியர் சங்கத் தலைவர் நான் சொல்கிறேன்” பாட்டாளி மக்கள் கட்சியின் காடுவெட்டி குரு ஆவேசமாக பேசியதால் ஒரு கலவரமே நடந்து முடிந்திருக்கிறது. இதுபோல் பொறுப்பில்லாத பேச்சுகளும், அறிக்கைகளும் ஏற்ப்படுத்தும் விளைவுகள் இரு பிரிவினருக்குள் சண்டையையும், சச்சரவுகளையும் வளர்க்குமே அன்றி வேறொன்றுமில்லை.

அதுபோல் பரமக்குடியில் தலித் மக்கள் மீது நடந்த துப்பாக்கி சூட்டை எடுத்து கொள்ளலாம். ஒரு கூட்டத்தை கூட்டினால் அங்கு வரும் மக்களை  வழிநடத்தும் பொறுப்பை தலைவர்கள் சரிவர செய்ய வேண்டும். அப்படி வழி நடத்தாத காரணத்தால் பரமக்குடி துப்பாக்கி சூடு நடந்தது. சிறிய பிரச்சனைகளையும் ஆராஜகம், அடிதடி, ஆயுத பிரோயோகம் என்று நடத்தி ஒடுக்கப்பார்க்கும் போலீஸ் பொறுக்கிகளுக்கு அது ஒரு சந்தர்ப்பமாக அமைந்தது.

தலைவர்களாக இருப்பவர்கள் சிந்திப்பார்களா? இதுபோன்ற தலைவர்களை புறக்கணிக்க மக்களும் சிந்திப்பார்களா?.

1 comment:

Anonymous said...

க க போ... கருத்துக்களை கச்ட்சிசமாக போடுகிறீர்கள்.