May 16, 2011

ராஜபக்சே மீது நடவடிக்கை எடுக்க நீங்களும் எழுதுங்கள்!!

May 17, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் தொடர்பான ரோம் தீர்மானத்தினை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஏற்றுக் கொள்ளவேண்டும்.

இந்த கோரிக்கையை நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின ஐக்கிய அமெரிக்கப் பிரதி நிதிகள் இருவர் முன்வைத்துள்ளனர்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்கிய உரோமாபுரி நியதிச்சட்டத்தை ஏற்று உறுதிப்படுத்தல்

முன்வைப்பவர்: 1)சான் சுந்தரம் Shan Sundaram (New Jersey – USA)
2)ஜெயபிரகாஷ் ஜெயலிஙகம் Jeyaprakash Jeyalingam (New York - USA)

நீதி வழங்கும் வல்லமையோ நாட்டமோ தேசிய அதிகாரிகளுக்கு இல்லை என்பதால், சர்வதேசக் குற்றங்களுக்கு இரையாவோருக்கு சர்வதேச அரங்குகளில் நீதி வழங்கப்பட வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு,

அத்தகைய குற்றங்கள் புரிந்தவர்கள் தண்டனைக்கு உள்ளாகாமல் இருக்கும் நிலைமைக்கு முடிவுகட்டி, அத்தகைய குற்றங்களைத் தடுக்கும் நோக்கம் உண்டு என்பதையும்,

சர்வதேசக் குற்றங்களுக்குப் பொறுப்பானவர்களைத் தமது குற்றவியல் நியாயாதிக்கத்துக்கு உட்படுத்துவது ஒவ்வோர் அரசினதும் கடமை என்பதையும்,

இலங்கையின் வட, கீழ் மாகாணங்கள் ஈழத் தமிழர்களின் தாயகம் என்பதையும், அங்கு தற்பொழுது சிங்களப் படை நிலைகொண்டுள்ளது என்பதையும்,

இலங்கைத் தீவில் வாழும் ஈழத் தமிழர்கள் தமது அரசியல் விருப்பை சுதந்திரமாக எடுத்துரைக்க முடியாது என்பதையும்,

புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் தேர்தல் மூலம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைத்தமை, மக்களாட்சி நெறிப்படி தமது சுதந்திர விருப்பை வெளிப்படுத்தியதற்கு நிகர் என்பதையும்,

சிங்கள ஆதிக்கத்துக்கு உட்பட்ட இலங்கை அரசாங்கம் ஈழத் தமிழருக்கு நீதி வழங்கும் வல்லமையோ எண்ணமோ அற்றது என்பதையும்,

ஈழத் தமிழருக்கு நீதியை ஈட்டிக்கொடுப்பதற்குக் கிடைக்கும் அனைத்து வழிவகைகளையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பயன்படுத்தும் என்பதையும்,

இலங்கை ஆட்சியாளர், அதிகாரிகள், முகவர்கள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வதற்கு ஏதுவாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் விபரம் அனுப்ப முயலும் என்பதையும்,

இச்சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் ஐ.நா. அறிக்கைக்கு அமைய சிறிலங்கா அரசிற்கு எதிரான போர்க்குற்றம் மற்றும் மானிடத்திற்கு எதிரான குற்றங்களுக்குரிய விசாரணை மேற்கொள்ளப்படுவதற்காக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அதனை சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்குத் தொடுநருக்கு அனுப்பிவைக்க அது மேலதிக ஆதாரமாக அமையும்.

இச்சட்டமூலத்தை ஏற்று உறுதிப்படுத்தினால், சர்வதேச சமூகம் தமிழீழ அரசாண்மை பற்றிக் கலந்துரையாட அது வழிவகுக்கும் எனவும் கருதப்படுகிறது. இது தொடர்பான (http://www.icc-cpi.int) சகல விபரங்களும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கப் பிரதிநிதிகட்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினால் விவாதிக்கப்படுகின்றது.

இம் மசோதா பற்றி பொதுமக்கள் தங்களது கருத்துக்களை தமது நாட்டின் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் பிரதிநிதிகட்கு அல்லது comments@tgte.org என்னும் மின்னஞ்சல் முகவரிக்குத் தெரியப்படுத்தலாம். இம் மசோதாவானது ஜூன் மாதம் 5ம் திகதி வாக்களிப்பிற்கு விடப்படும்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் வாக்களித்து முடிவிற்கு வருமுன்னதாக பொதுமக்களாகிய நீங்கள் உங்கள் கருத்துக்களை உங்கள் பிரதிநிதிகட்குத் தெரியப்படுத்துங்கள். இவ்வாறு தெரியப்படுத்துகையில் உங்கள் பெயர், நீங்கள் வாழும் நாடு, உங்கள் பூரண முகவரி போன்றவற்றையும் உங்கள் பிரதிநிதிக்கு வழங்க வேண்டும்.

உங்கள் கருத்துக்களை மின்னஞ்சல் மூலம் தெரிவிப்பின் இவ் விபரங்களை மின்னஞ்சலில் குறிப்பிடுங்கள்

இப்படிக்கு
பொன். பாலராஜன்
அவைத்தலைவர்
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

No comments: