Jul 24, 2011

மாட்டுக்கு பதிலாக மனிதர்களை வைத்து உழவு!

JULY 25, அமராவதி:மகாராஷ்டிராவில் வறுமை மற்றும் கடன் தொல்லை காரணமாக, மாடுகளுக்குப் பதிலாக, தன் இரு மகன்களை வைத்து, நிலத்தை உழுத விவசாயி பற்றி பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள விதர்பா பகுதியில் விவசாயம் தான், முக்கியத் தொழில். போதிய மழை இல்லாததால், இந்தப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், அதிக அளவில் கடன் வாங்குகின்றனர். இவற்றை திருப்பிச் செலுத்த முடியாமல் தற்கொலை செய்து கொள்கின்றனர்.விவசாயிகளின் மேம்பாட்டுக்காக, மத்திய அரசு சார்பில் பல்வேறு நிதித் திட்டங்கள் அறிவிக்கப்பட்டாலும், அங்குள்ள விவசாயிகளின் வறுமையைப் போக்க முடியவில்லை.

இந்நிலையில், தற்போது அதிர்ச்சிகரமான ஒரு தகவல் வெளியாகி யுள்ளது.மகாராஷ்டிராவில் உள்ள அமராவதி மாவட்டத்தின் சீர்கேட் என்ற கிராமத்தில், கிஷன்ராவ் தபூர்கர் என்ற விவசாயி வசித்து வருகிறார். இவருக்கு எட்டு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, போதிய அளவில் மழை இல்லை. இதனால், கடன் வாங்கி, பிழைப்பு நடத்தினார். வறுமை வாட்டினாலும், விவசாயத்தை விட முடியவில்லை.

இந்நிலையில், சமீபத்தில் பெய்த, சிறிய அளவிலான மழை, இவருக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. உடனடியாக, நிலத்தை உழுவதற்கான முயற்சியை மேற்கொண்டார். ஆனால், உழுவதற்கு, மாடுகள் கிடைப்பது சிரமமாக இருந்தது. ஒரு ஜோடி மாடுகளை, வாடகைக்கு அமர்த்தினால், தினமும், 1,000 ரூபாய் கொடுக்க வேண்டும். இல்லையெனில், புதிதாக மாடு வாங்க வேண்டும். ஒரு ஜோடி மாடுகளின் விலை, 20 ஆயிரம் ரூபாய் என கூறுகின்றனர்.இதனால், மாடுகளுக்குப் பதிலாக, தன் இரு மகன்களை ஏரில் பூட்டி, நிலத்தை உழுதார், கிஷன் ராவ். இதுபற்றிய செய்தி, மகாராஷ் டிராவில் உள்ள உள்ளூர் பத்திரிகை ஒன்றில் வெளியானதால், அதிகாரிகள், அதிர்ச்சி அடைந்தனர்.

2 comments:

மகேந்திரன் said...

அதிர்ச்சி தகவல்

PUTHIYATHENRAL said...

உங்கள் கருத்துக்கு நன்றி மகேந்திரன் சார்! மீண்டும் வாருங்கள் கருத்து சொல்லுங்கள்! நட்புடன் ஆசிரியர்- புதியதென்றல்.