Jul 11, 2011

பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி மரணம்!

JULY 11, ஈழத் தமிழர் சமூகத்தின் முதுபெரும் புலமையாளர் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் காலம் ஆகிவிட்ட செய்தியறிந்து நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் பெருந்துயரடைது நிற்கிறது என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் விசுவநாதன் ருத்ரகுமாரன் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் ஈழத் தமிழர் அறிவுலக சமூகத்தின் தந்தையாக விளங்கி வந்தவர். அனைத்துலகம் மதிக்கும் ஒரு அறிஞராக, ஈழத் தமிழ் மக்கள் மட்டுமல்ல, உலகத் தமிழ் மக்கள் அனைவரும் பெருமை கொள்ளக்கூடிய ஒரு அறிவுசால் ஆசானாக இனங் காணப்பட்டவர்.

70க்கும் மேற்பட்ட நூல்களையும் 200க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளையும், பலநேர்காணல்களையும் தனது அறிவியல் பங்களிப்பாக வழங்கியவர். தமிழ்மொழி, இலக்கியம், நாடகம், பண்பாட்டியல் துறைகளில் மட்டுமன்றி சமூகவியல் மற்றும் பொருளியல் தளங்களிலும் மாக்சிய சிந்தனைகளின் அடிப்படையிலும் தமது புலமையைப் பதிவு செய்தவர்.

தமிழீழ தேசிய விடுதலைப் போராட்டம் முகிழ்த்தெழுந்த காலகட்டத்தில் ஆரம்பத்தில் கருத்துத் தளத்திலும் அரசியல் தளத்திலும் தனது மாக்சிசம் சார்ந்த பின்புலத்தில் இருந்து போராட்டத்தை அணுகிய போதும் 1980களின் ஆரம்பத்தில் தமிழீழத் தேசிய விடுதலைப் போராட்டத்தின் நியாயங்களை ஏற்றுக் கொண்டு ஆதரித்து நின்றமை இதனை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி நிற்கிறது.

தாயகத்தின் நடைமுறையரசு சிங்களத்தால் சிதைக்கப்பட்டிருக்கா விட்டால் தேசியத் தலைவர் அவர்களால் மாமனிதர் விருது வழங்கி மதிப்பளிக்கப்பட்டிருக்கக் கூடியவர். வரலாற்றில் எந்தவொரு தனிமனதரது பங்கும் அவர் எதிர்காலத்துக்கு விட்டுச்செல்லும் சுவடுகளில் இருந்துதான் தீர்மானிக்கப்படுகிறது. பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் தமிழ் மக்களின் வரலாற்றில் என்றும் நீங்கா இடம் பெறுவார். இவரது மறைவு ஈழத் தமிழர் தேசத்துக்கு ஒரு தலைமைக் குடிமகனை இழந்த ஒரு சோகத்தைத் தருகிறது.

No comments: