ஜூலை 23,வாஷிங்டன்: இலங்கையில் 2009ல் நிகழ்ந்த போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணையை நடத்தாவிட்டால், அந்நாட்டிற்கான நிதியுதவியை நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கான தீர்மானம், நேற்று முன்தினம் அமெரிக்க காங்கிரசில் நிறைவேறியது.
இலங்கையில் 2009ல் விடுதலைப் புலிகளுக்கும், சிங்கள ராணுவத்துக்கும் நிகழ்ந்த இறுதிக் கட்டப் போரில், மனித உரிமை மீறல்கள் நிகழ்ந்ததாகவும், போர்க் குற்றங்களில் சிங்கள ராணுவம் ஈடுபட்டதாகவும் தொடர்ந்து குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. போர்க் குற்றங்கள் தொடர்பாக, பிரிட்டனின் "சேனல் 4' செய்தி நிறுவனம் வெளியிட்ட வீடியோ காட்சிகள், இக்குற்றச்சாட்டுகளுக்கு மேலும் வலுவளித்தன.
இந்நிலையில், 2010ம் நிதியாண்டில் இலங்கைக்கு 13 மில்லியன் நிதியுதவி வழங்க அமெரிக்கா திட்டமிட்டது. அதற்குப் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில், சமீபத்தில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தமிழகம் வந்த போது, முதல்வர் ஜெயலலிதா இலங்கை விவகாரம் குறித்த, தனது கவலையைத் தெரிவித்தார். இவ்விவகாரத்தில் அமெரிக்கா உதவும் என, ஹிலாரி உறுதியளித்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம், அமெரிக்க காங்கிரஸ் கமிட்டி, மனித உரிமை மீறல் விவகாரத்தின் அடிப்படையில், இலங்கைக்கு அமெரிக்கா வழங்கும் நிதியுதவியை நிறுத்துவதாக அறிவித்தது. இதற்கான ஓட்டெடுப்பு நடந்த போது, "சேனல் 4' வெளியிட்ட வீடியோ காட்சிகள் எம்.பி.,களுக்கு போட்டுக் காட்டப்பட்டது.
இந்தத் தடையை வரவேற்றுள்ள பிரதிநிதிகள் சபையின் வெளியுறவு விவகாரக் கமிட்டி, 2009 போர் நிகழ்வுகளுக்கு இலங்கை அரசு தான் பொறுப்பு என, திட்டவட்டமாகத் தெரிவித்தது. இலங்கை மனித உரிமை மீறல் மற்றும் போர்க் குற்றங்களில் நேர்மையான விசாரணை நடத்த வேண்டும்; பத்திரிகையாளர்கள் சுதந்திரமாகச் செயல்பட அனுமதி அளிக்க வேண்டும்; காணாமல் போன பத்திரிகையாளர்கள் பற்றி தெரிவிக்க வேண்டும்.
இவற்றில் இலங்கை அரசின் நேர்மையான செயல்பாடுகளை ஒபாமா அரசு ஒப்புக் கொள்ளும்பட்சத்தில், அமெரிக்கா தனது நிதியுதவியை மீண்டும் வழங்கும். போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணையை நடத்தாவிட்டால் நிதி வழங்கப்பட மாட்டாது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment